

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மலிவு விலை ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இது ரூபாய் 2 லட்சம் வரை நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. இது எதிர்பாராத மரணத்தின் போது குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை அளிக்கிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட எவரும் சேர்க்கப்படலாம். காப்பீடு செய்தவரின் மரணத்தின் போது நாமினிக்கு முழு தொகை கிடைக்கும்.
இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூபாய் 436 மட்டுமே ஆண்டு பிரிமியம் செலுத்த வேண்டும். இது நம் வங்கி/அஞ்சல் அலுவலகக் கணக்கில் இருந்து தானாகவே (Auto-debit) எடுத்துக் கொள்ளப்படும். ஒரு வருடகால காப்பீடு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை புதுப்பிக்கப்படும். செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.
கூட்டு கணக்குகளை பொறுத்தவரை ஒவ்வொரு கணக்குதாரரும் தனித்தனி பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் தலா 2 லட்சத்திற்கான தனித்தனி காப்பீட்டு திட்டங்களைப் பெறலாம்.
ஏற்கனவே உள்ள உறுப்பினர் பாலிசியை உரிய தேதியில் அதாவது ஜூன் 1ஆம் தேதி புதுப்பிக்கவில்லை என்றால், பின்னர் மீண்டும் சேர வந்தால், அது புதிய உறுப்பினராக கருதப்படும். புதிய சேர்க்கையின்படி பிரீமியம் வசூலிக்கப்படும். அத்துடன் புதிய உறுப்பினர் எண் ஒதுக்கப்படும்.
இதன் நோக்கம்:
குடும்பத்தின் நிதி எதிர்காலத்தை பாதுகாத்தல். அனைவருக்கும் மலிவான காப்பீட்டு வசதியை வழங்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
வங்கிக் கணக்கு மூலம் அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி போன்ற சேவைகள் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கி கணக்குள்ள எவரும் இணைய வங்கி சேவையின் மூலம் அல்லது வங்கி கிளைக்கு நேரில் சென்று ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் வருடத்தின் எந்த காலத்திலும் இத்திட்டத்தில் சேரலாம்.
இதில் ஆதார் அட்டை மட்டுமே முதன்மை ஆவணமாக கருதப்படுகிறது. இந்தத் திட்டம் சமூகத்தின் ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கவனிக்க வேண்டியவை:
1. ஒரு நபர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு கணக்கின் மூலம் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.
2. புதிதாக இணைந்தவர்களுக்கு முதல் 30 நாட்களுக்குள் விபத்து தவிர்த்த பிற காரணங்களால் இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.
3. ஆண்டின் இடையில் சேருப்பவர்களுக்கு சேரும் மாதத்தைப் பெற்று பிரீமியத் தொகை மாறுபடும்.