

கடன் அட்டை, கிரெடிட் கார்டு, என்பது அத்தியாவசியம் என்று ஆகிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. நீங்களே விரும்பாவிட்டாலும் போன் செய்தோ முகாம் போட்டோ திணித்து விடுகிறார்கள். ஒன்று இரண்டு அட்டைகள் பரவாயில்லை. பத்து பன்னிரண்டு அட்டைகள் வைத்துக்கொண்டு சிக்கித் திணறும் நபர்கள் இருக்கிறார்கள்.
கடன் அட்டை அடிப்படையில் என்ன செய்கிறது?
கையில் காசு இல்லாவிட்டாலும் செலவழிக்கும் துணிவைத் தருகிறது. எதிர்பாராத அவசர அவசிய செலவுகளுக்குக் கடன் அட்டைப் போல கை கொடுக்கும் கர்ணப்பிரபுவை காண முடியாது. ஒரு மாதம்/ அடுத்த மாதம் கட்டிக்கொள்ளலாம் என்பது அந்தத் தருணத்தில் வரமாகவே இருக்கும். அந்த சமயத்தில் செலவின் அவசியம் கருதி, யாரிடமும் கையேந்தாமல் அட்டையைப் பயன்படுத்திச் சூழலைச் சமாளித்து விடலாம்.
ஆனால் நாம் அதற்கு மட்டுமா பயன் படுத்துகிறோம்? எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் என்றல்லவா பாட்டுப் பாடி கூத்தடிக்கிறோம்!
ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்குவதற்கும், கடன் அட்டையில் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து இருக்கிறீர்களா. அடுத்தமுறை செய்து பாருங்கள்.
பணம் கொடுத்து பொருள் வாங்கினால் பேரம் பேசத்தோன்றும், பேரம் சாத்தியமில்லையெனில் இன்னும் கொஞ்சம் குறைவான விலையில் பார்ப்போமே என்ற தேடலையாவது தரும். கவுன்ட்டரில் பணம் கொடுக்கையில், பர்ஸில் மீதம் இருக்கும் தொகையை எண்ணத்தோன்றும். சில சமயங்களில் இச்செலவு இப்போது அவசியம் தானா தள்ளிப் போடலாமா என்று நினைவை உருவாக்கும். பலமுறை அச்சிந்தனை வெற்றிபெறும். அவசியமான பொருளையும், சரியான விலையிலும், தேவை கருதியும் நாம் வாங்குவோம்.
கடன் அட்டை இந்த நினைப்பைத் தரவே தராது. தேய்த்துவிடு பார்த்துக்கொள்ளலாம் என்கிற அசட்டுத் துணிச்சலைத் தரும். தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் திறன் இல்லாதவருக்கு அது பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
எனது நண்பன் ஒரு சமயத்தில் எந்த வங்கி கடன் அட்டை கொடுத்தாலும் தபால் தலை சேகரிப்பாளர்கள் மனநிலையில் பெற்றுக் கொண்டே இருந்தான். ஒரே சமயத்தில் பத்து வங்கி அட்டைகள் வைத்திருந்தான். சீட்டுக் கட்டினை குலுக்குவது போல புரட்டிக் காட்டுவான். கணக்கற்று செலவழித்து சிக்கினான்.
சுழற்சிமுறை செலவிலங்கள் ஒருஅட்டையில் வாங்கிய கடனை மறு அட்டை கொண்டு அடைப்பது, பணம் செலுத்தும் தவணையை தள்ளிப் போடுவது, குறைவாக கட்டி மீதம் வைப்பது, வேறிடத்தில் கடன் பெற்று இந்த கடனை அடைப்பது என்ற செய்யக் கூடாத தவறுகள் அனைத்தையும் செய்தான்.
அவமானம், ஊரை விட்டு ஓடுவது, யார் கண்ணிலும் படாமல் வாழ்வது என்ற நரக வேதனையை அனுபவித்தான். மீண்டு வர பல வருடம் ஆனது என்றாலும், அனைத்து வங்கிகளாலும் சிபில் ஸ்கோர் ரேடிங்கால் தடை செய்யப்பட்டான். வீட்டு கடனுக்கு தனியார் நிறுவனத்தில் அதிக வட்டியில் கடன் வாங்கி மூச்சு திணறி நிற்கிறான் இப்போதும்.
இருபது வருடங்களாக ஒன்று அல்லது இரண்டு கடன் அட்டைகள் மட்டுமே வைத்துக் கொண்டு குறித்த தேதியில் முழுப் பணத்தையும் அடைத்து விட்டு தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன் நான். மாத சுழற்சியை கண்காணித்து அதாவது, ஒவ்வொரு மாதமும் 23ம் தேதி அந்த மாத செலவினங்கள் பணம் கட்ட வேண்டி வரும் என்றால் அதை அறிந்து திட்டமிடக் கூடிய பெரிய செலவுகளை அடுத்த நாட்களில் வாங்குவேன். முழுமையாக அந்த பயனை அடைவேன். இந்த ஒழுக்கம் இருந்தால் கடன் அட்டை மிகவும் உபயோகமான பொருள் தான்.
அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி சலுகைகள் கொடுக்கும் போது, தேவையான தள்ளிபோடப்பட்ட பொருள்களை வாங்குவது இன்னும் சிறப்பையும், பயனையும் கூட்டும்.
அந்த கிரெடிட் கார்ட் அட்டை செலவழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலிருந்து காசை எடுத்துவிடக்கூடாது. அதிக வட்டியில் பெறப்படும் கடன் அது. கவனம் தேவை.
நம்மை வாங்கச் செய்வது தான் அவர்களது நோக்கம். செலவழிக்க வேண்டும் என்ற குதிரை கட்டுப்பாட்டை மீறி ஓடத் தான் எத்தனிக்கும். அதன் வேகமும் பாய்ச்சலும் நம்மை மயக்கமுறத்தான் செய்யும். வாங்குவதை எப்போது, எவ்வளவு, எதற்கு வாங்கவேண்டும் என்ற கடிவாளம் நம்மிடமிருந்தால் அந்த குதிரை எவ்வளவு முரட்டுத்தனத்துடன் இருந்தாலும் சமாளிக்கலாம். சுகமான சவாரியும் செய்யலாம்.
நெருப்பை உபயோகிப்பதை போல... விளக்கு ஏற்ற அடுப்பெறிக்க என்ற அத்தியாவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துவோம். கண்டவற்றை எரிப்பது, நம்மை தீயிட்டுக் கொள்வது என்ற விபரீதங்கள் வேண்டாம்.
வள்ளுவன் மட்டும் கடன் அட்டை காலத்தில் வாழ்ந்திருந்தால் இதைப் பற்றி ஒரு அதிகாரம் நிச்சயம் எழுதியிருப்பார். குறைந்தது இது போல….
தேவையறிந்து தேய்ப்போறே திறன்பெற்றோர், மற்றோர்
தன் இடும்பை அறியாதார்!