
கூட்டு வட்டி உலகின் எட்டாவது அதிசயம் என்று கருதப்படுகிறது. அந்த எட்டாவது அதிசயத்தின் பலனை சரிவர பயன்படுத்திக் கொள்ள மூன்று விஷயங்கள் முக்கியம். அவையாவன..
1. சீக்கிரமாக கூட்டுவட்டித் திட்டத்தில் முதலீட்டைத் தொடங்குவது,
2. தொடர்ந்து கூட்டுவட்டித் திட்டத்தில் முதலீட்டை செய்வது,
3. பணவீக்கத்தை ஒட்டி முதலீட்டை வருடா வருடம் அதிகரிப்பது,
இந்த மூன்றின் மூலம் பணத்தைக் கூட்டு வட்டித் திட்டத்தில் நம்மால் நன்றாக பெருக்க முடியும். பணவீக்கத்தினையும் சமாளிக்க முடியும். இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. சீக்கிரமாக கூட்டுவட்டித் திட்டத்தில் முதலீட்டைத் தொடங்குவது :
சீக்கிரமாக முதலீடு செய்யத் தொடங்குவது நலம்.
ஒருவர் ரூபாய் 10 இலட்சம் அவரது 32 ஆவது வயதில், 9% கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார் எனில், தங்க விதி 72 இன் படி, 72/9 = 8 வருடங்களில் பணம் இரட்டிப்பாகும்.
32 வயது = 10 இலட்சம்
40 வயது = 20 இலட்சம்
48 வயது = 40 இலட்சம்
56 வயது = 80 இலட்சம்
64 வயது = 1 கோடியே 60 இலட்சம்
72 வயது = 3 கோடியே 20 இலட்சம்
காலம் செல்ல செல்ல, ஈட்டும் வட்டிப் பணமானது கூடிக் கொண்டே செல்கிறது.
இதற்கு பதிலாக, அவர் இந்த முதலீட்டினை 24 ஆவது வயதில் தொடங்கியிருந்தால், 72 ஆவது வயதில், அவர் அடையும் பணம், 6 கோடியே 40 இலட்சம். 8 வருடம் தாமதமாக முதலீடு செய்வதால், அவர் ஈட்டிய தொகை குறைகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பே, முதலீடு தொடங்குவதன் மூலம், அவர் 3 கோடியே 20 இலட்சம் கூடுதலாகப் பெறுகிறார்.
2. தொடர்ந்து கூட்டு வட்டி திட்டத்தில் முதலீட்டைத் தொடர்வது
மாதா மாதம் தொடர்ந்து முதலீடு செய்வது நலம்.
இங்கு 24 ஆவது வயதில், ரூபாய். 10 இலட்சம் முதலீடு செய்து, பின் மாதா மாதம் ரூபாய் 10,000 செய்கிறார் என்றால், அவர் 72 வயதில் அடையும் பணம் எவ்வளவு தெரியுமா ?
17 கோடியே 13 இலட்சம் ஆயிரத்து 471 ரூபாய்.
எனவே, சீக்கிரமாகத் தொடங்கி, மாதா மாதம் தொடர்ந்து செய்து வர, முதலீடு இன்னும் அதிக பலன் கொடுக்கும்.
3. பணவீக்கத்தை ஒட்டி முதலீட்டை வருடா வருடம் அதிகரிப்பது
பணவீக்கத்தினால் ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதால் பணவீக்கத்தினை ஒட்டி நமது முதலீட்டையும் நாம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நமது முதலீடு பணவீக்கத்தினை விடவும் நன்றாக வளரும்.
இங்கு 24 ஆவது வயதில், ரூ.10 லட்சம் முதலீடு செய்து, பின் மாதா மாதம் ரூ.10,000 செய்கிறார். மேலும் தனது மாதாந்திர முதலீட்டை, வருடா வருடம் பணவீக்கத்தினை ஒட்டி 8 சதவீதம் அதிகரிக்கிறார் என்றால், அவர் 72 வயதில் அடையும் பணம் எவ்வளவு தெரியுமா ?
37 கோடியே 99 இலட்சத்து 58 ஆயிரத்து 895 ரூபாய்
இவ்வாறு இந்த மூன்றையும் கடைபிடிப்பதன் மூலம், நாம் கூட்டு வட்டியின் பயனை நமது குறிக்கோள்களுக்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்.