நிதி சார்ந்த திட்டமிடல் என்று வரும்போது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அம்சம் காப்பீடு ஆகும். பல்வேறு வகையான காப்பீடுகளில் டேர்ம் இன்சூரன்ஸ் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை நிதி ரீதியாக பாதுகாக்க விரும்பும் நபர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகவும் முக்கியமானதாகும். டேர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன அது ஏன் அவசியமானது என்பதை இப்பதிவில் ஆராயவோம்.
Term Insurance: டேர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையிலான கவரேஜ் வழங்கும் ஒரு வகை ஆயுள் காப்பீடுத் திட்டமாகும். இதற்கு பொதுவாக 10 முதல் 30 ஆண்டுகள் வரை கவரேஜ் காலம் இருக்கும். பாலிசி காலத்தின்போது காப்பீடு செய்யப்பட்டவர் மரணமடைந்தால், பாலிசியில் நாமினியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகையானது வழங்கப்படும். இது இழந்தவரின் வருமானத்தை ஈடுசெய்யவும், கடன்களை செலுத்தவும் அல்லது பிற நிதிக் கடமைகளை ஈடுசெய்யவும் உதவும்.
மலிவானது: ஆயுள் காப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் டேர்ம் இன்சூரன்ஸின் கட்டணத் தொகை மிகவும் மலிவானது. இதன் பிரிமியம்கள் பொதுவாகவே குறைவாக இருக்கும். தனிநபர்கள் குறைந்த செலவில் அதிகப்படியான கவரேஜைப் பெற டேர்ம் இன்சூரன்ஸ் உதவுகிறது. நீங்கள் எவ்வளவு குறைந்த வயதில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் கட்ட வேண்டிய பிரிமியம் தொகை குறைவாக இருக்கும்.
நிதி பாதுகாப்பு: டேர்ம் இன்சூரன்ஸின் முதன்மை நோக்கம் அதை எடுப்பவர்கள் திடீரென அகால மரணமடைந்தால், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். இதன் மூலமாக கிடைக்கும் பணம் உயிரிழந்தவரின் குடும்ப செலவுகள், கடன்கள், குழந்தைகளின் கல்வி செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நிதி சார்ந்த கடமைகளை ஈடுகட்ட பயன்படலாம்.
நிலையான கட்டணம்: நீங்கள் எந்த வயதில் பாலிசி எடுக்கிறீர்களோ, அப்போது கட்டும் பிரீமியம் தொகையைதான் இறுதிவரை கட்டுவீர்கள். இதில் எவ்விதமான கூடுதல் பணமும் வசூலிக்கப்படாது. உதாரணத்திற்கு ஒரு 30 வயதில், ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் அதிகபட்சமாக மாதம் கட்ட வேண்டியதே 1000 ரூபாய்க்கும் குறைவாகவே வரும். இதேத் தொகையைத்தான் அடுத்த முப்பது ஆண்டுக்கும் செலுத்துவீர்கள்.
மன அமைதி: பாலிசி எடுத்தவர் துரதிஷ்டவசமாக உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கும் என்பது பாலிசிதாரருக்கு மன அமைதியை அளிக்கும். டேர்ம் இன்சூரன்ஸ் சவாலான நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஆதரவாக இருக்கும். மேலும் நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் அன்புக்குரியவரின் நிதி அழுத்தத்தை இது முற்றிலுமாக தீர்க்கிறது.
எனவே தனக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய நினைக்கும் அனைவருமே டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் மேலோட்டமாக மட்டுமே டேர்ம் இன்சூரன்ஸ் பற்றி தெரிவித்துள்ளேன். இது சார்ந்த முழு விவரங்களை இணையத்தில் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்ற டேர்ம் இன்சூரன்ஸை இன்றே எடுங்கள்.