
வரலாற்றில் நடந்த டியூலிப் பூவின் மதிப்பு வீழ்ச்சி. இது உலகின் முதல் பொருளாதார நீர்க்குமிழியாக (Financial Bubble) கருதப்படுகிறது.
கிபி 1634 இல் தொடங்கிய இந்த டியூலிப் பூவின் விலை ஏற்றம் கிபி 1637 பிப்ரவரி மாதத்தில் முடிவுக்கு வந்தது. இன்று நெதர்லாந்து நாட்டின் தேசியப் பூவாக உள்ள டியூலிப் பூ நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டது அல்ல என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அது மேற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டது. அது பதினாறாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பாவில் மற்றும் நெதர்லாந்தில் நுழைந்தது. உருளைக்கிழங்கு, மிளகு, தக்காளி போன்ற மற்ற காய்கறிகளைப் போலவே டியூலிப் பூவும் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நுழைந்தது.
தங்களது நாட்டைச் சேராத அபூர்வமான பூவான டியூலிப் பூ நெதர்லாந்தில் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. அப்போது டச்சு கிழக்கிந்திய கம்பெனி பெருமளவில் இலாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தது. வணிகர்கள், கப்பலோட்டிகள் போன்றோர் பெரும் பணக்காரர்களாக இருந்தனர். அவர்களுக்கு இந்த டியூலிப் பூவானது மிகவும் கௌரவம் சார்ந்த விஷயமாக கருதப்பட்டது. இதன் காரணமாக டியூப் பூக்களின் விலையானது கூட தொடங்கியது. அது வைரத்தைப் போல் மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டது.
டியூலிப் பூவானது கோடைகாலத்தில் மட்டுமே பூப்பதனால், மற்ற காலங்களில் எதிர்காலத்தில் பூக்கப் போகும் பூவிற்கான ஆவணங்கள் விற்கப்பட்டன. இத்தகைய ஆவணங்கள் மக்கள் வாங்கி தங்களுக்குள் விற்றுக்கொள்ள தொடங்கினர். இவ்வாறு ஆவணங்கள் கைமாறும் பொழுது ஒவ்வொரு முறையும் விலையும் கூடிக் கொண்டே சென்றது. திறன் மிகுந்த ஒரு கைவினைக் கலைஞர் வருடம் 300 கில்டர்ஸ் (இந்திய மதிப்பில்: 14,270.96 INR) சம்பாதிப்பார். ஆனால், அதனைப் போன்று பத்து மடங்கு விலையில் சில டியூலிப் பூக்கள் விலைக்கு போயின. பிரம்மாண்ட மாளிகை கூட ஒரு ட்யூலிப் பூவிற்காக பரிமாற்றம் செய்யப்பட்டது.
டியூலிப் பூக்களில் வைரஸ் ஒன்றின் காரணமாக அதன் நிறங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அது வைரஸ் என்று அக்காலத்து மக்கள் அறியாதபடியால் இத்தகைய வைரஸ் தாக்கிய டியூலிப் பூக்கள் அதிக விலையில் விற்கப்பட்டன. ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன. டியூலிப் பூக்களுக்கு வெவ்வேறு பெயர்களும் இடப்பட்டன. அலெக்சாண்டர், கார்டினல் போன்ற பெயர்கள் இடப்பட்டன. செம்பர் அகஸ்டஸ் என்கிற டியூலிப் பூ மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்பட்டது. அது 3000 கில்டர்களுக்கு விலை போனது.
இவ்வாறு விலையுயர்ந்து கொண்டே இருந்த டியூலிப் பூக்களின் விலையானது திடீரென்று கிபி 1637 பிப்ரவரியில் தரைமட்டத்திற்கு குறைந்தது. அதற்குக் காரணம் திடீரென மக்கள் பூவிற்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா என்று யோசித்தனர். அதன் காரணமாக இந்த பொருளாதார நீர்க்குமிழி திடீரென வெடித்தது. இதனால் பல பேர் பாதிக்கப்பட்டதாக கருதப்பட்டாலும் கிபி 1980 களில் நடந்த ஆராய்ச்சியின்படி இதில் மிகவும் குறைவாகவே மக்கள் பாதிக்கப்பட்டனர். 42,000 மக்களை உடைய ஹார்லம் என்ற ஊரில் 285 மக்கள் இதில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. யாரும் திவாலாக வில்லை என்று தெரியவருகிறது.
டியூலிப் பூவின் இத்தகைய மதிப்பு வீழ்ச்சி பொருளாதார நீர்க்குமிழிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நமக்கு ஒரு பாடம். எந்த ஒரு முதலீட்டிற்கும் அடிப்படை மதிப்பு என்று உண்டு. அந்த அடிப்படை மதிப்பை விட அதிக அளவில் விற்கப்படும் பொழுது, அது எதிர்காலத்தில் வீழ்ச்சி அடைய வாய்ப்பு உண்டு.
நாமும் இத்தகைய பொருளாதார நீர்க்குமிழிகளில் சிக்கிக் கொள்ளாமல் நமது பணத்தினைக் காத்துக் கொள்வோம்.