
இன்றைய காலகட்டத்தில் காப்பீடு என்பது விருப்பத் தேர்வாக இல்லாமல் அவசியம் என்றாகி விட்டது. ஏனெனில் இன்று மாறி வரும் உணவுப் பழக்கத்தால், வயது வித்தியாசமின்றி எண்ணற்ற நோய்கள் பலரையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவசரத் தேவையைச் சமாளிக்கும் கேடயமாக விளங்குகிறது காப்பீடுகள். சந்தையில் எண்ணற்ற காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பலவற்றை வழங்கும் நிலையில், இதில் எதைத் தேர்வு செய்வது என்பதிலேயே பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. முன்பெல்லாம் பியூர் டெர்ம் பாலிசிகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போதைய சூழலில் காப்பீடு பிளஸ் முதலீடு பாலிசியும் வந்து விட்டது. இதில் எது சிறந்தது? எதனைத் தேர்ந்தெடுத்தால் அதிக பலன் என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
எதிர்காலத்தில் எதிராபாராத மருத்துவச் செலவுகளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவுகிறது. முன்பெல்லாம் இந்தத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்தி வந்தால், பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில், இந்தக் காப்பீடு நிதிப் பாதுகாப்பை வழங்கும். ஆனால், பாலிசி காலம் முடியும் வரையில் பாலிசிதாரர் நலமாக இருந்தால், எந்தப் பலனும் கிடைக்காது. தற்போது இந்த நடைமுறையில் காப்பீட்டு நிறுவனங்கள் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
பியூர் டெர்ம் பாலிசியின் கீழ் பிரீமியத்தைத் திருப்பித் தரும் திட்டம் மற்றும் ஜுரோ காஸ்ட் திட்டம் என இரண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரீமியத்தைத் திருப்பித் தரும் திட்டத்தின் படி, பாலிசிதாரர் இறந்து விட்டால் முழுத் தொகையும் அவருடைய நாமினிக்கு வழங்கப்படும். பாலிசி காலம் முழுக்க பாலிசிதாரர் உயிருடன் இருந்தால், 18% ஜிஎஸ்டி போக பிரீமியம் தொகை பாலிசிதாரருக்கு திருப்பி வழங்கப்படும்.
ஜீரோ காஸ்ட் திட்டத்தின் படி, பாலிசிதாரர் முழு காலத்திற்கும் பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி விடலாம். வழக்கமான டெர்ம் பாலிசியை விடவும், இந்த இரண்டு திட்டங்களின் பிரீமியம் தொகை சற்று அதிகமாகும். இருப்பினும் நாம் செலுத்தும் பணம், வீணாகாமல் நம்மிடமே வந்து சேரும்.
காப்பீடு பிளஸ் முதலீடு திட்டத்தில், நாம் செலுத்தும் பிரீமியம் இரண்டு பகுதியாக பிரிக்கப்படும். இதில் ஒரு பகுதி காப்பீட்டிற்கும், மற்றொரு பகுதி மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீட்டிற்கும் பயன்படுத்தப்படும். காப்பீட்டுத் தொகையானது பாலிசிதாரருக்கு நிதிப் பாதுகாப்பையும், முதலீட்டுத் தொகையானது வருங்காலத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுகிறது. இத்திட்டத்திலும் பாலிசிதாரர் பாலிசி காலம் முடியும் வரை உயிருடன் இருந்தால், ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டு மீதிக் தொகை திருப்பி வழங்கப்படும்.
பியூர் டெர்ம் பாலிசி மற்றும் காப்பீடு பிளஸ் முதலீடு ஆகிய இரண்டிலுமே நாம் செலுத்தும் பணத்திற்கு உத்தரவாதம் உண்டு. பொருளாதார வல்லுநர்கள் பலரும் பியூர் டெர்ம் பாலிசியையே பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன் அதிலுள்ள அனைத்து நிபந்தனைகள் மற்றும் சலுகைகளை அறிந்து கொள்ளுங்கள். முக்கியமாக நாமினியை நியமிப்பது மிக மிக அவசியமாகும்.