பணத்தை விரைவாக சேமிப்பதற்கான யுக்திகள்!

Savings
SavingsImg. credit: bringyourfinancestolife.com

தேவையற்ற செலவுகள் நமது சேமிப்பு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றன. இதனைத் தடுத்து பணத்தை விரைவாக சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.

சிக்கனத்தின் வெளிப்பாடு பணத்தைச் சேமிப்பது மட்டுமல்ல, நாளைய தேவைக்கான முன்கூட்டிய சிந்தனையும் தான். இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிகளவில் உள்ளனர். இப்பொழுது குடும்பத் தேவையை சமாளித்து விடுகிறோம். ஆனால் வருங்காலத்தில் விலைவாசி எப்படி இருக்குமோ! எப்படி அனைத்தையும் சமாளிப்பது என்ற கவலை அனைவரது உள்ளத்திலும் இருக்கும். இருப்பினும் வெகுசிலரோ இன்றைய நாளை மகிழ்ச்சியாக கடந்து விட்டால் போதும், நாளைய வாழ்வு பற்றி எனக்கு கவலையில்லை என்பது போல இருப்பார்கள். ஆனால், இருவேறு மனநிலை கொண்ட நடுத்தர மக்களின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம் தான்.

நாள்தோறும் செலவாகும் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி பணத்தை விரைவாக சேமிக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் நினைப்பில் மட்டுமே வைத்திருந்தால் எதுவும் நடக்காது. அதற்கான திட்டமிடலை முறையாக செயல்முறையில் காட்ட வேண்டும். பணத்தை விரைவாக சேமிக்க உங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பொறுத்து என்னென்ன திட்டங்களை வகுக்கலாம் என நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

“வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற பழமொழிக்கு ஏற்ப வரவுக்கு மீறிய செலவுகள் செய்வதை முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது தான் சேமிப்பிற்கான முதல்படி.

ஒரு மாதத்தில் ஒவ்வொரு நாளும் என்னென்ன செலவுகள் மற்றும் எதற்காக செலவு செய்கிறீர்கள் என்பதை ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். மாதத்தின் கடைசியில் நீங்கள் செய்த செலவுகளை பார்வையிடுங்கள். இதன் மூலம் தேவையான செலவு எது? தேவையில்லாத செலவு எது? என்பதை உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அடுத்த மாதத்தில் இருந்து தேவையற்ற செலவுகளைக் குறைத்து விட்டால், சேமிப்பிற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
அஞ்சலக சேமிப்பு எனும் அருமையான முதலீட்டு வாய்ப்புகள்!
Savings

அடுத்ததாக ஒரு மாதத்திற்கு இவ்வளவு பணம் தேவைப்படும் என பட்ஜெட் போட்டு, செலவுகளை அந்த பட்ஜெட்டுக்குள் அடக்குவதும் சேமிப்பை ஊக்கப்படுத்தும். ஒருவேளை பட்ஜெட்டைத் தாண்டி உங்கள் செலவுகள் சென்றால், அதனை அடுத்த மாதச் செலவுகளில் ஈடு செய்ய முயற்சிக்க வேண்டும்.

அதிகளவில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், அவ்வப்போது மிதிவண்டியைப் பயன்படுத்தினால், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தலாம். இதுமாதிரி உங்களால் எதிலெல்லாம் மிச்சப்படுத்த முடியுமோ அதைத் தயங்காமல் செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற வீண் சிந்தனையைத் தூக்கி எறியுங்கள்.

மாதக் கடைசியில் உங்கள் கையில் எவ்வளவு தொகை மிச்சம் இருக்கிறதோ, அந்தத் தொகைக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். எடுத்துக்காட்டாக ஒரு மாதத்தில் செலவுகள் போக குறைந்தபட்சம் ரூ.1,000 உங்கள் கையில் இருந்தால் அதனை அஞ்சல் அலுவலகத் திட்டம் அல்லது வங்கித் திட்டங்களில் மாதாமாதம் முதலீடு செய்யத் திட்டமிடலாம். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் வெகு விரைவாக உங்கள் முதலீடு பல மடங்காக பெருகும் என்பதை அறிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது. அதேநேரம் நம்பிக்கையற்ற சிட்ஃபண்டுகளில் பணத்தைப் போட்டு ஏமாற வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com