முதலீடுகளை ஒருமுகப்படுத்துவதன் மூலம் நமது முதலீட்டிற்கு பங்கம் விளையலாம் அல்லது முதலுக்கே மோசம் ஆகலாம். முதலீடுகளை நாம் பரவலாக வைத்திருப்பதன் மூலம் பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும். முதலீடுகளை பரவலாக்குவதன் மூலம் நமது முதலீட்டுக் கூறுகளில் ஏதாவது ஒரு முதலீட்டிற்கு ஏற்படும் இறக்கங்களை மற்ற முதலீடுகளில் ஏற்படும் ஏற்றங்கள் சமாளித்து மொத்த முதலீட்டுக் கலவையின் பணத்தை இழக்கும் அபாயம் குறையும்.
************
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு வயதான தந்தைக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அந்த நான்கு மகன்களும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர். தந்தை பல்வேறு முறை அவர்களுக்கு நல்ல புத்திமதிகள் எடுத்துக் கூறியும் கூட எந்த ஒரு மாற்றமும் அவர்களிடையே ஏற்படவில்லை. அவர்களது சண்டை தொடர்ந்தது. எனவே தந்தை மகன்களுக்கு நிதர்சனமான விதத்தில் தனது அறிவுரையைத் தெரிவிக்க விரும்பினார்.
மகன்களிடம் ஒரு மரக் குச்சிகளின் கட்டினை எடுத்து வருமாறு சொன்னார். அந்த மரக் குச்சிகளின் கட்டினை ஒவ்வொருவரிடமும் கொடுத்து கட்டோடு உடைக்குமாறு சொன்னார். மகன்கள் ஒவ்வொருவராக அந்த மரக் குச்சிகளின் கட்டினை உடைக்க தங்களது முழு பலத்தையும் பயன்படுத்தினர். ஆனால் அவர்களால் அந்த மரக் குச்சிகளின் கட்டினை உடைக்க முடியவில்லை. தற்போது அந்த மரக் குச்சிகளின் கட்டினை அவிழ்த்துவிட்டு, அந்த மரக் குச்சிகளைத் தனித்தனியாக உடைக்குமாறு தனது மகன்களைத் தந்தை கேட்டுக்கொண்டார். மகன்கள் அந்த தனித்தனியான மரக் குச்சிகளை எளிதாக உடைத்து விட்டனர்.
தந்தை மகன்களுக்கு அறிவுரை கூறினார்.
"நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இந்தக் கட்டினைப் போன்று சேர்ந்திருந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால் எதிரிகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் பிளவுபட்டு தனித்தனியாக இருந்தால் எதிரிகளால் உங்களை இந்த மரக் குச்சிகளைப் போல் எளிதாக உடைத்து விட முடியும்," என்றார் தந்தை.
மகன்களும் ஒற்றுமையின் பலத்தை உணர்ந்து கொண்டனர்.
*************
இந்தக் கதையில் மரக்குச்சிகள் என்பவை பங்குகள் போன்றவை. ஒரு நிறுவனத்தின் பங்கானது திடீரென கடும் வீழ்ச்சி அடைந்து பங்குச்சந்தையை விட்டு வெளியேறலாம் அல்லது கடும் மதிப்பு வீழ்ச்சியைச் சந்திக்கலாம். பங்குச்சந்தையில் வேகமாக ஏறுநடை போட்ட என்வீடியாவின் பங்கு கூட டீப்ஸீக் என்ற நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளால் கடும் வீழ்ச்சியை அடைந்தது. ஜாம்பவான் பங்குகளான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் கூட தரைமட்ட விலைக்கு வந்து விட்டன. எந்த ஒரு தனி நிறுவனத்தின் பங்கும் பல்வேறு காரணங்களால் போட்டிகளினால் மதிப்பு வீழ்ச்சி அடையலாம். இது தனித்தனியான மரக் குச்சிகள் பலத்தினால் உடைதலைப் போன்றது.
மரக்குச்சிகளின் கட்டு என்பது பங்குச்சந்தையின் குறியீடு போன்றது. மரக் குச்சிகளின் கட்டில் பல்வேறு மரக் குச்சிகள் இருப்பதைப் போன்று பங்குச் சந்தையின் குறியீட்டில் பல்வேறு பங்குகள் உள்ளன. உதாரணமாக சென்செக்ஸ் பங்குச்சந்தை குறியீட்டில் 30 பங்குகள் உள்ளன. நிஃப்டி பங்குச்சந்தை குறியீட்டில் 50 பங்குகள் உள்ளன. பல்வேறு காரணங்களினால் ஏதேனும் ஒரு பங்கு இறக்கம் அடைந்தால் கூட மற்ற பங்குகள் ஏற்றம் அடைவதால் பங்குச்சந்தை குறியீடானது பெரிதாக பாதிக்கப்படாது. அரிதான சமயங்களில் ஒரு பங்கு சரியாக செயல்படாத போது அந்தப் பங்கு குறியீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மற்றொரு பங்கு அதே இடத்தில் சேர்க்கப்படும். மரக் குச்சிகளின் கட்டில் ஒரு மரக்குச்சி ஏதேனும் பாதிப்படைந்தால் அந்த இடத்தில் மற்றொரு மரக் குச்சியை வைப்பதைப் போன்றது இது.
மொத்தத்தில் மரக்குச்சிகளின் கட்டானது பாதிக்கப்படாமல் உள்ளது. நாமும் நமது முதலீடுகளை மரக் குச்சிகளில் தனித்தனியாக செய்யாமல் மரக் குச்சிகளின் கட்டில் செய்வதன் மூலம் நமது முதலீடு பரவலாக்கப்படுகிறது, பலமாகிறது. முதலீட்டில் பணத்தை இழக்கும் அபாயம் குறைகிறது. நமது முதலீடு நீண்ட காலத்தில் நல்லதொரு பணப்பெருக்கத்தினை அடைகிறது.
பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகளிலோ அல்லது பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளிலோ நாம் முதலீடு செய்யும் பொழுது நமது முதலீடானது பரவலாக்கப்படுகிறது. ஒரு சில பங்குகளில் ஏற்படும் பாதிப்புகள் நமது பரஸ்பர நிதியை பாதிப்பது இல்லை. நமது முதலீட்டில் இருக்கும் பணத்தை இழக்கும் அபாயம் குறைகிறது. முதலீட்டில் பங்குகள் கலவை மட்டும் இல்லாமல் கடன் பத்திரங்கள், அரசாங்க தங்கப் பத்திரங்கள் என இன்னும் கலவையை பரவலாக்குவதால் பணத்தை இழக்கும் அபாயம் இன்னும் குறையும்.
முதலீட்டைப் பரவலாக்குவோம். பணத்தை இழக்கும் அபாயத்தைக் குறைத்துக் கொள்வோம்.