'நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது'- சுவாமி விவேகானந்தர்.
இந்த உலகில் மாற்றம் ஒன்றே நிரந்தரமானது. இன்று உங்களிடம் இருக்கும் எதுவோ ஒன்று நாளை வேறொருவருடையது ஆகும். அப்பொழுது அது உங்களுக்கு சொந்தமா என்றால் நிச்சயம் கிடையாது. ஆகவே மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்து கொண்டாலே மற்றவர்களுடைய செயல்களையும் மற்றும் நமக்கு வரும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனம் நமக்கு வாய்க்கும்.
மாற்றங்கள் வரும்போது கவலை கொள்ளாதீர்கள். அது உங்களுடைய வெற்றிக்கான பாதையாக கூட மாறலாம். அந்தப் பெண்மணி கிராமத்தை விட்டு வெளியே தாண்டாதவர். பள்ளி படிப்பை முடிக்கவில்லை எனினும் அறிவில் சிறந்தவர். கணவரோடு வயலுக்குப்போய் அறுவடை மகசூல் கணக்குப் பார்ப்பது, மாட்டு கொட்டகையில் இருக்கும் மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்று அதில் வரும் பணத்தில் மிச்சம் பிடித்து சேமிப்பது என அனைத்திலும் அந்த பெண்மணி சிறந்தவராக அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தவர்.
அவருக்கு பெருநகரத்தில் பணி செய்யும் ஒரே மகன். இடையில் நோய்வாய்ப்பட்டு அவரின் கணவர் திடீரென இறந்தபோது அந்த பெண்ணுக்கு கிராமத்தில் யாரும் ஆதரவில்லை என்று அந்த மகன் தான் வேலை பார்க்கும் நகரத்திலேயே ஒரு வீடு எடுத்து தந்து அதில் வசிக்க அவரை அழைத்தான். கிராமத்தை விட்டு வெளியே தாண்டாத அந்த பெண்மணிக்கு மகனுடன் நகரத்திற்கு சென்றால் அந்த நகர வாழ்க்கை எப்படி இருக்குமோ என்றும் அது மட்டுமின்றி, இங்கிருக்கும் மாடு கன்று வயல்களை அப்படியே விட்டு விட்டுச் செல்ல வேண்டுமே என்ற கவலை பிடித்துக் கொண்டது.
இருப்பினும் இவ்வளவு நாள் தனக்காக வாழ்ந்த தான், இனி மகனுக்காக சொந்த வெறுப்பு வெறுப்புகளை விட்டுத்தந்து மாற்றங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்தவர் தான் ஆசையாக வளர்த்த மாடு கன்றுகளை தகுந்த விலைக்கு விற்று விட்டு, வயலை குத்தகைக்கு விட்டு மகனுடன் நகரத்திற்கு சென்றார்.
துவக்கத்தில் அந்த நகர வாழ்க்கை அந்த பெண்மணிக்கு பிடிக்கவில்லை. பாக்கெட்டில் அடைத்த பாலும், டப்பாக்களில் அடைத்த உணவும் கிராமத்தில் அன்றாடம் புதிதாக சமைத்து சாப்பிட்ட ஆரோக்கிய உணவும் இன்றி அவரின் பொழுதுகள் வருத்தத்திலேயே கழிந்தன. நாளாக நாளாக அந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்ட அந்த பெண்மணி யோசித்தார்.
அவர் இருந்த பகுதியில் யாரும் மாடுகளை வளர்த்து பால் தரவில்லை என்பதை அறிந்து கொண்டார். தானே சென்று அந்தப் பகுதியில் ஏதேனும் காலியிடம் இருக்கிறதா என்று பார்த்து அதன் சொந்தக்காரரிடம் பேசி அதில் இரண்டு மாடுகளை வாங்கி கட்டி பால் கறக்க ஆரம்பித்தார். நாட்கள் கழிந்தது. தனது உழைப்பின் மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு பால் ஊற்றுவதில் அந்தப் பெண்மணி இன்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
கிராமமோ நகரமோ மக்கள் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியத்தைத்தான். அதற்கு வழி வகுத்து தரும் எந்த செயல் ஆனாலும் அது வெற்றி தரும் என்பதை இந்த பெண்மணி மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த பெண்மணி மாற்றங்களை ஏற்றுக் கொண்ட காரணத்தால் மட்டுமே இவரால் தனக்கு ஏற்கனவே முன் அனுபவம் உள்ள இந்த தொழிலில் ஜெயிக்க முடிந்தது. ஆகவே 'மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்பதை போல் எந்த இடமாக இருந்தாலும் நம் மனம் ஊக்கத்துடன் மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் ஏற்றம் தரும் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொள்வோம்.