முதலீட்டு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள நேரத்தை செலவிடுங்கள்!

Investment
InvestmentImg. Credit: Corporatefinanceinstitute

முதலீடு செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் மற்றும் எவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.

இந்தியாவில் தொழில்முனைவோர்களை விடவும் மாதச் சம்பளம் வாங்கும் பணியாளர்கள் தான் அதிகம். தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, பணியாளர்களாக இருந்தாலும் சரி நாளையத் தேவைக்கான முதலீட்டில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால், முதலீட்டின் அளவு அவரவர்களின் பொருளாதாரத்தைப் பொறுத்து அமையும். தொழிலதிபர்கள் தாம் நினைத்த திட்டங்களில் மிக எளிதாக முதலீடு செய்ய முடியும். இருப்பினும், அத்திட்டம் பற்றி நன்கு அறிந்து ஆலோசித்து தான் முதலீட்டைத் தொடங்குவார்கள். ஆனால் பணியாளர்கள் அப்படி அல்ல. முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும் மறுபுறம் கூடவே பயமும் தொற்றிக் கொள்ளும்.

எதில் முதலீடு செய்வது, இதில் முதலீடு செய்தால் மொத்த பணமும் கிடைக்குமா, யாராவது ஏமாற்றி விடுவார்களோ என பயம் கொள்கின்றனர். ஏனெனில் அவர்களின் பொருளாதார உலகம் மிகவும் சிறியது. மாத சம்பளத்தில் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, அதில் ஒரு தொகையை மிச்சப்படுத்தி தான் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்யும் முன் அதனை முழுவதுமாக அறிந்து கொள்ள நேரத்தைப் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

யாராக இருந்தாலும் முதலில் முதலீடு பற்றிய புரிதலை நன்கு உணர வேண்டும். உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவது மட்டும் முதலீடு அல்ல; நாளைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் முதலீடு தான். பணம் மட்டும் முதலீடு அல்ல; அதற்காக நீங்கள் செலவிடும் நேரமும் முதலீடு தான். இதைத்தான் “நீங்கள் எதையாவது முதலீடு செய்வதற்கு முன், அதைப் புரிந்துகொள்ள சிறிது நேரத்தை முதலீடு செய்யுங்கள்!” என்று மிக அருமையாக சொல்லியிருக்கிறார் அமெரிக்கத் தொழிலதிபரும், எழுத்தாளருமான ராபர்ட் டி.கியோஸாகி.

இதையும் படியுங்கள்:
தங்கத்தில் முதலீடு: எந்தெந்த வழிகளில் செய்யலாம்?
Investment

முதலீடு செய்யும் எண்ணம் உங்களுக்கு இருந்தால் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் அரசுத் திட்டங்கள் மொத்தம் எத்தனை, அதில் எந்தத் திட்டத்திற்கு வட்டி அதிகம்; எந்தத் திட்டம் உங்களின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றது என்பதை அறிந்து கொள்ள சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் திட்டங்களை பாதிக்குமா என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியமாகும். நேரத்தை ஒதுக்கி முதலீடுகளைப் பற்றிக் கற்றுக் கொண்டால் இது போல் பல கேள்விகள் உங்களுக்கும் தோன்றும். அப்படித் தோன்றும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையை அறிந்து கொள்ளாமல் முதலீடு செய்ய வேண்டாம்.

தொழிலில் முதலீடு செய்வதும் மிகச் சிறந்த வழியாகும். எந்தத் தொழிலை எங்கே தொடங்கினால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்; எங்கு என்னத் தேவை இருக்கிறது என்பதை நேரம் ஒதுக்கி அறிந்து கொண்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். ஆகையால் முதலீட்டில் நேரமும் முக்கியப் பங்காற்றுவதை நம்மால் மறுக்க இயலாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com