தங்கத்தில் முதலீடு: எந்தெந்த வழிகளில் செய்யலாம்?

தங்கக் கட்டிகள்...
தங்கக் கட்டிகள்...pixabay.com

ங்கத்தில் முதலீடு என்பது காலங்காலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

வரலாற்றுக் காலங்களிலேயே தங்கத்தினைச் சேமித்து வைத்து, பண நெருக்கடி காலங்களில் பயன் படுத்துவதென்பது நிகழ்ந்துள்ளது. ஆங்காங்கே கண்டெடுக்கப்படும் பொற்காசுகள் கடந்த கால மக்களின் வாழ்க்கையில் பொன் சேமிப்புக் குறித்த வரலாற்றை இன்றும் நமக்குத் தெரிவிக்கின்றன.

இப்போதும் கூட, தங்கத்தின் மீதான முதலீடு என்பது முதலீட்டுப் பரவலாக்கத்திற்கு உதவும் ஒரு அருமையான அம்சம். தங்கமென்பது பண வீக்கத்தினை (inflaction) ஒட்டி வளர்கிறது. எனவே, தங்கத்தின் மீதான முதலீடென்பது பணவீக்கத்தினைச் சமாளிக்க உதவும்.

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு முகாந்திரங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. நகைக் கடையில் தங்க நகைகள் வாங்குவது (Gold Jewellery)

2. தங்கக் கட்டிகள் வாங்குவது (Gold bars)

3. பங்குச் சந்தையில் வாணிபம் செய்யப்படும் தங்க பரஸ்பர நிதிகள் (Gold Exchange Traded Funds)

4. தங்கப் பரஸ்பர நிதிகள் (Gold Mutual Funds)

5. அரசாங்கத்தின் தங்கக் கடன் பத்திரங்கள் (Sovereign Gold Bond Scheme)

தங்க முதலீடுகள் ஒரு ஒப்பீடு:

உதாரணமாக, ஒருவரிடம் 50000 ரூபாய் உள்ளதாக கணக்கில் கொள்வோம்.

அவர் 8 வருடங்களுக்குத் தங்கத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

வரலாற்றின்படி தங்கமானது பணவீக்கத்தினை(வருடா வருடம் 8%) ஒட்டியே வளர்ந்துள்ளது. அவரது தங்க முதலீடானது வருடாவருடம் பணவீக்கத்தினை ஒட்டி, 8% வளர்வதாகக் கணக்கில் கொள்வோம்.

இன்றைய தங்கத்தின் ஒரு கிராம் மதிப்பு 6600 ரூபாய்.  8 வருடங்கள் கழித்து, வருடா வருடம் 8% தங்க முதலீட்டின் வளர்ச்சியின் காரணமாக, ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு - ரூபாய். 12,490 என வளர்ந்திருக்கும்.  தோராயமாக, 8 வருடங்களில் வளர்ந்த 1 கிராம் தங்க முதலீடு ரூபாய், 12,500 எனக் கொள்வோம்.

இப்போது, இந்த 50000 ரூபாய் தங்க முதலீடு, பின்வரும் முகாந்திரங்களில் எவ்வளவு வளர்ந்துள்ளது என்று பார்ப்போம்.

தங்க நகைக் கடையில், தங்க நகை வாங்குதல்:

தங்கத்தின் விலைக்கு சேதாரம், செய்கூலி எல்லாம் சேர்த்து(30%) என்று கொள்வோம். எனவே, 1 கிராம் தங்க நகையின் விலை - 8580 ரூபாய்.

50,000 ரூபாய்க்கு, அவருக்கு கிடைத்த தங்கத்தின் அளவு = 5.8 கிராம்

8 ஆண்டுகளில் வளர்ந்த தொகை = 5.8 x 12,500 = 72,500 ரூபாய்

தங்கக் கட்டிகள் வாங்குதல்:

ஒரு கிராம் தங்கக் கட்டியின் விலை = ரூபாய். 6500

50,000 ரூபாய்க்கு, கிடைத்த தங்கக் கட்டியின் அளவு = 7.7 கிராம்

8 ஆண்டுகளில் வருடம் 8% என வளர்ந்த தொகை = 7.7 x 12500 = 96,250 ரூபாய்

பங்குச் சந்தையில் வாணிபம் செய்யப்படும் தங்க பரஸ்பர நிதி:

பங்குச் சந்தை ஏற்றத் தாழ்வுக்கு ஏற்றபடி, இதன் விலை மாறுபடும்.

