முறைசார்ந்த எடுத்தல் திட்டம் (SWP) - மூத்த குடிமக்களின் வரப்பிரசாதம்! இது புதுசா இருக்கே!

Systematic Investment Plan
Systematic Investment Plan

முறைசார்ந்த முதலீட்டுத் திட்டத்தைக் (Systematic Investment Plan) குறித்து அறிந்திருப்பீர்கள். ஆனால், அதற்கு நேரெதிராக உள்ள முறைசார்ந்த எடுத்தல் திட்டத்தைக் (Systematic Withdrawal Plan) குறித்து அறிந்துள்ளீர்களா? அதனைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். 

முறைசார்ந்த எடுத்தல் திட்டம் என்றால் என்ன ?

உங்களிடம் ஒரு மரம் உள்ளது. அதிலிருந்து விறகுகளை மாதா மாதம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள். விறகுகளை எடுத்தாலும், இருக்கும் மரம் வளர்ந்துகொண்டிருக்கும். மொத்த மரமும் வேரோடு எடுக்கும் வரை, மரமானது தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும்.

அதனைப்போலவே, நீங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால், பரஸ்பர நிதியின் அன்றைய நிகர சொத்தின் மதிப்பின்(NAV - Net Asset Value)படி, அலகுகள் உங்களுக்குக் கிடைக்கும்.  பின்னர், உங்களது பரஸ்பர நிதி முதலீட்டில் உள்ள அலகுகளை எடுத்து பணமாக மாற்றுகிறீர்கள் (Redeem). பணமாக மாற்றியது போக, மீதமுள்ள அலகுகள், தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும். இவ்வாறு எடுப்பதை மாதம், காலாண்டு, ஆண்டு என்று எந்த காலவரையறையிலும் வைத்துக்கொள்ளலாம். மாதா மாதம் குறிப்பிட்ட எடுத்தல் தொகையைக் குறிப்பிட்டால், அந்தத் தொகைக்கு ஏற்ப அலகுகள் விற்கப்படும்.

உதாரணமாக, நீங்கள் 5 லட்சம் ரூபாய், பரஸ்பர நிதியில் முதலீடு செய்கிறீர்கள். அந்த முதலீடு வருடா வருடம் 12% வளர்வதாகக் கொள்வோம். முறைசார்ந்த எடுத்தல் திட்டத்தின்படி, மாதம் ரூபாய் 10000 எடுக்கிறீர்கள். 5 வருடங்கள் இவ்வாறு எடுத்தால், எடுத்தப் பணம் ரூபாய். 6 இலட்சம், அதாவது வருடம் 1.2 இலட்சம் ரூபாய். ஆனால், இவ்வாறு எடுத்த பின்பு கூட, கிட்டத்தட்ட ரூபாய். 1,80,000 உங்களது முதலீட்டில் மீதமிருக்கும். ஏனென்றால், நீங்கள் முதல் மாதம் 10,000 எடுத்தப் பின்பு கூட, மீதமுள்ள 4,90,000 ரூபாய் வளர்ந்துகொண்டிருக்கும். இவ்வாறு மாதா மாதம் மீதமுள்ள முதலீடு வளர்ந்துகொண்டே இருக்கும். நீங்கள் மாதா மாதம், குறைவாக எடுக்க எடுக்க, முதலீடு நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உதவும்.

இந்தத் திட்டத்தின் நிறைகள், குறைகள் யாவை?

நிறைகள்:

* ஓய்வு பெற்றவர்கள், மூத்தக் குடிமக்கள் போன்றவர் களுக்கு மாதாந்திரம் ஓய்வூதியத்தைப்போல், இந்தத் திட்டம் உதவும். இது மாதாந்திர செலவுகளுக்கு உதவும்.

* இதற்கு முதலீட்டின் தோற்றுவாயில் வரி (TDS - Tax deducted at source) கிடையாது. எனவே, முதலீடு நன்கு வளர்கிறது.

* மொத்த முதலீடும் எடுக்கப்படாமல், குறிப்பிட்ட சிறிய அளவு மட்டும் எடுக்கப்படுவதால், மீதமுள்ள முதலீடு நன்கு வளர்கிறது.

* தேவைக்கு ஏற்ப, தொகையை, காலவரையறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால், நிறுத்திக்கொள்ளலாம்.

Systematic Investment Plan
Systematic Investment Plan

குறைகள்:

* முதலீட்டின் நடுவில் கை வைப்பதால், முதலீடு வளர்வது குறைகிறது. எனவே, மூத்தக் குடிமக்கள் போன்ற, மாதாந்திர வருமானம் இல்லாதவர்களைத் தவிர, சம்பாதிக்கும் நபர்கள் இந்தத் திட்டத்தில் பணத்தை எடுக்கக்கூடாது.

* பங்குச் சந்தை வீழ்ச்சி போன்ற நேரங்களில், அலகின் விலை குறைந்தால், அதிக அலகுகளை விற்க நேரிடும். எனவே, முதலீட்டின் அளவு குறைந்துவிடும். எனவே, அத்தகைய தருணங்களில், வைப்பு நிதிகள் போன்றவற்றை எடுப்பது நலம்.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் அரங்கேறும் அதிசயம்!
Systematic Investment Plan

* குறுகிய காலத்தில் எடுத்தால், அதிக வரி செலுத்த வேண்டும். எனவே, நீண்ட கால ஆதாய வரி (Long term capital gains tax- LTCG tax), குறுகிய கால ஆதாய வரி (Short term capital gains tax - STCG tax) போன்றவற்றைக் கணக்கில்கொண்டு, அலகுகளை விற்க வேண்டும்.

முறைசார்ந்த எடுத்தல் திட்டத்தை, மூத்தக் குடிமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களது முதலீட்டின் பரவலாக்கத்திற்கு (diversification), இதனைப் பயன்படுத்திக்கொண்டு, இதன் மூலம், மாதாந்திர வருவாயைப் பெறுவதற்கு முயலவேண்டும். வைப்பு நிதிகள், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுடன், இந்த முறைசார்ந்த எடுத்தல் திட்டத்தையும், மூத்தக் குடிமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com