

குழந்தைகளுக்கு வரவு செலவு திட்டமிடலில் அடிப்படைகளை எவ்வளவு விரைவில் கற்றுக் கொடுக்கிறோமோ அவ்வளவு நல்லது. இதன் மூலம் அவசியமானவற்றிற்கு செலவு செய்யவும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்கும், பிறருக்கு உதவும் குணத்தை ஏற்படுத்தவும் இது உதவும்.
இதற்கு இந்த மூன்று ஜாடி விதிமுறை ஒரு சிறந்த வழியாக இருக்கும். குழந்தைகளுக்கான மூன்று ஜாடிகள் விதி என்பது குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பண மேலாண்மை மற்றும் நிதி ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் ஒரு எளிய அதேசமயம் சிறந்த வழிமுறையாகும்.
இந்த மூன்று ஜாடிகள் விதிப்படி குழந்தைகளுக்கு பாக்கெட் மணியாகவோ அல்லது பரிசாகவோ கிடைக்கும் பணத்தை ஒரே உண்டியலில் போடாமல் செலவு, சேமிப்பு மற்றும் பகிர்வு என லேபிள் இடப்பட்ட மூன்று தனித்தனி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஜாடிகளில் பிரித்து வைக்கப் பழகவேண்டும்.
குழந்தைகளுக்கு பாக்கெட் மணியை மூன்று ஜாடிகளாக பிரித்துக் கொடுப்பது சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு சேமிப்பு மற்றும் நிதி ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கு புத்திசாலித் தனமான பணப்பழக்கங்களை வளர்க்க உதவும் ஒரு எளிய வழிதான் இந்த மூன்று ஜாடிகள் முறை.
அதாவது சேமித்தல், செலவழித்தல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல். இந்த மூன்று ஜாடிகள் விதி மூலம் பணம் என்பது செலவு செய்வதற்காக மட்டுமல்ல, எதிர்காலத் தேவை மற்றும் பிறருக்கு உதவுவதற்கும் உரியது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
செலவு ஜாடி (Spend Jar):
குழந்தைகள் தங்கள் அன்றாட சிறு செலவுகளுக்குப் பயன்படுத்தும் தொகை இது. அதாவது அன்றாட சின்ன சின்ன ஆசைகளை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள இது உதவும். உதாரணத்திற்கு தங்களுக்கு பிடித்தமான சிற்றுண்டி அல்லது விளையாட்டுப் பொருட்கள் வாங்க இந்த ஜாடியில் உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம். சாக்லேட், பொம்மைகள், பேனா, பென்சில் போன்றவற்றை வாங்க குழந்தைகள் இந்த பணத்தை தன்னிச்சையாக பயன்படுத்தலாம்.
இதன் மூலம் வரம்பிற்குள் செலவு செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்வதுடன், பணத்தின் உடனடி பயன்பாடு என்ன என்பதை புரிந்துகொள்ளவும் உதவும். இது பொறுப்பான செலவினப் பழக்கத்தை உருவாக்குவதுடன் பணத்தை முறையாக நிர்வகிக்க கற்றுக்கொள்ளவும் உதவும்.
சேமிப்பு ஜாடி (Save Jar):
இது எதிர்காலத் தேவைகளுக்கானது. சிறுவர்கள் நீண்ட கால இலக்குகளை உதாரணத்திற்கு ஒரு புதிய சைக்கிள் அல்லது விலை உயர்ந்த புத்தகம் போன்றவற்றை நிர்ணயித்து, அதற்குத் தேவையான பணத்தை சேமிக்க இந்த ஜாடி உதவுகிறது. திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தை இது உருவாக்குகிறது.
சேமிப்பு ஜாடி குழந்தைகளுக்கு இலக்குகளை நிர்ணயித்து செயல்பட கற்றுக் கொடுக்கிறது. அதற்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத்தான் இதை சேமிக்கிறோம் என்பதை உணர்ந்து சேமிக்க வேண்டும். அப்போதுதான் பொறுப்புணர்வு அதிகமாகும். எவ்வளவு அதிகமாகப் பணத்தை சேமிக்கத் தயாராக இருக்கிறார்களோ அவ்வளவு விரைவில் அந்த இலக்கை அவர்களால் அடையமுடியும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டத் தவறவேண்டாம்.
பகிர்வு ஜாடி (Share / Give Jar):
சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் ஜாடி இது. இது மற்றவர் களைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறது. ஏழை எளியவர்களுக்கு உதவுவது அல்லது பிறருக்கு பரிசுகள் வாங்குவது போன்ற நற்பண்புகளை கற்றுக் கொடுக்க இது பயன்படுகிறது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் நற்பண்பை வளர்க்க உதவும் இந்த பணத்தை நண்பர்களின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க, தொண்டு நிறுவனங்களுக்கு தானம் செய்ய என்று பயன்படுத்தலாம்.
இதன் மூலம் பிறருக்குக் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி, இரக்க குணம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்றவை வளரும். இதன் மூலம் ஒரு சிறிய உதவியும் கூட சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு சொல்லித்தரலாம்.
இதை எப்படி செயல்படுத்தலாம்?
உதாரணத்திற்கு உங்கள் குழந்தைக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதை சமமாகவோ அல்லது செலவுக்கு ரூபாய் 40, சேமிப்புக்கு ரூ.40 பகிர்வுக்கு ரூ.20 எனப் பிரித்து ஜாடிகளில் போட ஊக்குவிக்கலாம்.
பணத்தை சேமிக்கப் பயன்படுத்தும் ஜாடிகள் வெளிப்படையானதாக (transparent) இருப்பது நல்லது. அப்போதுதான் பணம் நிறைந்து வருவது அவர்களின் கண்ணுக்குத் தெரிந்து, மேலும் மேலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அது அவர்களை உற்சாகப்படுத்தும்.
குழந்தைகள் சேமிப்பு ஜாடியில் குறிப்பிட்ட தொகையை சேர்க்கும் போது பெற்றோர்களும் தங்கள் பங்கிற்கு ஒரு தொகையைப் பரிசாக வழங்கி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தலாம்.
இப்படி வரவு செலவு திட்டங்களில் பிள்ளைகள் நன்கு தேர்ச்சி பெற்றதும் அடுத்த கட்டமாக அவர்களை அருகில் உள்ள வங்கிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழைத்துச் சென்று அவர்களின் முதல் கணக்கை திறக்க உதவலாம். இதன் மூலம் வங்கியை பற்றியும், பணத்தை சேமிப்பதன் மூலம் கிடைக்கும் வட்டியைப் பற்றியும், பணத்தை எவ்வாறு சேமிப்பது மற்றும் பாதுகாப்பாக வைப்பது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்த 3 ஜாடி விதிகள், பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டிய வரவு செலவு திட்டமிடுவதைப் பற்றியும், பணத்தை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பது பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்தும். இப்படி சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு அடிப்படைகளை கற்றுக்கொடுப்பது குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தவும் உதவும்.
இந்த எளிய நிதிப் பயிற்சியை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்கள் வருங்காலத்தில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, தங்களின் சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரச் சுதந்திரத்தையும், பிறருக்கு உதவும் உன்னத குணத்தையும் கொண்ட பொறுப்புள்ள குடிமக்களாக வளர்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: