பங்குச்சந்தை சக்கரவர்த்தி Warren Buffett-ன் வெற்றிக் கதை! 

Warren Buffett
Success story of stock market emperor Warren Buffett!
Published on

பங்குச்சந்தை முதலீடு என்றாலே உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டின் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். அவரது முதலீட்டுத் திறன், எளிமையான வாழ்க்கை முறை, மனிதநேயம் ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவர். தனது தனித்துவமான முதலீட்டு தந்திரங்களால் பல பில்லியன் டாலர்களை அவர் குவித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு ஒரு சாதாரண சிறுவன் எவ்வாறு உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவராக உயர்ந்தான் என்பதற்கான ஒரு சான்றாகும். 

ஆரம்பகால வாழ்க்கை: வாரன் எட்வர்ட் பஃபெட் 1930 ஆம் ஆண்டு நெஃப்ரஸ்காவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே பணம், முதலீடு செய்வது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி காலத்தில் கோக், பேஸ்பால் கார்டுகள் போன்ற பொருட்களை வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போதே பங்குச்சந்தை பற்றி அறிந்துகொண்டு, தனது முதல் பங்குகளை அப்போதே வாங்கினார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பின்னர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வாரன் பஃபெட்டின் குருவாக கருதப்படும் பெஞ்சமின் கிரகாமிடம் படித்தார். 

பஃபெட்டின் முதல் முதலீட்டு நிறுவனம்: கொலம்பியா பல்கலைக்கழகத்தை முடித்த பிறகு பஃபெட் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான பஃபெட் பார்ட்னர்ஷிப்பைத் தொடங்கினர். இதில் அவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து சிறிய தொகையை முதலீடாகப் பெற்று அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். இந்த நிறுவனம் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

1965 ஆம் ஆண்டு பெர்ஷயர் ஹாத்வே என்ற ஒரு சிறிய துணி உற்பத்தி நிறுவனத்தை கைப்பற்றினார். பின்னர் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை மூடிவிட்டு ஹாத்வே நிறுவனத்தை தனது முதலீட்டு நிறுவனமாக மாற்றினர். அடுத்த சில ஆண்டுகளில் ஹாத்வே நிறுவனம் உலகின் மிகப்பெரிய காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. 

முதலீட்டு முறைகள்: வாரன் பஃபெட் இன் முதலீட்டு முறைகள் மிகவும் எளிமையானவை என்றாலும், அவற்றை பின்பற்றுவது மிகவும் கடினம். அவர் பெரும்பாலும் நீண்ட கால பார்வையுடன் முதலீடு செய்வார். ஒரு நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை ஆழமாக ஆராய்ந்து நீண்ட காலத்திற்கு வளர்ச்சி பெறும் சாத்தியம் உள்ள நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வார். மிகவும் பாதுகாப்பான நிறுவனங்களில் மட்டுமே அவர் முதலீடு செய்து வந்தார். மேலும், அவரது மற்றொரு முக்கியமான தத்துவம் என்னவென்றால் எப்போதும் பதட்டமின்றி இருப்பதுதான். அவர் குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. நீண்ட காலத்தில் பங்குகள் நிச்சயம் வளர்ச்சி பெறும் என்பதை அவர் நம்பினார். இதன் காரணமாகவே முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது பிறரின் கருத்துக்களை கண்டுகொள்ள மாட்டார். 

இதையும் படியுங்கள்:
வெற்றி எனும் ஏற்றம் பெற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
Warren Buffett

வாரன் பஃபெட்டின் வெற்றி ரகசியம்: 

  • குறுகிய காலத்தில் லாபம் ஈட்டும் முதலீடுகளை விட நீண்ட காலத்திற்கு வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் நம்பிக்கை கொண்டிருந்தார். 

  • ஒரு நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை கணக்கிட்டு அது குறைந்த விலைக்கு வரும்போது பங்குகளை வாங்குவார். தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். 

  • இவர் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றியதால், தனது செல்வத்தை அதிகமாக பெருக்குவதில் இவரால் கவனம் செலுத்த முடிந்தது. தனக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வார். 

நிகர சொத்து மதிப்பு: 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பு சுமார் 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது அவரை உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக வைத்துள்ளது. 

வாரன் பெஃபெட்டின் வெற்றிக் கதை பொறுமை, எளிமை மற்றும் நீண்ட கால பார்வை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. அவரது முதலீட்டு முறைகள் மற்றும் வாழ்க்கைமுறை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகம். பஃபெட்டின் வெற்றியின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நாம் நம்முடைய நிதி இலக்குகளை எளிதாக அடைய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com