இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தால் என்ன நடக்கும்? அதிகரித்தால் யாருக்கு லாபம்?

rupee depreciation and rupee appreciation
rupee depreciation and rupee appreciationImg credit: AI Image
Published on

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறியது அல்லது இறங்கியது என்ற செய்தியை அடிக்கடி நாம் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். ரூபாய் மதிப்பு சரிந்தது என்று சொல்லும் போது நாடு நஷ்டமடைந்து விட்டது போன்ற எண்ணம் தோன்றும். ஆனால், உண்மையில் இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அதன் நாணயத்தின் மதிப்பு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உலகளவில் மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்யும்.

அப்படி, ரூபாய் மதிப்பு குறைந்தால் என்ன நடக்கும்? அதிகரித்தால் என்ன மாற்றங்கள் வரும்? என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

1. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தால்:

ஒரு காலத்தில் 1 அமெரிக்க டாலர் ₹75 ஆக இருந்தது என வைத்துக்கொள்வோம். பின்னர் அது 1 டாலர் ₹85 ஆகிவிட்டால், ரூபாய் மதிப்பு குறைந்தது என்று கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு குறைந்தால் ஏற்படும் விளைவுகள்:

  • இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% மேல் இறக்குமதி செய்கிறது. ரூபாய் மதிப்பு குறையும் போது, அதே அளவு எண்ணெய்க்கு நாம் அதிக ரூபாயைச் செலுத்த வேண்டியிருக்கும். இது பெட்ரோல் விலையை உயர்த்தி, சரக்கு போக்குவரத்து மூலம் காய்கறி முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்தின் விலையையும் உயர்த்தும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் அதிகமாகும். அதேபோல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்வோருக்குச் செலவு அதிகரிக்கும்.

  • ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும்.

ரூபாயின் மதிப்பு குறைந்தால் ஏற்படும் நன்மைகள்:

வெளிநாட்டினருக்கு இந்தியப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும். இதனால் ஐடி துறை, ஜவுளி மற்றும் மருந்து உற்பத்தி துறைகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்புவோருக்கு, அவர்கள் அனுப்பும் அதே டாலருக்கு அதிக இந்திய ரூபாய் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
திடீர் மரணமும் தீராத சொத்து சிக்கலும்: வாரிசு சான்றிதழ் முதல் வங்கி நடைமுறைகள் வரை!
rupee depreciation and rupee appreciation

2. ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் (Appreciation):

ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு முன்பு ₹85 இருந்தது என வைத்துக்கொள்வோம். பின்னர் அது ₹75 ஆக குறைந்தால், அதாவது அது ரூபாயின் மதிப்பு உயர்வு எனப்படும். இதற்கு இந்திய ரூபாய் வலுப்பெற்றது என்று பொருள்.

ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் ஏற்படும் நன்மைகள்:

  • கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி மலிவாகும். இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து ஒட்டுமொத்த விலைவாசியும் கட்டுக்குள் வரும்.

  • வெளிநாடுகளுக்குச் செல்வதும், அங்குப் பொருட்களை வாங்குவதும் முன்பை விடக் குறைவாகச் செலவாகும்.

  • இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவது எளிதாகும்.

ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள்:

இந்தியப் பொருட்களின் விலை உலகச் சந்தையில் அதிகரிக்கும். இதனால் இந்தியாவிலிருந்து பொருட்கள் வாங்குவதை வெளிநாட்டினர் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இது ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் லாபத்தைக் குறைக்கும்.

எனவே, ஒரு நாட்டின் நாணய மதிப்பு நிலையாக இருப்பதே அந்த நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த மதிப்பைச் சமநிலையில் வைக்கத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com