
பொருளாதார உலகில் வரி என்பது மிகவும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் மக்களின் வரிப் பணத்தில் தான் அரசாங்கத்தை நடத்தி வருகின்றன. ஒரு தனிநபரின் வருமானம், அதிகபட்ச அளவைத் தாண்டும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்த வேண்டும். அதேபோல் நிறுவனங்களும் அவற்றின் இலாபத்திற்கேற்ப வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இதுதவிர நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் வரி வசூலிக்கப்படுகிறது. வரி கட்டத் தவறும் போது, நாம் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடும். பொதுவாக வரி என்றால் என்ன என்பது பலருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் ‘செஸ் (CESS)’ என்பதற்கான விளக்கம் இன்னும் பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.
செஸ் என்பதும் வரியுடன் தொடர்பைடையது தான். வரி மற்றும் செஸ் இரண்டுமே பொருளாதார ரீதியாக அரசுக்கு இலாபம் கொடுக்கக் கூடியவை. தனிநபரின் வருவாய் மீது நேரடியாக வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியின் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் விதிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை செஸ் வரி என்கிறோம். அதாவது இதனை கூடுதல் வரி அல்லது மேல் வரி என்பார்கள்.
செஸ் வரியானது இந்திய வருமான வரி சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதனை வரியின் மற்றொரு வடிவமாகவும் பொதுமக்கள் பலர் கருதுகின்றனர். வரியின் கீழ் நேரடி மற்றும் மறைமுக வரிகள் என்ற பெயரில் சில வரிகள் வசூலிக்கப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த பிறகு, பல வரிகள் நீக்கப்பட்டன. தற்போது வருமான வரி மற்றும் மாநகராட்சி வரிகளே முதன்மை வரிகளாக விதிக்கப்பட்டு வருகின்றன.
அரசு சார்பில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட சில திட்டங்களை மேலும் முன்னேற்றம் காணும் வகையில் செயல்படுத்த, அத்திட்டங்களின் மீது செஸ் வரி விதிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்றார்போல் அவ்வப்போது செஸ் வரியை அரசு அமலுக்கு கொண்டு வரும். முன்னதாக பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த மாணவர்களை உருவாக்கவும், இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கவும் கல்விக்கான செஸ் வரி அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பின் கிருஷி கல்யாண் மற்றும் ஸ்வாச் பாரத் திட்டங்களுக்கும் செஸ் வரி விதிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை திட்டங்களின் மீது செஸ் வரி அமலுக்கு வந்தது.
எந்தத் திட்டத்திற்கு செஸ் வரி உபயோகமானதாக இருக்கும் என அரசு நினைக்கிறதோ, அத்திட்டத்தின் மீது செஸ் வரியை விதிக்கும். சில சமயங்களில் விவசாய விளைபொருட்களின் மீதும், தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீடுகளின் மீதும் செஸ் வரி விதிக்கப்படும்.
செஸ் வரி எந்தத் திட்டத்தின் மீது விதிக்கப்பட்டுள்ளதோ, பிரத்யேகமாக அத்திட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரசு வசூலிக்கும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், பொதுமக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
ஒட்டுமொத்தத்தில் இரண்டுமே அரசுக்கு இலாபம் கிடைக்கும் வழிகள் தான். பொதுமக்களுக்கு பல வகையான சேவைகளை செய்யும் அரசின் செலவுகளை பூர்த்தி செய்ய இந்த வரிப் பணம் உதவுகிறது.