

கடந்த சில நாட்களாகச் செய்தித் தாள்களிலும், டிவி விவாதங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் விஷயம் 'தங்கம் விலை' இல்லை, 'டாலர் விலை'. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் 90 ரூபாயையும் தாண்டிச் சென்றுவிட்டது. "அதனால் நமக்கென்னப்பா? நாம என்ன அமெரிக்காவிலா இருக்கோம்?" என்று சாமானிய மக்கள் நினைக்கலாம்.
ஆனால், உண்மை அதுவல்ல. நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் சிலிண்டர் முதல், கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் வரை அனைத்தின் விலையையும் தீர்மானிக்கும் சக்தி இந்த டாலருக்கு உண்டு.
யார் நிர்ணயிக்கிறார்கள் இந்த விலையை?
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாணய மதிப்பை இந்தியப் பிரதமரோ அல்லது அமெரிக்க அதிபரோ உட்கார்ந்து முடிவு செய்வதில்லை. இது 'Forex' எனப்படும் அந்நியச் செலாவணிச் சந்தையில் நடக்கும் ஒரு வியாபாரம். காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்தால் விலை ஏறுவது போலத்தான் இதுவும். உலக வர்த்தகத்தில் டாலருக்கான தேவை அதிகரிக்கும்போது அதன் விலை உயர்கிறது; இந்திய ரூபாய்க்கான மவுசு குறையும்போது அதன் மதிப்பு சரிகிறது.
ஏன் இந்தத் திடீர் வீழ்ச்சி?
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் போட்டிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் தங்கள் பணத்தை டாலராக மாற்றிக்கொண்டு செல்வதால், டாலரின் தேவை அதிகரித்துவிட்டது. இரண்டாவதாக, கச்சா எண்ணெய் விலை. இந்தியா தனக்குத் தேவையான பெட்ரோல், டீசலை வெளிநாட்டிலிருந்து டாலர் கொடுத்துத்தான் வாங்குகிறது.
எண்ணெய் விலை கூடும்போது, அதிக டாலர் தேவைப்படுகிறது. மூன்றாவதாக, அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும்போது, உலகம் முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு என்று அமெரிக்காவை நோக்கி ஓடுகிறார்கள். இதனால் இந்தியா போன்ற நாடுகளின் நாணய மதிப்பு சரிகிறது.
நமக்கு என்ன பாதிப்பு?
ரூபாயின் மதிப்பு குறைந்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 'கிடுகிடு'வென உயரும்.
பெட்ரோல், டீசலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால், போக்குவரத்துச் செலவு கூடும். இதனால் காய்கறி முதல் மளிகைச் சாமான்கள் வரை விலை உயரும்.
நாம் பயன்படுத்தும் மொபைல் போன் பாகங்கள் மற்றும் தங்கம் வெளிநாட்டிலிருந்து வருவதால், அவற்றின் விலையும் அதிகரிக்கும்.
வெளிநாட்டில் படிக்கச் சென்றிருக்கும் மாணவர்களுக்கு, இங்கிருந்து பெற்றோர் அனுப்பும் பணம் அங்கு குறைவான டாலராகவே கிடைக்கும் என்பதால் கூடுதல் செலவாகும்.
யாருக்கெல்லாம் கொண்டாட்டம்?
மென்பொருள் (IT), ஜவுளி மற்றும் மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் டாலரில் சம்பாதித்து, ரூபாயில் செலவு செய்வார்கள். அவர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும்.
துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், வீட்டுக்குப் பணம் அனுப்பும்போது, பெற்றோருக்குக் கூடுதல் ரூபாய் கிடைக்கும். இது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தும்.
ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் தொடங்குவது அல்லது நிலம் வாங்குவது மலிவாகத் தெரியும். இதனால் புதிய முதலீடுகள் உள்ளே வர வாய்ப்புள்ளது.
ரூபாய் இப்படித் தலைக்குப்புற விழுவதை இந்திய ரிசர்வ் வங்கி வேடிக்கை பார்க்காது. தன்னிடம் கையிருப்பில் உள்ள டாலர்களைச் சந்தையில் விற்று, ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க முயற்சி செய்யும். இது ஒரு தற்காலிகத் தீர்வுதான்.
மொத்தத்தில், ரூபாயின் வீழ்ச்சி என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. ஏற்றுமதியாளர்களுக்கு இது இனிப்பான செய்தி என்றாலும், இறக்குமதியை நம்பியிருக்கும் சாமானிய மக்களுக்கு இது விலைவாசி உயர்வு என்ற கசப்பான செய்தியையே தருகிறது. உலகப் பொருளாதாரம் சீராகும் வரை, நாம் கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நல்லது.