
அண்மையில் என்னுடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரை பார்த்தேன். "எப்படி இருக்கப்பா? உன் சன் எங்கே?" கேட்டேன்.
அவர் சொன்னார்…. "மை சன் இஸ் அவே டு ஃபாரின். மை பென்ஷன் இஸ் நியர்” என்றார்.
என்ன ஒரு வலியான(மை) வார்த்தை இது!
இருபது வயது முதல் அறுபது வயது வரை ஓட்டம். மனைவி, மக்கள் குடும்பம் என்று ஓடி ஓய்ந்த பின்… நமக்கான சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டாமா? மனைவி இருக்கிறாள்.
இருவரும் வாழ்வாதாரத்தை கடத்துவதற்கு வலிமையான பொருளாதாரம் இருந்தால்தானே அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் இருக்க முடியும்.
இந்தியாவில் எழுபது சதவீதம் முதியோர் ஓய்வூதியம் இல்லாமல் மற்றவர்களைச் சார்ந்துள்ளனர். அவர்கள் சுயமாக வாழ இந்த நிதி முதலீட்டு சுழற்சி முறைகள் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது ஒரு நிலையான வைப்பு தொகையாகும். இதை அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிகளில் திறக்கலாம். மூத்த குடிமக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளையும் திறக்கலாம். இருந்தாலும் மொத்த முதலீடு தொகை ரூ.30 லட்ச வரம்பு மீறக் கூடாது.
இதற்கான வட்டித் தொகை ஒவ்வொரு காலாண்டில் செலுத்தப்படுகிறது. இதற்கான வட்டி 8.2. சதவீதமாகும்.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான கணக்கு (POMIS)
அஞ்சல் அலுவலகத்தில் மாதாந்திர வருமானத் திட்டங்களில் முதலீடு செய்வது மூத்த குடிமக்களின் நம்பகமான ஒன்றாகும்.
இவை உத்திரவாதத்தை அளிக்கின்றன. குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 அதிகபட்சம் ரூ.9 லட்சம் ஆகும். ஒற்றைக் கணக்கில் ஒன்பது லட்சம் கூட்டு கணக்கில் பதினைந்து லட்சம் வரம்பு ஆகும்.
இதன் வாயிலாக மூத்த குடிமக்கள் மாதந்தோறும் 7.4 சதவீதம் வட்டி தொகையை பெறலாம். இந்த கணக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திறக்கப்படுகிறது. ஆனால் ஒரு வருடம் கழிந்த பின் கணக்கு நடத்தப்பட்ட காலத்தைப் பொறுத்து 1 முதல் 2 சதவீதம் அபராத தொகை செலுத்தி முடித்து கொள்ள விரும்புவோர் முடித்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
வங்கிகளின் நிலையான வைப்புத் தொகைகள்
நிலையான ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் இல்லாத வங்கி வைப்பு தொகைகளையும் ஒருவர் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வங்கியும் காலம் மற்றும் வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது. எனவே மூத்த குடிமக்கள் சாதகமான வங்கிகளில் வைப்பு தொகையை ஆரம்பித்து நலம் பெறலாம். மூத்த குடிமக்களுக்கான வட்டி தொகை 6.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் மிதக்கும் விகிதம் சேமிப்பு பத்திரங்கள்
கவிதா போத்ரா ரிசர்வ் வங்கியின் மிதக்கும் விகிதம் பத்திரங்கள் உத்தரவாத வருமானத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு விருப்பமாக அமைகின்றன. இந்த பத்திரங்கள் தேசிய சேமிப்பு சான்றிதழ் விகிதம் பிளஸ் 0.35 சதவீதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மீளப் பெற இயலும். அவை பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் பணம் செலுத்துதல் அரையாண்டு மற்றும் உங்களுக்கு மாதாந்திர வருமானம் தேவைப்பட்டால் இவை உகந்தவை அல்ல. இந்த திட்டம் வட்டி உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், அது மிதக்கும் (floating) என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட்
இத்திட்டங்களில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யலாம். குறைந்த அளவு ஆபத்துள்ள திட்டங்களாகும். இதைத் தவிர தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து வழக்கமான வருமானத்திற்கான விருப்பமாகவும் தேர்ந்தெடுக்கலாம்.
ஆக, வயதான காலத்தில் அடுத்தவர் கரங்களை எதிர்பார்ப்பதை விட இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து நிம்மதியான உறக்கத்தை மேற்கொள்ளலாம் பெரியவர்களே!
”எங்கே புறப்பட்டீங்க பெரியவரே?"
”அஞ்சல் அலுவலகத்திற்கு தான்!”