
இந்தியாவில் பாதுகாப்பான முதலீடுகளில் அஞ்சல் அலுவலகத் திட்டங்களுக்குத் தான் முதலிடம். அடுத்ததாக தங்க முதலீடு பாதுகாப்பான மற்றும் சிறந்த முதலீடாக உருவெடுத்து வருகிறது. தங்கத்தின் விலையேற்றமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் தான் தங்கத்தை அதிகளவில் வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெண்களுக்கு போட்டியாக தங்கத்தை டன் கணக்கில் வாங்கிக் குவித்து வருகிறதாம் இந்தியன் ரிசர்வ் வங்கி! ஏன் ரிசர்வ் வங்கி இவ்வளவு தங்கத்தை வாங்க வேண்டும். இதன் பின்னால் இருக்கும் பொருளாதார சூட்சமம் என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
தங்க முதலீட்டில் பல வகைகள் இருந்தாலும், ஆபரணமாக வாங்குவது தான் பொதுமக்களின் இயல்பு. இவர்கள் தங்கத்தை முதலீடு என்ற நோக்கத்தில் வாங்குவதில்லை. மாறாக வருங்காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தான் வாங்குகின்றனர். ஆனால், இதுவும் ஒரு முதலீட்டு யுக்தி தான். பெண்கள் தவிர்த்து பெரு முதலீட்டாளர்கள் பலரும் தங்க இடிஎஃப், டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க பிஸ்கட் என முதலீட்டைத் தொடங்குகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கப் பத்திரங்களை வெளியிட்டு முதலீட்டாளர்களை இழுத்தது ரிசர்வ் வங்கி. ஆனால் தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், இதில் நஷ்டம் வந்துவிடும் எனக் கருதி தங்கப் பத்திர முதலீட்டை நிறுத்தி விட்டது.
தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி இனி சந்தையில் விற்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தவர், அதனை சந்தையில் விற்க வாய்ப்புள்ளது. அப்படி விற்றால் அதனை வாங்க முதலீட்டாளர்கள் போட்டி போடுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
தங்கத்தின் இந்த விலையேற்றம் தான், ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கிக் குவிக்க முக்கிய காரணம். இந்தியன் ரிசர்வ் வங்கி கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே டன் கணக்கில் தங்கத்தை வாங்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் கடைசி ஆறு மாதங்களில் மட்டும் ஏறக்குறைய 25 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மற்ற நாடுகளின் பத்திரங்கள் மற்றும் நாணயங்களிலும் ரிசர்வ் வங்கி முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் சேமிப்பை உயர்த்தி வருகிறது ரிசர்வ் வங்கி. பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருவதால் தான் நாட்டின் சேமிப்பை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது ரிசர்வ் வங்கி.
ரஷ்யா - உக்ரைன் போர், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் மற்றும் அமெரிக்கா விதிக்கும் அதிகபட்ச வரி விகிதங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உலக நாணயங்களின் மதிப்பில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனை சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவே ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவிக்கிறது. இந்தப் பொருளாதார நடவடிக்கை வருங்காலத்தில் பணவீக்கத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.