பங்குச்சந்தையில் NIFTY,SENSEX என்றால் என்ன? என்பதை பொருளாதார ரீதியில் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு. அதற்கான ஓரு எளிய விளக்கத்தை முதலில் பார்ப்போம்.
பங்குச் சந்தையும் காய்கறிச் சந்தையும் ஒரு ஒப்பீடு: காய்கறிச் சந்தையினை எடுத்துக் கொள்வோம். உங்களது வீட்டின் அருகே இரண்டு காய்கறிச் சந்தைகள் உள்ளன. அங்கு பல விதமாக காய்கறிகளை விற்கிறார்கள். இரண்டு காய்கறி சந்தையிலும், ஒரு குறியீடு தயார்செய்து உள்ளார்கள். அந்தக் குறியீடுகள், அந்தக் காய்கறிச் சந்தையில், அதிகமாக விற்கப்படும் காய்கறிகள் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளன.
அதிகமாக விற்கப்படும் காய்கறிகளின் படி, ஒவ்வொரு காய்கறிக்கும், ஒரு விகிதாச்சாரத்தினை நிர்ணயித்து உள்ளனர்.எனவே, காய்கறிச் சந்தை குறியீடு என்பதில் பின்வரும் விகிதாச்சாரம் உள்ளது. உருளைக்கிழங்கு - 35 % வெங்காயம் - 20 % தக்காளி - 20% வெண்டைக்காய் - 15% கத்தரிக்காய் - 10% இப்போது மற்றொரு அந்தக் காய்கறிச் சந்தை குறியீட்டின் மதிப்பு 100 என்று வைத்துக் கொள்வோம்.
திருவிழாக் காலங்களில், ஒருவாரம் காய்கறிகள் விலை கூடுவதாக கொள்வோம். அப்போது, 100 என்ற காய்கறி சந்தை குறியீட்டின் மதிப்பானது 120 என்று ஆகும் போது, காய்கறிகள் விலை ஏற்றமாக உள்ளது என்று தெரிய வரும். மழைக்காலம் காரணமாக 100 என்ற காய்கறி சந்தை குறியீட்டின் மதிப்பானது 80 என்று என்று ஆகும் போது, காய்கறிகள் விலை குறைவாக உள்ளது என்று தெரிய வரும்.
வின்னர் திரைப்படத்தில் பார்த்தவாறு, கைப்புள்ளைக்கே இவ்வளவு அடின்னா, எதிராளி எவ்வளவு அடி வாங்கியிருப்பான் என்று முடிவு செய்வதைப் போல, பெரிய காய்கறிகள் குறியீடே இவ்வளவு குறைஞ்சுருக்குன்னா, மற்ற சிறிய காய்கறிகளான நூன்கோல், கொத்தவரங்காய், அவரைக்காய் போன்றவைகள் இன்னும் அதிக வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் என்று காய்கறி சந்தை குறியீடு மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இதனைப் போலவே, இந்தியாவில் இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன. பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை. இவற்றில் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன.இரண்டு பங்குச் சந்தைகளும், அவற்றில் அதிகமாக வர்த்தகமாகும், அதிக சந்தை மதிப்பை உடைய ஹீரோ ஹோண்டா, விப்ரோ , இன்போசிஸ் போன்ற பெரிய பங்குகளைச் சார்ந்து, இரண்டு குறியீடுகளைப் பிரதானமாக கொண்டுள்ளன.
பாம்பே பங்குச் சந்தை ( Bombay stock exchange) - சென்செக்ஸ் குறியீடு (Sensex index) - 30 பெரிய நிறுவனங்கள் சார்ந்தது.
தேசிய பங்குச் சந்தை (National stock exchange) - நிப்ஃடி குறியீடு (NIFTY 50 index) - 50 பெரிய நிறுவனங்கள் சார்ந்தது.
இந்தப் பங்குச் சந்தை குறியீடுகள் மூலமாக, பங்குசந்தையின் நிலவரத்தினை அறிய முடிகிறது. பங்குச் சந்தை குறியீடு ஏற்றத்தில் இருந்தால், இந்தியாவில் நிறுவனங்களுக்குச் சாதகமான நிலைமை என்று கொள்ளலாம். பங்குச்சந்தை குறியீடு வீழ்ச்சி அடைந்தால், நிறுவனங்களுக்குச் சாதகமான நிலைமை இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
பங்குச்சந்தை ஆரோக்கியமாக இருப்பது நிறுவனங்களுக்கு நன்மையான விஷயம்.பொருளாதாரத்தின் ஒரு அறிகுறியாக பங்குச் சந்தை உள்ளது. பங்குச் சந்தை நிலவரமானது, பங்குச் சந்தை குறியீடுகளைச் சார்ந்து அறிந்து கொள்ள முடிகிறது.