ரெக்கரிங் டெபாசிட் vs பிக்சட் டெபாசிட்: எதில் முதலீடு செய்தால் அதிக இலாபம்?

Fixed Deposit
Fixed Deposit Img. Credit: Corporatefinanceinstitute

முதலீடுகளில் ஆர்வம் உள்ள நபர்கள் வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களைத் தான் அதிகம் நம்புகின்றனர். அதற்கேற்ப நம்பகத்தன்மை வாய்ந்ததாக இவையிரண்டு துறைகளும் செயல்படுகின்றன. இதில் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற பிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் ஆகிய இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடுபவர்களுக்கு ஏற்ற வகையில் வங்கிகளும், அஞ்சல் அலுவலகங்களும் பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் சிறிதளவு வேறுபாடு இருப்பினும், பலரும் பிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் இவையிரண்டில் எது சிறந்த முதலீட்டுக்கானத் தேர்வு என்பதில், பலருக்கும் குழப்பம் இருக்கிறது.

பிக்சட் டெபாசிட்:

ஒரே நேரத்தில் அதிக பணம் இருக்கும் போது பிக்சட் டெபாசிட்டைத் தான் பலரும் தேர்ந்தெடுப்பார்கள். ஒருமுறை டெபாசிட் செய்து விட்டால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு எந்தத் தொகையையும் நாம் செலுத்த வேண்டி இருக்காது. நாம் தேர்வு செய்யும் ஆண்டுகளின் எண்ணிக்கை நிறைவடைந்தவுடன், நாம் செலுத்திய தொகைக்கு வட்டித்தொகை சேர்த்து அளிக்கப்படும். இத்திட்டத்தில் வட்டி விகிதமானது தொடக்கம் முதல் முடிவு காலம் வரை மாறாமல் இருக்கும். ஏதேனும் அவசரத் தேவை இருக்கும் போது, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்த தொகையை முதிர்ச்சி காலத்திற்கு முன்பே எடுத்தால், அபராதம் செலுத்த வேண்டிய நிலை வரும். மேலும் வட்டி விகிதம் குறையவும் வாய்ப்புள்ளது.

ரெக்கரிங் டெபாசிட்:

மொத்தமாக ஒரு குறிப்பிட்டத் தொகை இல்லாத நபர்கள், ரெக்கரிங் டெபாசிட்டைத் தேர்வு செய்கின்றனர். இத்திட்டத்தில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் ப்ரீமியமாக செலுத்த வேண்டும். பிக்சட் டெபாசிட்டை ஒப்பிடும் போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் குறைவு தான். இருப்பினும் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஏற்றத் திட்டமாக இத்திட்டம் இருக்கும். நமது பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இத்திட்டம் இருக்கும். இத்திட்டத்திலும் வட்டி விகிதமானது தொடக்க காலம் முதல் முடிவு காலம் வரையில் மாறாமல் இருக்கும். இத்திட்டத்தில் மாதாமாதம் வட்டித்தொகை சேரும். இருப்பினும், மொத்தப் பணத்தையும் முதிர்ச்சி காலம் முடிந்த பிறகு தான் எடுக்க முடியும். முன்கூட்டியே பணம் எடுக்க விண்ணப்பித்தால் இத்திட்டத்திலும் வட்டி விகிதம் குறைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
பிக்சட் டெபாசிட்டிற்கு ஏற்றது வங்கியா அல்லது அஞ்சல் அலுவலகமா?
Fixed Deposit

குடும்பச் செலவுகள் மற்றும் பொருளாதாரச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, மாதந்தோறும் குறைந்த பணத்தில் சேமிக்க நினைக்கும் நபர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் மிகவும் சிறந்தத் திட்டமாக இருக்கும். ஆனால், ஒரு பெரிய தொகையை வைத்து வருமானம் ஈட்ட நினைப்பவர்கள் பிக்சட் டெபாசிட்டைத் தேர்வு செய்யலாம்.

இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன் அனைத்துத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், சாதக பாதகங்கள் என அனைத்தையும் அறிந்து கொண்டு உங்களுக்கானத் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com