
இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.12 இலட்சத்தைத் தாண்டினால் வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தனிநபர் வருமானத்தை மறைக்கவே முடியாது. அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் கண்காணிக்கப்படுகின்றன. இன்று பலருக்கும் சம்பளம் ஆன்லைன் வழியாக செலுத்தப்படுவதால், தனிநபர் ஆண்டு வருமானம் நிரந்தர கணக்கு எண்ணில் பிரதிபலிக்கும். ஆண்டு வருமானம் அதிகரித்தாலும், திடீரென உங்கள் வங்கிக் கணக்கில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டாலோ அது வருமான வரித்துறையின் கவனத்திற்கு சென்று விடும்.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மட்டுமின்றி அதிக மதிப்பிலான ரொக்கப் பணத்தைப் பரிமாற்றம் செய்தாலும் அது வருமான வரித்துறையின் கவனத்திற்கு சென்று விடும். ஒருவரின் வருமானத்திற்கும், செலவுகளுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள நவீன தொழில்நுட்பங்களை வருமான வரித்துறை பயன்படுத்துகிறது. ஒருவரின் வருமானத்திற்கு பொருத்தமில்லாத செலவுகளையும் வருமான வரித்துறை கண்காணித்து, விசாரணை மேற்கொள்ளும். அவ்வகையில் எந்தெந்த ரொக்கப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
பிக்சட் டெபாசிட்:
அதிக வட்டி கிடைக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு என்றுமே முதலிடம் தான். இத்திட்டத்தில் ரொக்கமாக ஆண்டிற்கு ரூ.10 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்தால், அது வருமான வரித்துறையின் கவனத்திற்கு செல்லும். பணத்திற்கான தெளிவான ஆதாரத்தை வைத்திருத்தல் அவசியம்.
சேமிப்புக் கணக்கு:
ஒருசிலர் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்வதுண்டு. அப்படி செய்யும் போது ஆண்டிற்கு ரூ.10 இலட்சத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்திற்கான ஆதாரம் தெளிவாக இல்லையென்றால் வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
பங்கு முதலீடு:
மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றை ரொக்கப் பணம் கொண்டு வாங்கினால், அதுகுறித்த தகவல்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்த முதலீடு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், வருமான வரித்துறை விசாரணையை மேற்கொள்ளும்.
ரியல் எஸ்டேட்:
நிலமோ அல்லது வீடோ வாங்கினால் ரொக்கமாக பணம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும் போது, பணத்திற்குரிய சரியான ஆவணங்கள் கேட்கப்படலாம். ரியல் எஸ்டேட்டில் ரொக்கமாக பணம் செலுத்தும் வரம்பு நகரங்களில் ரூ.30 இலட்சமாக இருக்கிறது. இந்தத் தொகைக்கும் சரியான ஆவணங்கள் இல்லையென்றால் வருமான வரித்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரெடிட் கார்டு பில்:
பொதுவாக பலரும் கிரெடிட் கார்டு பில்லை ஆன்லைன் அல்லது காசோலை வழியாக செலுத்துவார்கள். இந்த பில் தொகையை மாதந்தோறும் ரூ.1 இலட்சத்திற்கும் மேல் ரொக்கமாக செலுத்தினால் கவனமாக இருக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து கிரெடிட் கார்டு பில்லை செலுத்தினால், பணம் எப்படி வருகிறது தெடர்பான சந்தேகம் வருமான வரித்துறைக்கு ஏற்படும். பிறகு விசாரணையை மேற்கொள்ளும். ஆகையால் பணத்திற்கான உரிய ஆதாரங்களை வைத்திருப்பது நல்லது.