எல்ஐசி காப்பீடுகளில் பணத்தைப் போடுவதை நடுவில் நிறுத்தினால் என்ன ஆகும்?

LIC Insurance
LIC Insurance
Published on

பொதுவாக எல்ஐசி நிறுவனத்தின் முதலீடு சார்ந்த காப்பீடுகளுக்கு (endowment plan, ULIP போன்றவை), மூன்று வருடங்கள் (10 வருடங்களுக்கு மேல் உள்ள காப்பீடுகள்) அல்லது இரண்டு வருடங்கள் (10 வருடங்களுக்கு உட்பட்ட காப்பீடுகள்) காப்பீட்டுத் தவணைத் தொகை செலுத்தி விட்டால், உங்களுக்கு ஓரளவிற்கு பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு. இனிமேல் பணம் செலுத்தாத பட்சத்தில், இதுவரை கட்டிய காப்பீட்டுத் தவணைக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்டத்தொகை திரும்பக் கிடைக்கும்.

எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு, உங்கள் முன்பு இரண்டு தேர்வுகள் உள்ளன.

1. காப்பீட்டுத் திட்டத்தினை சமர்ப்பித்து விடுவது (Surrender policy) - காப்பீடு முடித்து வைக்கப்படுகிறது. இதுவரை கட்டிய தவணைகளுக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்டத் தொகை, சமர்ப்பிப்புத் தொகையாக வழங்கப்படும். இந்த சமர்ப்பிப்புத் தொகை உடனே வழங்கப்படும். காப்பீட்டின் முதிர்வு வரை காத்திருக்கத் தேவையில்லை.

உதாரணமாக, 1 லட்ச ரூபாய், 10 வருடக் காப்பீட்டில், 6 வருடங்களில் நீங்கள் நிறுத்திவிட்டால், வருடாந்திர தவணை ரூபாய். 10,000 , ஈவுத் தொகை 5,000, சமர்ப்பிப்பு விகிதம் .25 எனில் (காப்பீட்டு முதிர்வுத் தொகை x (செலுத்திய வருடங்கள் / மொத்த வருடங்கள்) + ஈவுத் தொகை ) x சமர்பிப்பு விகிதம் (1 லட்சம் x (6/10) + 5000 ) x 0.25 16,250 ரூபாய்

2. காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டு தொகையினை குறைத்து விடுவது (reduced paid up policy) - காப்பீடு முடிவதில்லை. அது தொடர்கிறது. ஆனால், காப்பீட்டுத் தொகை குறைந்துவிடும். காப்பீட்டு காலவரையறை தொடரும். காப்பீட்டின் முதிர்வுக்குப் பிறகு, காப்பீட்டுத் திட்டத்திற்கு ஏற்ப, நீங்கள் கட்டிய காப்பீட்டுத் தவணையில், குறிப்பிட்டத் தொகை திரும்பக் கிடைக்கும். இத்தகைய சமயத்தில், ஈவுத் தொகை வழங்கப்பட மாட்டாது.

உதாரணமாக, 1 லட்ச ரூபாய், 10 வருடக் காப்பீட்டில், 6 வருடங்களில் நீங்கள் நிறுத்திவிட்டால் , வருடாந்திர தவணை ரூபாய். 10,000 எனில், காப்பீட்டு முதிர்வுத் தொகை x (செலுத்திய வருடங்கள் / மொத்த வருடங்கள்) 1 லட்சம் x (6/10) = 60,000 ரூபாய் காப்பீட்டின் முதிர்வுத் தொகை

இதையும் படியுங்கள்:
ஒரு அக்கவுண்ட் மட்டும் வைத்திருப்பது ஆபத்தா?
LIC Insurance

காப்பீட்டுத் திட்டத்தினை சமர்ப்பிக்கும் தேர்வில், பணத்தின் இழப்பு அதிகம். ஆனால், பணவீக்கத்தினை கணக்கில் கொள்ளும் போது, உங்களுக்கு கிடைக்கும் பணத்தை நீங்கள் முதலீடு செய்து பெருக்க வாய்ப்புண்டு. காப்பீட்டுத் திட்டத்தினை குறைக்கும் தேர்வில், கட்டிய பணத்தின் இழப்பு குறைவு. ஆனால், காப்பீட்டின் முதிர்வு வரை காத்திருக்க வேண்டும். அப்போதும், பண வீக்கத்தின் காரணமாக, பணத்தின் மதிப்பு குறைந்திருக்கும். முதலீட்டினையும், காப்பீட்டினையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இவற்றைத் தனித்தனியாக வைத்திருப்பது நலம். இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்துவிட்டால், என்ன செய்வதென்று பார்ப்போம்.

உதாரணத்திற்கு, நீங்கள் 6 வருடங்களுக்குப் பிறகு, தவணைத் தொகை கட்டாவிட்டால், காப்பீடு குறைந்த முதிர்வுத் தொகை காப்பீடாக மாற்றப்பட்டு விடும். காப்பீட்டின் முதிர்வின் போது, நீங்கள் கட்டிய காப்பீட்டுத் தொகையில், ஒரு பகுதி உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்கள் காப்பீட்டினை சமர்ப்பித்தால், உடனே, ஒரு குறிப்பிட்டப் பகுதி, திரும்பக் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
சில்லறை முதலீட்டாளர்களே - உங்களுக்கான 5 டிப்ஸ் இதோ!
LIC Insurance

எந்த தேர்வினைத் தேர்ந்தெடுப்பதென்பது, நீங்கள் எவ்வளவு வருடம் காத்திருக்க வேண்டும், உங்களுடைய உடனடிப் பணத்தேவை, உங்களுக்குத் தேவைப்படும் காப்பீடு, உங்களால் எவ்வளவு பண இழப்பை ஏற்றுக் கொள்ள முடியும், உங்களுக்கு முன் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றைக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com