
பணியில் இருந்து ஓய்வு பெற்று, கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்கவே மூத்த குடிமக்கள் பலரும் விரும்புவர். ஓய்வு பெற்றதும் ஒரு குறிப்பிட்ட தொகை பணிக்கொடையாக கிடைக்கும். இந்தத் தொகையை அப்படியே வைத்திருக்காமல், முதலீடு செய்வதன் மூலம் நல்ல இலாபத்தைப் பெற முடியும். அதிலும் மூத்த குடிமக்கள் என்றால், முதலீட்டுத் திட்டங்களில் பல சலுகைகளும் உள்ளன. இந்நிலையில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய அதிக ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
மூத்த குடிமக்கள் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்களின் மாதாந்திர செலவுகளுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை அறிந்து, அதற்கேற்ப கொஞ்சம் பணத்தை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். கையிலிருக்கும் மொத்த பணத்தையும் முதலீடு செய்து விட்டால், பிறகு தேவைப்படும் போது அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். பொதுவாக அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் பாதுகாப்பானவை. ஆகையால் உங்களின் முதல் தேர்வு, அஞ்சல் அலுவலத்தின் சேமிப்புத் திட்டமாக இருத்தல் வேண்டும்.
பிக்சட் டெபாசிட்:
ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டிற்கு வைப்பு நிதித் திட்டம் எனப்படும் பிக்சட் டெபாசிட் சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்திற்கு வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் சற்று அதிகம். அஞ்சல் அலுவலகங்களில் 5 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மூத்த குடிமக்களுக்கான வட்டி ரூ.50,000-க்கு மேல் சென்றால், 10% வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிக வட்டியைக் கொடுப்பதால் மூத்த குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
மத்திய அரசால் வழங்கப்படும் இத்திட்டத்தை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கலாம். முதலீடு செய்யும் நபர் 60 வயதைக் கடந்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் முதிர்ச்சி காலம் 5 ஆண்டுகள் என்றாலும், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளும் வசதி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 8.2% வட்டியை வழங்கும் இத்திட்டம், மிகவும் பாதுகாப்பானது.
தனியார் நிதி நிறுவனங்கள்:
ஒருவேளை இந்த வட்டி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக வட்டி வேண்டும் என்று நினைத்தால், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இங்கு 9% வரை வட்டி கிடைக்கும். இருப்பினும் தனியார் நிதி நிறுவனங்களை நாடுவதற்கு முன்பு, அந்நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளை விசாரித்து தான், முதலீடு செய்ய வேண்டும். இது கொஞ்சம் ரிஸ்க் தான் என்றாலும், கவனமாக முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்:
உங்களால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும் என்றால், அடுத்ததாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் 10% முதல் 12% வரை வட்டி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன என்பதால், இதையும் நம்மால் தவிர்த்து விட முடியாது.
உங்களுக்கு என்று ஒரு ரிஸ்க் வரையறை இருக்கும் அல்லவா! அந்த ரிஸ்க் வரையறைக்குள் எந்தத் திட்டம் உங்களுக்கு சரியாக இருக்குமோ அத்திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்த பிறகு, அப்படியே இருந்து விடக் கூடாது. அவ்வப்போது நீங்கள் முதலீடு செய்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் என்ன மற்றும் சந்தையில் எந்த முதலீட்டுத் திட்டம் அதிக வட்டியை ஈட்டிக் கொடுக்கிறது போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.