ஒரு தொழிலை இப்படியும் தேர்வு செய்யலாம்!

 Business
Business
Published on

இன்றைய காலகட்டங்களில் பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. மாத சம்பளத்திற்காக வேலைக்கு போய் வருபவர்களுக்கு பல்வேறு பணிச்சுமைகள் இருப்பதைப் போலவே, பல்வேறு தொழில்களை செய்பவர்களுக்கும் பலவிதமான நெருக்கடிகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு தொழிலை நடத்திவரும் ஒவ்வொருவரும் பொருளின் தரம், விலை என இரட்டை மாட்டு வண்டிச்சவாரி செய்ய வேண்டி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்த இளைஞர்களுக்கு இந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று குறிக்கோள் இருந்ததைப் போல, இன்று பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது குறிக்கோளாக இருக்கிறது.

எப்பொழுதும் ஒரு தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு முன் அந்தப் பொருள் வெகுஜன மக்களை சென்றடைய கூடியதாக இருப்பதை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதையும் தாண்டி அவ்வாறு தேர்வு செய்யப்படும் பொருள் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் போது அதன் நுகர்வுத் தன்மையும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே ஒரு தொழிலை தொடங்கும் போது அதிகமான விலையில் விற்கக்கூடிய பொருளாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நாளில் ஒரு பொருளை விற்று அதிலிருந்து லாபத்தை எடுப்பதும், ஒரு பொருளை தொடர்ச்சியாக விற்று அதிலிருந்து லாபத்தை எடுப்பதும் கிட்டத்தட்ட ஒரே வகையான வருமானத்தை தான் கொடுக்கின்றன.

எனவே நாம் தேர்வு செய்யும் பொருள் அன்றாட பயன்பாடுகளில் இருப்பதாக இருந்தால் அதனை துணிந்து செய்யலாம். மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடா அவ்வாறு ஒரு எளிய பொருளை வணிகம் செய்வதற்கு தேர்வு செய்ததால் தான் இன்று நமது அன்றாட பயன்பாடுகளில் அந்தப் பொருள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாடப் பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய உப்பை ரத்தன் டாடா இந்த அடிப்படையில்தான் தேர்வு செய்தார். இவ்வாறு அவர் உப்பை தேர்வு செய்ததற்கு பின் ஒரு கதை இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் 7 நிதி இலக்குகள்! 
 Business

ஒருமுறை ரத்தன் டாடா அலுவலகத்தில் இருந்தபோது வரவேற்பு அறையில் ஒரு இளைஞர் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தாராம். கண்ணாடி வழியே அந்த இளைஞனை நோட்டமிட்ட ரத்தன் டாட்டா, யார் அவர் எதற்காக வந்திருக்கிறார்? என்று கேட்கவே, உடன் இருந்த ஊழியர்கள் அந்த இளைஞர் உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார் என்று கூறினார்களாம். அதோடு மட்டுமல்லாமல் அந்த இளைஞர் இன்று மட்டும் வரவில்லை, இதோடு சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக வந்து கொண்டிருக்கிறார் என்று கூறவே, ரத்தன் டாடா அவரது ஊழியரிடம் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி இந்த தேதியில் 9 முதல் 9 :15 மணிக்குள் என்னை சந்திக்க வேண்டும் என்று சொல் என்று தன் ஊழியரிடம் சொல்லி அனுப்பினாராம்.

ஊழியர் அந்த இளைஞனிடம் சென்று இந்த தேதியில் உங்களை சந்திப்பதற்காக 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி உள்ளார் டாடா என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு அந்த இளைஞன் எனக்கு இதுவே அதிகமான நேரம் என்று கூறிவிட்டு சென்றாராம். குறித்த தேதியில் 8.30 மணிக்கு அலுவலகம் வந்து சேர்ந்த அந்த இளைஞன் சரியாக 9:00 மணிக்கு டாட்டாவை சந்தித்து நீங்கள் உப்பு விற்க வேண்டும் என்று கூறினாராம். அதைக் கேட்ட டாடா, நான் எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டிருக்கிறேன், நீ என்னிடம் வந்து உப்பு விற்க வேண்டும் என்று கூறுகிறாயே என்று கேட்டாராம்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 நாடுகளில் தங்கத்தை டன் கணக்கில் வாங்கலாம்! 
 Business

அதற்கு அந்த இளைஞன் நீங்கள் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர், உங்கள் பெயரில் உப்பு வியாபாரத்தை தொடங்கினால் மக்கள் நிச்சயமாக விரும்பி வாங்குவார்கள், அதுமட்டுமல்ல உப்பு என்பது நம்முடைய அன்றாட பயன்பாடுகளில் ஒன்று. எனவே அதன் வாங்கும் திறன் உங்களுக்கு தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும் என்று கூறினாராம் அந்த இளைஞன். உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணத்திற்கான காசோலையை அந்த இளைஞனிடம் கொடுத்த ரத்தன் டாட்டா நாளையிலிருந்து என் பெயரில் உப்பு விற்பனையாக வேண்டும் என்று சொன்னாராம். அப்படி ஒரு எளிய பொருளை தன்னுடைய தொழில்களில் ஒன்றாக ரத்தன் டாடா தேர்வு செய்த உப்பையே இன்று TATA Salt என்ற பெயரில் நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஒரு தொழிலை தேர்வு செய்வதற்கு நாம் தேர்வு செய்யும் பொருள் அதிக விலை உள்ளதாகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அந்தப் பொருள் தொடர்ந்து மக்களால் நுகரக்கூடியதாக இருந்தாலும் அதன் விற்பனை சரிவின்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். தொழில் தொடங்குபவர்களும், தொழில் செய்து வருபவர்களும் இதனை ஒரு சிறு ஆலோசனையாக எடுத்துக் கொண்டு உங்களது வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி அடையுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com