பங்குச் சந்தையில் கடன் வாங்கி முதலீடு செய்தால், என்ன ஆபத்துகள் விளையும்? 

Loan
Loan

சிலர் பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்ட ஆசைப்பட்டு, கடன் வாங்கி முதலீடு செய்கின்றனர். அது மிகவும் ஆபத்தானது. அதனைப் பற்றி பார்ப்போம்.

பங்கு சந்தையில் கடன் வாங்கி முதலீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள்:

  • கடன் வட்டித் தொகையினால், பங்கு சந்தை லாபம் கேள்விக் குறி ஆகிறது; கடன் வாங்குவதன் மூலம், நீங்கள் பங்கு சந்தையில் லாபம் ஈட்டினாலும் கூட, அது நஷ்டம் ஆகவே பொதுவாக முடியும்.

    உதாரணமாக நீங்கள் தனிநபர் கடன் வாங்குவதாக எடுத்துக்கொள்வோம். அது சராசரியாக 14 முதல் 18 சதவீத வட்டி விகிதம் உடையது. நாம் அதிகபட்சமான 18 சதவிகித கடன்வட்டி விகிதத்தைஎடுத்துக் கொள்வோம். எனவே நீங்கள் பங்கு சந்தையில் லாபம் பார்க்க வேண்டுமெனில் 18 சதவிகிதத்தை விட , அதிகமான லாபத்தை பங்கு சந்தையில் பணத்தை ஈட்ட வேண்டும். அது எளிதான காரியமல்ல. பிரத்யேக மென்பொருள், பிரத்யேக குழுவினைக் கொண்ட, பல நிபுணர்களே பங்கு சந்தையில் அத்தகைய லாபத்தை ஈட்ட முடிவதில்லை என்பது இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

  • கடன் காலவரையறை உடையது...

    பங்குசந்தை கால வரையறையற்றது: நடிகர் சத்யராஜ் விக்ரம் படத்தில் கூறும் டயலாக் போல், பங்கு சந்தை கேரக்டரை புரிந்துக் கொள்வது கடினம். எப்போது திடீரென்று அதள பாதாளத்திற்கு செல்லும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக நீங்கள் பங்குசந்தையில் கடன் வாங்கி ஒரு லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அந்தக் கடனை நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அடைக்க வேண்டி வரும்.

    உதாரணமாக ஒரு ஆண்டு என்று கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஆனால் அந்த காலகட்டத்தில் பங்கு சந்தை இறங்குமுகமாக இருப்பின் உங்களால் கடன் மட்டுமல்ல, கடனுக்கான வட்டியும் சேர்ந்து கொண்டு பெரும் படுகுழியில் உங்களை தள்ளிவிடும். கடனுக்கு மேல் கடன் என்று வாழ்க்கை போராட்டமாகிவிடும்.

  • பங்கு விலை மதிப்பு சரிவினால், அதிகபட்ச வட்டி விகிதம்: மதிப்பை இழக்கும் சொத்திற்கு, பழைய மதிப்பில் கடன் செலுத்த நேரும் அவலம். உதாரணத்திற்கு, 18% வட்டி விகிதம் எனில், பங்குகள் விலை இறங்கும் பட்சத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கிய பங்குகளின் விலை, ரூபாய். 50,000 என்று குறைந்த போதிலும், ரூபாய். 50,000 சொத்திற்கு, கொடுக்கும் கடன் ரூபாய். 18,000. வருடத்திற்கு, கிட்டத்தட்ட 36% வட்டி விகிதத்தில், கடன் தவணை செலுத்துகிறீர்கள். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விஷயம்.

  • பங்குகளின் நீர்ப்புத் தன்மையின் (liquidity) பிரச்சனை: கடன் பிரச்சனையிலிருந்து வெளியேறி விடலாம் என, பங்கு சந்தை இறங்குமுகமாக இருந்தாலும், நீங்க பங்குகளை விற்க நினைத்தால், வாங்குவதற்கு ஆட்கள் இருப்பார்களா என்று சொல்ல முடியாது. பணம் பங்கு சந்தையில் மாட்டிக் கொண்டு தேங்கி விடும் அபாயம் உண்டு. அல்வா என்று நினைத்து சாப்பிடப் போய், அது முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், வாயில் ஒட்டிக் கொண்டு விடும், அல்வா போல் ஆகிவிடலாம்.

  • பணவீக்கத்தின் காரணமாக, லாபம் கேள்விக்குறி: பங்குசந்தை திரும்ப மேலே வருவதற்கு சில வருடங்கள் ஆகலாம். மேலே வந்து, நீங்கள் பங்குகளை விற்க நினைத்து, லாபம் அடைந்தாலும், அந்த லாபம், இதுவரை கடன் தவணைகளுக்கு செலுத்தியதை விட, அதிகமாக இருப்பது என்பது கேள்விக் குறிதான். மேலும், பணவீக்கத்தினை கருத்தில் கொண்டால், லாபம் இல்லாமல், அது நஷ்டமாக கூட ஆக நேரிடலாம்.

இதையும் படியுங்கள்:
பங்கு சந்தை வீழ்ச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி? வாங்க தெரிந்துக்கலாம்!
Loan

”I have seen more people fail because of liquor and leverage - leverage being borrowed money” Warren Buffet சாராயம் மற்றும் கடன் வாங்கி முதலீடு செய்வதன் மூலம், பல மக்கள் தோல்வியடைவதைப் பார்த்துள்ளேன் - வாரன் பபெட் எனவே, கடன் வாங்கி முதலீடு செய்வதென்பது மிகவும் அபாயகரமான விஷயம். சொந்த காசில் முதலீடு செய்து, பணம் போனால், பணம் மட்டும் தான் போனது. உங்கள் பணம் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கடன் பணம் என்றால், கடன் காரனுக்கு பதில் சொல்ல நேரிடும்.

பங்கு சந்தையில், எந்த காலத்திலும், கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம் என்பதே வரலாறு, பொருளாதா நிபுணர்களும் சொல்லும் ஆலோசனை ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com