

டேர்ம் இன்சூரன்ஸ் (term insurance) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் ஆயுள் காப்பீடாகும். இது பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. காப்பீட்டு காலத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் நாமினிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களில் எந்த ஒரு சேமிப்பு அம்சமும் இருக்காது. இது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். காப்பீட்டுத் தொகை மற்றும் பாலிசி காலத்தின் அடிப்படையில் பாலிசிதாரர் வழக்கமான பிரீமியத்தை மாதாந்திர, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்த வேண்டும்.
இன்சூரன்ஸ் எடுக்கும் பொழுது நம் தேவைகளுக்கு ஏற்ற காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்வது, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக படித்து புரிந்து கொள்வது போன்ற முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1) காப்பீட்டுத் தொகை:
நமக்கும் நம் குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதித் தேவைகள் மற்றும் நிதி இலக்குகளை கருத்தில் கொண்டு போதுமான காப்பீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது நம் கடன்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் பிற நிதி இலக்குகளை மனதில் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.
2) பாலிசி விதிமுறைகள்:
பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடு, பாலிசியின் ஆயுட்காலம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வாபஸ் பெறுவது போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் தேவைகளைப் பொறுத்து பாலிசியின் கால அளவை தேர்ந்தெடுக்கவும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயது வரை அல்லது நம் கடன்கள் அனைத்தும் தீரும் வரை பாலிசி காலத்தை தேர்ந்தெடுக்கலாம்.
3) காப்பீட்டு நிறுவனத்தின் நம்பகத்தன்மை:
காப்பீட்டு நிறுவனத்தின் நம்பகத்தன்மை, நிதி நிலைத்தன்மை மற்றும் கோரிக்கை தீர்க்கும் திறன் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். நம்பகமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். காப்பீட்டு நிறுவனம் நிதி ரீதியாக வலுவானதாகவும், வாடிக்கையாளர் சேவை சிறப்பாக உள்ளதாகவும் இருக்க வேண்டும். நிறுவனத்தின் க்ளைம் செட்டில்மெண்ட் விகிதம் மற்றும் அதன் நற்பெயரை சரி பார்க்கவும்.
4) பிரீமியம்:
நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரிமியம் தொகையைைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்களின் பிரீமியத்தை ஒப்பிட்டு பார்த்து தகுந்த பாலிசியை தேர்ந்தெடுக்கவும். பிரீமியத்தை எப்போது செலுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
5) ஆவணங்கள்:
பாலிசி விண்ணப்பம், மருத்துவ அறிக்கைகள், வருமானச் சான்றுகள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். பாலிசியின் பயனாளிகளை (nominee) தெளிவாக குறிப்பிடுவதை உறுதி செய்யவும்.
6) கூடுதல் அம்சங்கள்:
சில பாலிசிகள் கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. உதாரணமாக விபத்து அல்லது நோய் காரணமாக காப்பீட்டுத் தொகையை அதிகரித்தல் போன்றவை. நம் தேவைக்கேற்ப இந்த அம்சங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பாலிசிக்கு விண்ணப்பிக்கும் பொழுது அனைத்து தகவல்களையும் துல்லியமாக வழங்க வேண்டும். தவறான தகவல் அளிப்பது நம் பாலிசிக்கு ஆபத்தை விளைவிக்கும்.
பாலிசியின் விதிமுறைகளை மீறினால் அல்லது பிரீமியம் செலுத்தத் தவறினால் பாலிசி ரத்து செய்யப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.