

நம்மிடம் இருக்கும் பணத்தை ஒரே வித சொத்தில் முதலீடு செய்வதை விட வெவ்வேறு விதமான முதலீடுகளில் பிரித்துப் போட்டு முதலீடு செய்வதே சிறந்தது. தங்கம், வீட்டு மனை, பாண்டுகள், டெபாசிட்டுகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் என்று முதலீடு செய்வதற்கு பல வழிவகைகள் உள்ளன. அவற்றில் எதில் முதலீடு செய்வது என்பதை யோசித்து செய்ய வேண்டும்.
உண்மையான சொத்துக்கள் (real assets):
உண்மையான சொத்துக்கள் என்பவை நிலம், தங்கம், கட்டடம் போன்ற பௌதீக வடிவம் கொண்ட திடமான தொட்டு உணரக்கூடிய வடிவத்தை கொண்ட சொத்துக்களாகும். அவற்றுக்கு உள்ளார்ந்த மதிப்பும், வருவாயை உருவாக்கும் திறனும் உண்டு. உண்மையான சொத்துக்களை விற்பனை செய்ய நேரமாகலாம். எனவே இவை பணப்புழக்கம் குறைவானவை.
இவற்றின் நன்மைகள்:
ஆனால் இவற்றின் நன்மைகள் என்று பார்த்தால், இவை பணவீக்கத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. ஏனெனில் அவற்றின் மதிப்பு பணம் வீக்கத்துடன் சேர்ந்து உயரும்.
இவை பெரும்பாலும் வாடகை அல்லது குத்தகை போன்ற நிலையான வருமானத்தை ஈட்டுவதன் மூலம் ஒரு நிலையான பணப்புழக்கத்தை உருவாக்குகின்றன.
பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுடன் குறைவான தொடர்புடையதால் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த உதவுகிறது.
சில உண்மையான சொத்துக்கள், உதாரணத்திற்கு கலைப் பொருட்கள் சேகரிப்புகள், சரியான பராமரிப்புடன் காலப்போக்கில் மதிப்பை உயர்த்துகின்றன.
நிதி சொத்துக்கள் (Financial assets):
நிதி சொத்துக்கள் என்பவை பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், வங்கி வைப்புத் தொகை போன்ற மதிப்பின் உரிமை அல்லது ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பொருள் அல்லாத சொத்துக்கள். இவற்றின் மதிப்பு சந்தை நிலைமைகள், நிறுவனத்தின் செயல் திறன் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
இவற்றின் நன்மைகள்:
இவை பொதுவாக உண்மையான சொத்துக்களை விட அதிக பணப்புழக்கம் கொண்டவை. ஏனெனில் அவற்றை விரைவாக பணமாக மாற்ற முடியும்.
நிஜ சொத்துக்கள் நேரடியாக மதிப்பை அளிக்கின்றன. நிதி சொத்துக்கள் மற்ற நிறுவனங்களின் உரிமைக்கோரல்களில் இருந்து தங்கள் மதிப்பை பெறுகின்றன.
பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல வகையான நிதி சொத்துக்கள் உள்ளன. இவை பல்வேறு இடர் நிலைகள் மற்றும் வருமான இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டு வாய்ப்புகளை அதாவது பல்வேறு சந்தை வாய்ப்புகளை வழங்குகின்றன.
இவற்றின் பணப்புழக்கத் தன்மை, தற்போதைய பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், முதலீடுகளை நிர்வகிப்பதற்கும் எளிதாக்குகிறது.
ரியல் அசெட்ஸ் vs பைனான்சியல் அசெட்ஸ்:
மொத்தத்தில் ரியல் அசெட்களில் ரிஸ்க் குறைவு; ரிட்டர்னும் குறைவு. பைனான்சியல் அசெட்களில் ரிஸ்க் அதிகம்; ரிட்டர்னும் அதிகம்.
இளம் வயதினர் தங்கள் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ரிஸ்க் நிறைந்த முதலீடுகளில் ஈடுபடலாம். அதில் இழப்பு ஏற்பட்டாலும் அதை சரி கட்ட அவர்களால் முடியும்.
ஆனால் அதிக ரிஸ்க் உள்ள ஒரு முதலீட்டில் இறங்கிய பின்பு ஏதேனும் நஷ்டம் வந்தால் அந்த இழப்பை சரி கட்ட வயது முதிர்ந்தவர்களால் முடியாது.