
இன்றைய வேகமான உலகில் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கல்வி முடிந்ததும் வேலைக்கு செல்லும் இளம் தலைமுறை, பணத்தைக் கையாளும் முறையில் சில தவறுகளை செய்வது சாதாரணம். அதிகம் சம்பாதிப்பதற்கும், பணத்தை சரியான முறையில் கையாள்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. சம்பாதிக்கும் காலத்திலேயே நிதி சேமிப்பை பழகினால், எதிர்காலத்தில் வாழ்வை நிம்மதியாக வழிநடத்த முடியும். இந்நிலையில், இளம் வயதிலிருந்தே பின்பற்ற வேண்டிய சில முக்கியமான நிதி ஆலோசனைகளைப் பற்றி இங்கே வாசிக்கலாம்.
மாத வருமானத்துக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுங்கள். சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு செலவழிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். முதலில், உங்கள் மாத வருமானத்தை எழுதி அதற்கேற்ப, வீட்டு வாடகை, சாப்பாடு செலவு, போக்குவரத்து போன்ற செலவுகளும், சேமிப்பு, பிற விருப்ப செலவுகள் என்று பிரித்துக்கொள்ளுங்கள்.
என்றுமே, சேமிப்புக்கு பிறகு மீதமுள்ள பணத்தைதான் தேவையான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு, திட்டமிட்டு செலவழித்தால், மாத இறுதியில் பணத்தின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.
சிறு வயதிலிருந்து சேமிப்பை வழக்கமாக்குங்கள். சேமிப்பு என்பது சிறு முயற்சியில் துவங்கி பெரிய வெற்றிக்கு அடித்தளமாகும். முதலில் ஒரு நாள் 10 ரூபாய் அல்லது மாதம் 500 ரூபாய் என்ற அளவில் சேமிப்பை தொடங்குங்கள். பின்னர் மாதந்தோறும் அதனை படிப்படையாக வளர்த்துக்கொள்ளுங்கள்.
சிறு தொகை சேமிப்புகள் கூட, காலப்போக்கில் பெரிய தொகையாக மாறும். இது போன்ற பழக்கம் சிறு வயதிலையே வந்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் தொடரும்; உதவும்.
அவசர நிதியை உருவாக்குங்கள். வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. எதிர்பாராத மருத்துவ செலவுகள், வேலை இழப்பு போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க தனியாக ஒரு நிதி ஒன்றை வைத்திருக்க வேண்டும். இது குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை உங்கள் மாத வருமானத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என்று பின்பற்றுங்கள். இதன் மூலம், அவசர காலங்களில் கடன் எடுப்பதைத் தவிர்த்து கொள்ளலாம்.
கடன்களை கட்டுப்படுத்துங்கள். இளம் வயதில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு, வாடகை கடன் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் கடன் சுமை அதிகரித்து விடும்.
எனவே, அவசியமின்றி கடன் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே எடுத்திருந்தால், அதை விரைவாக திருப்பிச் செலுத்துவதற்கு திட்டமிட்டு செயல்படுங்கள்.
முதலீட்டில் ஆர்வம் காட்டுங்கள். சிறந்த முதலீடுகள் உங்களது பணத்திற்குப் பல மடங்கு வளர்ச்சி அளிக்கும். வங்கிக் கணக்கில் மட்டும் பணத்தை வைக்காமல், பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டுகள், வைப்பு நிதி போன்ற முதலீட்டில் செலுத்துங்கள்.
அதற்கு முன், இவை தொடர்பான அடிப்படை அறிவை கற்று கொள்ள வேண்டும். முதலீட்டு திட்டங்களைத் தேர்வு செய்யும் முன் நன்றாக ஆராய வேண்டியது அவசியம்.
நிதி கல்வியை தொடர்ந்து மேம்படுத்துங்கள். ஒருவர் தங்கள் நிதி அறிவை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
நிதி மேலாண்மை பற்றிய புத்தகங்கள், பத்திரிகைகளை தொடர்ந்து படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். நிதி ஆலோசகரிடம் ஆலோசனைகளை கேட்கவும், ஆன்லைன் வகுப்புகள், வீடியோக்கள் மூலம் புதிய தகவல்களை கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை விட முக்கியமாக, அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இளம் வயதிலிருந்தே நிதி சேமிப்பை பழகினால், எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்ய முடிகிறது.
சிறிய சேமிப்புகள், தெளிவான இடத்தில் முதலீடுகள், கட்டுப்பாடான செலவுகள் மற்றும் தொடர்ந்த கல்வி வளர்ச்சியுடன் வாழ கற்று கொண்டால் நம் கனவுகளை வெற்றி பெற முடியும்.