
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமக்கான அனைத்து சேவைகளும் மிக எளிதாகவே கிடைக்கின்றன. அதில் ஒன்று தான் வங்கிச் சேவைகள். சம்பளம் முதல் ஓய்வூதியம் வரை அனைத்து விதமான பணப்பரிமாற்றங்களும் வங்கிகள் மூலமாகவே நடக்கின்றன. வளர்ந்து வரும் பொருளாதார காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவருக்குமே வங்கிக் கணக்கு இருக்கிறது. சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு என இருவிதமான வங்கிக் கணக்குகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இதில் பலரும் சேமிப்புக் கணக்கையே பயன்படுத்துகின்றனர்.
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் வங்கிகள் இதற்கு அபராதம் விதிக்கும். ஒருசிலர் அளவுக்கு அதிகமாகவே சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்திருப்பர். இது பாதுகாப்பான நடைமுறை தான் என்றாலும், இதிலிருந்து சில கூடுதல் பலன்களைப் பெற குறுகிய கால முதலீடுகளை நாடலாம்.
ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தைப் பொறுத்தே கடன் மற்றும் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் அமைகிறது. சமீப காலமாக ரெப்போ வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், முதலீடுகளின் மீதான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. இருப்பினும் நீண்ட கால முதலீடுகளுக்கு எவ்வித இழப்பும் நேராது. முதலீடுகளுக்கு எப்படி வட்டி வழங்கப்படுகிறதோ அதேபோல், சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கும் வங்கிகள் வட்டியை வழங்குகின்றன. ஆனால் இதற்கான வட்டி மிகவும் குறைவாக இருக்கும். அதாவது 2.50% முதல் 2.75% வரை மட்டுமே வட்டி அளிக்கப்படும். ஆனால், இந்தப் பணத்தை குறுகிய கால முதலீடுகளில் செலுத்தினால் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.
சேமிப்புக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ரெக்கரிங் டெபாசிட் (RD) முறையில் மாதந்தோறும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு 7.5% வரை வட்டி கிடைக்கும் என்பதால், சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.
அடுத்ததாக குறுகிய கால அடிப்படையில் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் உங்களுக்கு கிடைக்கும் வட்டித்தொகையானது அதிகம். சேமிப்புக் கணக்கில் அதிகளவில் பணம் இருக்கும் போது, செலவுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் இந்த முதலீட்டை நீங்கள் தொடரலாம். முதலீட்டைத் தொடங்கிய பின் ஒருவேளை அவசர செலவு ஏற்பட்டால், முதலீட்டை நிறுத்தி விட்டு பிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து சேமிப்புக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
சேமிப்புக் கணக்கு பணத்தில் இருந்து கூடுதல் பலன்களை ஈட்ட லிக்விட் ஃபண்ட் முதலீடும் மற்றுமொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு கீழ் வருவதால், குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். முதலீடு செய்த பின் நாம் விரும்பும் நேரத்தில் முதலீட்டை விலக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இத்திட்டத்தில் உள்ளது. இதில் 5% முதல் 6% வரையில் வட்டி கிடைக்கும் என்பதால் குறுகிய கால முதலீட்டிற்கு நல்ல பலனளிக்கும். வரி விதிப்பு கண்ணோட்டத்தில் பார்த்தாலும் லிக்விட் ஃபண்ட் முதலீடு சாதகமாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.