குழந்தைகளின் எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு ஒரு நல்வாய்ப்பினை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அது தான் என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா திட்டம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்.
மூத்த குடிமக்கள் தங்களின் ஓய்வு காலத்தில் பணத் தேவையைப் பூர்த்தி செய்து, நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற திட்டமாக உதவுகிறது தேசிய ஓய்வூதியத் திட்டம். இத்திட்டத்தின் பலனாக பயனாளர்கள் மாதாமாதம் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (PFRDA), PFRDA சட்டம் 2013 இன் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிர்வகித்து, ஒழுங்குபடுத்துகிறது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்போது என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, உங்கள் குழந்தைகளின் பெயரில் ஒரு புதிய கணக்கைத் தொடங்கி மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வரவு வைக்கலாம். குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் வாத்சல்யா யோஜனா திட்டம், வழக்கமான தேசிய ஓய்வூதியத் திட்டமாக மாறி விடும். இந்தத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதால், நம்பகத்தன்மைக்கு எந்தக் குறையும் இருக்காது.
தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்குக் தொடங்க வேண்டுமாயின் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்நிலையில், மைனர் குழந்தைகளுக்கும் தேசிய ஓய்வூதியத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி விண்ணப்பிக்க குறைந்தபட்சத் தொகையாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்காகவே அதிக முதலீடுகளை செய்கின்றனர். அவ்வகையில் ஓய்வூதியத் திட்டமான என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா அவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து, ஓய்வூதியத்திற்கும் வழி வகுக்கிறது. மேலும் இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், சிறுவர்களிடையே தொடக்க கால முதலீடு மற்றும் சேமிப்பை ஊக்குவிப்பதாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அஞ்சல் அலுவலகத்திலும் இத்திட்டத்திற்கு விண்ணபித்துக் கொள்ள முடியும்.
தகுதி:
இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்கள் யார் வேண்டுமானாலும் என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
முதிர்வு காலம்:
குழந்தை 18 வயதை பூர்த்தி அடையும் வரை.
தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆதார் அட்டை
வங்கிக் கணக்கு விவரங்கள்
மொபைல் எண்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.
குழந்தைகளின் நலனுக்காக முதலீடு செய்யும் பெற்றோர்கள், சேமிப்புப் பழக்கத்தையும் அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலத் தேவைகள் குறித்து குழந்தைகளுக்கு இப்போதே நாம் விளக்க வேண்டியது அவசியமாகும். முதலீடு, சேமிப்பு மற்றும் சிக்கனம் மிகுந்த வாழ்க்கையை குழந்தைகள் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் கடன் தொல்லையின்றி நிம்மதியாக வாழலாம்.