மருத்துவ காப்பீட்டில் பிரீமியம் தொகையைக் குறைக்க என்ன செய்யலாம்?

Medical Insurance
Medical Policy
Published on

இன்றைய நவீன உலகில் ஓய்வு காலத்தில் நிச்சயமாக நமக்கென்று ஒரு நிதி பாதுகாப்புத் தேவை. மாறி வரும் உணவுப்பழக்கம் மற்றும் இயற்கை மாறுபாடுகளால் நோய்களும் அதிகரித்து விட்டன. ஆகையால், நிலையான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவ காப்பீடு அவசியமாகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அதேநேரம் இதற்கான பிரீமியம் தொகையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவ்வகையில் மருத்துவ காப்பீட்டின் பிரீமியத்தை எப்படியெல்லாம் குறைக்க முடியும் என்பதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக வயதான பிறகு ஓய்வு காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. இம்மாதிரியான நிலையில் மருத்துவ காப்பீடு இருந்தால் நன்றாக இருக்குமல்லவா! இதனை நாம் வருமானம் ஈட்டும் போதே திட்டமிட்டு செய்ய வேண்டும். அதை விடுத்து முன்னரே காப்பீடு எடுத்திருக்கலாம் என, மருத்துவ செலவுகள் அதிகரித்த பின்னர் வருந்துவதில் பயனில்லை.

நிதி சார்ந்த விஷயங்களில் திட்டமிடுதல் அவசியம். மருத்துவ காப்பீட்டிற்கு நாம் செலவு செய்யும் போதும் கூட, சரியான திட்டமிடுதல் இருந்தால் பிரீமியத்தை நிச்சயமாக குறைக்க முடியும். மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும் என நினைத்து விட்டால், உடனே எடுத்து விடுங்கள். ஏனெனில் வயதிற்கேற்ப பிரீமியம் தொகை உயரும். 50 வயதிற்கு மேல் மருத்துவ காப்பீடு எடுப்பதைக் காட்டிலும், 30 முதல் 40 வயதில் எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும். அதோடு நீண்ட காலத்திற்கு நீங்கள் பாலிசியைத் தொடர்ந்தால், கூடுதலாக போனஸ் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

மருத்துவ காப்பீட்டை ஆண்டுகளின் அடிப்படையில் எடுக்கும் போது பிரீமியம் தொகை குறையும். ஏனெனில் பிரீமியத்தை மொத்தமாக கட்டும் போது, மொத்த தொகையில் குறைந்தது 2% வரை தள்ளுபடி கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டில் ஃப்ளோட்டர் பாலிசியைத் தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும். இந்த பாலிசி ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அவசர காலங்களில் நிதி பாதுகாப்பை அளிக்கும். அதோடு வீட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு இது நிதி சார்ந்த அனுபவமாகவும் இருக்கும். வாடிக்கையாளர்களை கவர இந்த பாலிசிக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ஒருசில சலுகைகளையும் அளிக்கின்றன.

ஒருசில காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவ காப்பீட்டின் கீழ் முன்கூட்டியே பதிவு செய்தால் தள்ளுபடியை அளிக்கும். இம்மாதிரியான நேரங்களில் நாம் விரைந்து செயல்பட்டால் பிரீமியம் தொகை குறையும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவக் காப்பீட்டை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியுமா?
Medical Insurance

காப்பீடு எடுப்பவர்கள், அவசியம் தேவைப்படும் வகையில் இருக்கும் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் தேவையில்லாதவற்றை நம்மால் விலக்கி, பிரீமியத்தைக் குறைக்கலாம்.

காப்பீட்டைத் தொடங்கும் முன்பு அதிக தொகையை முதலில் கட்டினால், பிரீமியம் தொகை கணிசமாக குறையும். ஆண்டுதோறும் உடல் நலப் பரிசோதனை செய்வதற்கும் தனியே மருத்துவ காப்பீடுகள் உள்ளன. இதனைப் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை கவனிப்பதோடு, சலுகைகளையும் பெற முடியும்.

காப்பீட்டை எடுக்கும் முன், அந்நிறுவனம் தொடர்பான தகவல்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக இருக்கிறது இன்றைய டிஜிட்டல் யுகம். நாம் தான் கவனமுடன் செயல்பட்டு, நல்லதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com