வருமானத்தில் செலவு போக மிஞ்சுவதை சேர்த்து வைப்பது தான் சேமிப்பு (Money savings) என்று நிறைய பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேமிப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதி பணத்தை தான் செலவழிக்க வேண்டும். பணத்தை திட்டமிடுவதற்கு நீங்கள் பெரிய பொருளாதார மேதையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வகையில் கைக்கு வரும் பணம் எப்படி, எங்கு போக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சில வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வர உண்டியலை பயன்படுத்துங்கள்.
1. இளம் வயதில் வேலைக்கு சேர்ப்பவர்கள் தங்கள் வருமானத்தில் 50% வரை சேமிக்கலாம். குடும்ப பொறுப்புகள் வந்த பிறகு செலவுகள் அதிகமாகும் என்பதால் 50 சதவிகிதம் வரை சேமிக்க தவறக் கூடாது. இப்படி செய்வதன் மூலம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
2. ஒற்றை வருமானத்தை மட்டும் நம்பி இருக்காமல் திறமையை வைத்து ஏதாவது பகுதி நேர வேலை செய்யலாம். அதோடு நீங்கள் சம்பாதிப்பது போலவே உங்கள் பணத்தையும் உங்களுக்காக சம்பாதிக்க வைக்க, வீட்டு மனை வாங்குவது, கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது, அதிக பணம் வரும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
3. அடுத்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதற்காக எந்த பொருளையும் வாங்காமல் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
4. அவசர செலவுகளுக்காக கொஞ்சம் பணத்தை தனியாக வைத்திருக்க வேண்டும். இந்த பணம் உங்கள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகிறதோ அதைவிட மூன்று மடங்கு தனியாக இருக்கட்டும். இந்த பணத்தை வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள்.
5. புது வாகனம் வாங்குவது, குழந்தைகளின் கல்லூரி சேர்க்கை, திருமணம் வீடு கட்டுவது என சில இலக்குகளை தீர்மானித்து எவ்வளவு தேவையோ அதற்கேற்றவாறு திட்டமிட்டு இன்றிலிருந்தே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும் .
6. கூட்டு வட்டியின் மதிப்பை அறிந்து சேமிப்பு திட்டங்களில் செய்யும் முதலீடு சுமார் 6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். 24 வயதில் இவ்வாறு சேமிக்க ஆரம்பித்தால் 60 வயதில் 64 மடங்காகி ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருக்க உதவி புரியும்.
7. ஆடம்பரத்துக்கு கடன் வாங்குவதை தவிர்த்து அவசியத்துக்காக கடன் வாங்கலாம். மதிப்பு இழக்கும் பொருட்களான உதாரணமாக லேப்டாப், செல்போன் போன்றவற்றை கடனில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம் மதிப்பு உயரும் பொருட்களான வீடு, மனை போன்றவற்றை கடனில் வாங்குவது தப்பில்லை.
8. சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியை விட கடனுக்கு தரும் வட்டி அதிகமாக இருந்தால், முதலில் கடனை அடைத்து விட்டு பிறகு சேமிக்கத் தொடங்கலாம்.
9. குடும்ப செலவுகள் அனைத்தையும் பட்ஜெட் போட்டே செலவு செய்ய வேண்டும். மேலும் பட்ஜெட்டில் பற்றாக்குறையோ, அதிக செலவோ ஏற்பட்டு விடக்கூடாது.
10. குடும்பத்துக்கு போதுமான அளவு மருத்துவ காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதனால் எதிர்பாராத துயரங்களின் போது குடும்பத்திற்கு கை கொடுக்கும்.
மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு பணத்தை திட்டமிட்டு செலவு செய்தால், பற்றாக்குறை என்ற நிலையே ஏற்படாது.
குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வர உண்டியலை பயன்படுத்துங்கள்.