
நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிப்பது தான் புத்திசாலித்தனம். இளைய வயதில் சேமிக்கப் தவறியவர்கள், வயதான பிறகு தங்களது ஓய்வு கால நிதியை முதலீடு செய்வது வழக்கம். அதிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளும், அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில மூத்த குடிமக்கள், அவர்கள் பெறும் வட்டித் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டுமா என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தப் பதிவு.
வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கு பிரத்யேகமான திட்டங்கள் உள்ளன. அதோடு மற்ற திட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறது. பணியில் இருந்து ஓய்வு பெறும் மூத்த குடிமக்கள் பெரும்பாலும், வருங்காலத்தை நலமுடன் கழிக்க முதலீடுகளை நாடுகின்றனர். இருப்பினும் வருமான வரி அவர்களுக்கு எந்த அளவிற்கு சாதகமாக உள்ளது என்பதை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள் எப்போதும் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடுகளையே விரும்புவார்கள். ஆகையால் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தைகளின் பக்கம் இவர்களது கவனம் திரும்பாது. இதனால் தான் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் மூத்த குடிமக்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு வரை மூத்த குடிமக்கள், தங்கள் முதலீடுகளின் மூலம் பெறும் வட்டி ரூ.50,000-ஐ கடந்தால் டிடிஎஸ் (Tax Deducted at Source) கட்ட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது இதில் தளர்வை ஏற்படுத்திய மத்திய அரசு, ரூ.1,00,000 வரையிலான வட்டித் தொகைக்கு டிடிஎஸ் கட்டத் தேவையில்லை என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பு பல மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் அமைந்தது. அதாவது மூத்த குடிமக்களின் அத்தனை சேமிப்புத் திட்டங்களில் இருந்தும் கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.1,00,000-க்கு கீழே இருந்தால் 15H படிவத்தை சமர்ப்பித்தால் போதும். வங்கிகள் டிடிஎஸ் வரியை பிடித்தம் செய்யாது. பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தவர்களும் 15H படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுடைய வட்டி வருமானம் எவ்வளவு என்பதை வங்கிகள் அறிந்து கொள்ளவே இந்த படிவம் கொடுக்கப்படுகிறது. படிவத்தில் தெரிவித்திருக்கும் வட்டிக்கு ஏற்பவே வங்கிகள் உங்களுக்கு டிடிஎஸ் வரி விலக்கு அளிக்கும்.
வட்டி வருமானம் ஒரு இலட்சம் ரூபாயைக் கடக்கும் போது, டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படும். அதோடு ஆண்டு வருமானம் ரூ.12 இலட்சத்திற்குள் இருந்தால், புதிய வரித் திட்டத்தின் படி வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது, உங்களுக்கு ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் பணம், திருப்பி அளிக்கப்படும்.
வருமான வரி ரிட்டர்ன் ஆண்டுதோறும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். சில சமயம் அரசு இதற்கான தேதியை நீட்டிப்பு செய்கிறது. இருப்பினும் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்து விடுங்கள். ஏனெனில் ஒருமுறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், காலக்கெடு முடிவதற்குள் அனைத்தையும் சரிசெய்து மீண்டும் ஒருமுறை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.