இங்கு எளிமைக்காக, ஒரு அலகு, ஒரு கிராம் எனக் கொள்வோம். ஒரு அலகின் விலை ரூபாய். 6500

50,000 ரூபாய்க்கு கிடைத்த அலகுகள் = 7.7

வருடா வருடம் செலவு விகிதம் 0.6% எனக் கொள்வோம். எனவே, முதலீடு வருடா வருடம் 8% க்கு பதிலாக 7.4% என வளர்கிறது.

8 ஆண்டுகளில் 7.7 அலகுகள், 7.4% என வளர்ந்த தொகை = 88,512 ரூபாய்.

தங்கத்தில் முதலீடு
தங்கத்தில் முதலீடு

தங்கப் பரஸ்பர நிதிகள்:

இவை ஏற்கனவே, நாம் பார்த்த பங்குச் சந்தையில் வாணிபம் செய்யப்படும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கின்றன. இவற்றில் எளிமைக்காக, ஒரு அலகு, ஒரு கிராம் எனக் கொள்வோம். ஒரு அலகின் விலை ரூபாய். 6500

50,000 ரூபாய்க்கு கிடைத்த அலகுகள் = 7.7

செலவு விகிதம் 0.5% எனக் கொள்வோம். எனவே, முதலீடு வருடா வருடம் 7.5% என வளர்கிறது.

8 ஆண்டுகளில், 7.7 அலகுகள் வருடம் 7.5% என வளர்ந்த தொகை = 89,173 ரூபாய்.

இதையும் படியுங்கள்:
எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
தங்கக் கட்டிகள்...

அரசாங்கத்தின் தங்கக் கடன் பத்திரங்கள்:

இங்கு, ஒரு கிராம் தங்கத்தின் விலை, அன்றைய தங்க மதிப்பின் படி அமைகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய். 6500 கிடைத்த கடன் பத்திர தங்கத்தின் அளவு = 7.7 கிராம் வருடா வருடம் 2.5% வட்டியின் காரணமாக, தங்கம் 10.2% என வளர்வதாகக் கணக்கில் கொள்வோம்.

8 ஆண்டுகளில், 7.7 கிராம் தங்கம்,  வருடம் 10.2% என வளர்ந்த தொகை = 1,04,552 ரூபாய்

எனவே, ஒரே பணத்தை வெவ்வேறு தங்க முதலீட்டு முகாந்திரங்களில் முதலீடு செய்யும்போது, அதன் வளர்ச்சி மாறுபடுகிறது. தங்க முதலீட்டு முகாந்திரங்களில் வளர்ச்சியின் அடிப்படையில், அவற்றை பின்வரும் வரிசையின் படி, முன்னுரிமை அளிக்கலாம்.

1. அரசாங்கத்தின் தங்கக் கடன் பத்திரங்கள்

2. தங்கக் கட்டிகள்

3. தங்கப் பரஸ்பர நிதிகள்

4. பங்குச் சந்தையில் வாணிபம் செய்யப்படும் தங்க நிதிகள்

5. தங்க நகைகள்

எனவே, தங்க நகைகள் முதலீட்டிற்கு சிறப்பானவை அல்ல. உங்கள் விருப்பத்திற்காகவும் மற்றும் மகிழ்ச்சிக்காகவும் தங்க நகைகள் வாங்கிக்கொள்ளலாம். மேலும், முதலீட்டுக் கலவையில் 2 - 5% தங்கத்தில் வைத்துக் கொள்ளலாம். இன்னும் அதிகமாக தங்கத்தில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் 10% வரை வைத்துக் கொள்ளலாம். அதையும் விட, அதிகமாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com