ஒரு நல்ல முதலீடு என்றால் என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

Investment
InvestmentImg. Credit: Corporatefinanceinstitute
Published on

நாம் முதலீடு என நினைத்து சேமிக்கும் அனைத்துமே முதலீடாகாது. ஒரு நல்ல முதலீட்டில் நம் பணத்திற்கான பாதுகாப்பு இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் சேமிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஒரு நல்ல முதலீடு எது என்பதை உங்களுக்கு விளக்குகிறது இந்தப் பதிவு.

முதலில் நாம் ஏன் முதலீடு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். வருங்காலத் தேவையை மனதில் கொண்டு தான் இங்கு பலரும் முதலீட்டில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், குறைந்த காலத்திலேயே அதிக பணம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் ஏமாறுவதும் உண்டு. முதலீட்டைப் பொறுத்த வரையில் நமது கவனம் முழுக்க பணத்தின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் முதலீடு செய்தால் பணத்திற்கான பாதுகாப்பு, பணம் இரட்டிப்பாகுதல் மற்றும் முதிர்ச்சி காலத்தில் கைக்கு சரியாக கிடைத்து விடுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும் நிலையில், இதனைப் பாரம்பரிய முதலீடு மற்றும் நவீனகால முதலீடு என இரண்டாகப் பிரிக்கலாம். பாரம்பரிய முதலீடாக வங்கிகளில் சேமித்தல் மற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களைக் கூறலாம். அசல் தொகைக்கும், வட்டித் தொகைக்கும் எந்தப் பிரச்சினையும் இதில் வராது.

ஆனால், புதிதாய் முளைத்துள்ள நவீனகால முதலீட்டில் பணத்திற்கான பாதுகாப்பு என்பது சற்று குறைவு தான். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடு போன்ற நவீனகால முதலீடுகளில் பணத்தை மோசடி செய்யும் வாய்ப்புகள் இல்லை என்றாலும், முதலீட்டின் மதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.

நடைமுறையில் சாத்தியமே இல்லாத வகையில் குறைந்த முதலீட்டு பணத்திற்கு அதிகளவில் வருமானம் தருகிறோம் என்று உங்களை ஏமாற்றும் மோசடிக் கும்பலிடம் இருந்து எப்போதும் கவனமாக இருங்கள். இவர்கள் நமதே ஆசையைத் தூண்டி, நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள். ஏனெனில் இதுபோன்ற கண்களை மட்டுமே கவரும் திட்டங்கள் எதுவும் ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் வராது.

இதையும் படியுங்கள்:
ரெக்கரிங் டெபாசிட் vs பிக்சட் டெபாசிட்: எதில் முதலீடு செய்தால் அதிக இலாபம்?
Investment

இன்று நாம் முதலீடு செய்யும் பணம், அவசரச் சூழ்நிலையில் நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும். நிதி நெருக்கடியின் போது யாரையும் எதிர்பார்க்காமல், நமது முதலீட்டை நாம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதலீடு இருத்தல் அவசியமாகும்.

நாம் ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்றால், நமக்கு நல்ல இலாபம் கிடைக்க வேண்டும். நிலையான வருமானத்தின் கீழ் வரும் திட்டங்களாக ஃபிக்சட் டெபாசிட் மற்றும் கடன் பத்திரங்களை இதற்கு சான்றாக கூறலாம். பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை மூலதன அதிகரிப்புத் திட்டங்களின் கீழ் வரும். நமது முதலீடு இவையிரண்டிலும் கலந்து இருப்பது அவசியமாகும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், குறுகிய காலத் தேவைக்கு நிலையான வருமானத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலத் தேவைக்கு மூலதன அதிகரிப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரே மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வதை விடவும், பல்வேறு அம்சங்கள் நிறைந்த மற்ற திட்டங்களிலும் நாம் கவனம் செலுத்தினால், நம்முடைய முதலீடு நல்ல முதலீடாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com