
தற்போது உலகப் பொருளாதாரம் ஒரு நிலையற்ற தன்மையில் உள்ளது. உலக நாடுகளுக்குள் நடைபெறும் போர் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள், அமெரிக்கா - சீனா இடையிலான வரி போர், தொடர்ந்து அமெரிக்கா உயர்த்தி வரும் வரிகள் போன்றவை உற்பத்தி செலவுகளை அதிகரிக்கிறது. மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து பொருளாதார மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபை '2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகப் பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை (மே 15) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் 2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பு 6.3 % குறைந்துள்ளது.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் சிறிது குறைந்தாலும் மிதமாக இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4% சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அமைதியற்ற, பதட்டமான சூழ்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% சதவீதமாக உள்ளதாக ஐ.நாவின் பொருளாதார அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 0.8% குறைவாக உள்ளது. ஆனாலும், உலக நாடுகளின் வேகமான வளர்ச்சி விகிதங்களில் நாடு முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.நா. உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் 2025 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் 6.6% ஆக இருந்தது சில மாதங்களில் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் வரிகள் வரவிருக்கும் பொருட்கள் ஏற்றுமதியை தேக்கமடைய வைக்கின்றன. தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளான மருந்துகள், மின்னணுவியல், குறைக்கடத்திகள், எரிசக்தி மற்றும் தாமிரம் போன்றவை பொருளாதார தாக்கத்தை குறைக்கக்கூடும், இருப்பினும் இந்த விலக்குகளை நிரந்தரமாக நம்பி இருக்க முடியாது.
உலகின் ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் 2024 ஆண்டில் 2.9% இருந்து, தற்போது 2025 ஆம் ஆண்டில் 2.4% சதவீதமாக குறைந்துள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை, நிலையற்ற புவிசார் அரசியலுடன் இணைந்து, வணிகங்களில் முதலீட்டு முடிவுகளை தாமதப்படுத்தவோ அல்லது குறைக்கவோ தூண்டுகிறது. இது பொருளாதார சவால்களை அதிகப்படுத்தி, மந்த நிலையை கொண்டு வந்துள்ளது.
இந்த மந்தநிலை வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் இரண்டையும் பாதிக்கிறது. இதனால் அமெரிக்காவின் வளர்ச்சி 2024 இல் 2.8% ஆக இருந்தது, 2025 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளது. சீனாவின் வளர்ச்சியும் இந்த ஆண்டு 4.6% சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் தொடர்ச்சியான வரி விதிப்புகள், சீனாவின் வளர்ச்சியில் அது செய்யும் இடையூறுகள் மூலமாக, சீனா பொருளாதார ரீதியாக பாதிப்படையலாம்.
திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மீள் நுகர்வு மற்றும் அரசாங்க செலவுகளால் ஆதரிக்கப்படும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் முதன்மையாக உள்ளது. இந்தியாவில், பணவீக்கம் 2024 இல் 4.9% லிருந்து 2025 இல் 4.3% குறையும் என்றும், ரிசர்வ் வங்கியின் இலக்கை சரியாக எட்டும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் (DESA) அதிகாரி இங்கோ பிட்டர்லே "இந்தியாவின் வளர்ச்சி கணிப்புகள் குறைக்கப்பட்டிருந்தாலும், வலுவான தனியார் நுகர்வு மற்றும் பொது முதலீட்டால் உந்தப்பட்டு, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.