
இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கும் செயல்முறையை மிகவும் எளிதாக மாற்றி விட்டன. அதிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு, கடன் வாங்குவதற்கு அலைய வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. குறிப்பாக கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் சில நாட்களிலேயே வீட்டிற்கு வந்து விடுகின்றன. தற்போது இதனையும் எளிமைப்படுத்தும் விதமாக ஒரு புதுவித கடன், பொருளாதார சந்தையில் உலா வருகிறது. இதற்கு எந்த கார்டும் தேவையில்லை. உங்கள் மொபைல் போனில் யுபிஐ இருந்தாலே போதும். இது உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமானது தானா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
கார்டு இல்லாமல் யுபிஐ வழியாக கடன் கொடுப்பதற்கு ‘லைன் ஆஃப் கிரெடிட் (Line of Credit)’ என்று பெயர். இதனைப் பொருளாதார சந்தையில் சிலர் கிரெடிட் லைன் என்றும் அழைக்கின்றனர். வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் வருமானம் மற்றும் சிபில் ஸ்கோரை அடிப்படையாக வைத்து வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை கிரெடிட் லைனாக அளிக்கும். இந்தத் தொகை டிஜிட்டல் முறையில் உங்கள் மொபைலில் உள்ள யுபிஐ கணக்குடன் இணைந்து விடும்.
வங்கிக் கணக்கு யுபிஐ பின் எண்ணையே கிரெடிட் லைனிற்கு பயன்படுத்த வேண்டாம்.
இதற்கென தனியாக வேறொரு பின் எண்ணைப் பயன்படுத்துவது நல்லது.
ஆன்லைன் வழியாகவும் மற்றும் கடைகளிலும் பொருட்களை வாங்கும் போது, இந்த கிரெடிட் லைனைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
ஆனால் இதிலிருந்து உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ பணம் அனுப்ப இயலாது.
தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்றவற்றையும் வாங்க முடியாது.
வணிக நிறுவனங்களின் மெர்ச்சன்ட் யுபிஐ ஐடிகளோடு மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
கிரெடிட் லைன் வசதி, தனிநபர்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்களும் கடன் பெற வழிவகுக்கிறது.
கிரெடிட் லைனில் EMI வசதியும் இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
கிரெடிட் லைனில் பணம் இருக்கிறது என்பதற்காக வீண் செலவுகளைச் செய்யாமல், அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டால் உதவிகரமாக இருக்கும்.
வங்கிகள் உங்களுக்கு ரூ.1,00,000 வரை கிரெடிட் லைனில் நிதியை ஒதுக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் ரூ.50,000-ஐ மட்டுமே செலவு செய்திருந்தால், செலவு செய்த பணத்திற்கு மட்டுமே வட்டி செலுத்தினால் போதுமானது.
வருங்காலத்தில் பொருளாதாரச் சந்தையில் மிகப்பெரும் புரட்சியை கிரெடிட் லைன் ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போதைய சூழலில் இது பாதுகாப்பற்ற கடனாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
கிரெடிட் கார்டு போலவே பணத்தை செலவு செய்து விட்டு பின்னர் வட்டியுடன் செலுத்த வேண்டும். ஒருவேளை பில் தொகையை செலுத்த தாமதமானால், கிரெடிட் கார்டைக் காட்டிலும் இதில் அதிக அபராதம் விதிக்கப்படும்.
இதுதவிர சிபில் ஸ்கோரிலும் கிரெடிட் லைன் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதாவது கிரெடிட் லைனில் உங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் 30%-க்கும் மேல் செலவு செய்தால், சிபில் ஸ்கோர் குறையத் தொடங்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.