‘சம்பாதிக்கும் பணம் வீண் விரயம்தான் ஆகிறது, கையில் தங்காமல் போகிறது’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அதற்கு நாம் தெரியாமல் வீட்டில் செய்யும் சில விஷயங்களே காரணமாகும். அதை சரிசெய்து விட்டால் போதும் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அதேநேரம் வீண் விரயமும் ஆகாது. அந்த விஷயங்கள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. வீட்டில் பூஜையறையில் உள்ள பூஜை பொருட்களை முடிந்த அளவு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். பூஜை பொருட்களில் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு பூஜை பொருட்களை சுத்தமாக பராமரிக்கிறோமோ அந்த அளவிற்கு அந்த வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்கும். பூஜையறையையும், பூஜை பொருட்களையும் சுத்தமாக பராமரிக்காமல் விட்டால், அந்த வீட்டில் பண கஷ்டம் உண்டாகும்.
2. வீட்டை சூரியன் மறைந்த பிறகு சுத்தம் செய்யக் கூடாது என்று சொல்லப்படுகிறது. வீட்டை ஆறு மணிக்கு மேல் சுத்தம் செய்வது துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
3. சாப்பிட்ட பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் இருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பதால் ஆரோக்கியத்தை பாதித்து நோய் உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளது. வாஸ்து ரீதியாக இவ்வாறு வைத்திருப்பது பணக் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதனால் சாப்பிட்ட பாத்திரத்தை முடிந்த அளவு விரைவாக கழுவி வைத்துவிடுவது நல்லது.
4. வீட்டில் அழுக்குத் துணி அதிகமாக சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பெண்கள் தலைமுடியை சீவிய பிறகு வீட்டிலே முடியை அப்படியே தரையில் விட்டுவிட்டு செல்லக் கூடாது. அது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் இருக்கும் உடைந்த பொருட்கள் எதிர்மறையான சக்தியை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் சண்டை, பிரச்னை, கருத்து வேறுபாடு, மனஸ்தாபம் ஏற்படும். எனவே, உடைந்த பொருட்களை கண்டிப்பாக அப்புறப்படுத்தி விடுவது நல்லதாகும்.
5. வீட்டில் ஒட்டடைகளை பார்த்த உடனேயே அதை சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியமாகும். வீட்டில் அடிக்கடி விஷ ஜந்துகள் வருவது செல்வ வளத்தை குறைக்கக்கூடிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
6. மகாலக்ஷ்மி மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் துளசி செடியை வீட்டில் வைத்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். துளசி செடி வீட்டில் வாடி போவதோ அல்லது கருகிப்போவதோ அந்த வீட்டின் செல்வ செழிப்பையும் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை கவனித்து சரிசெய்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் செல்வ வளம் மென்மேலும் அதிகரிக்கும்.