
இன்றைய காலகட்டங்களில் ஒரு நிறுவனத்தின்கீழ் பணி புரிவது எத்தனைக்கெத்தனை சவால்களை கொண்டுள்ளதோ அதைவிட ஒரு படி அதிகமான சவால்கள் ஒரு தொழிலை தொடங்கி நடத்துவதில் இருக்கின்றன. கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணி வெடி இருப்பது போல ஒரு தொழிலில் எப்பொழுது பிரச்சினை எந்த விதத்தில் வரும், எது எப்போது எப்படி சறுக்கும் என்று ஒரு விதமான நிரந்தரம் இல்லாத சூழல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே எந்த ஒரு தொழிலையும் செய்வதற்கு முறையான திட்டமிடலும், செயல்பாடுகளை உற்றுக் கவனிக்கும் திறனும் மிகவும் தேவை.
பணம் வைத்துக் கொண்டுதான் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. ஒரு தொழிலை எவ்வாறு தொடங்குவது எப்படி நிர்வாகம் செய்வது என்பதற்கான திட்டமிடல் இருந்தாலே இன்றைய காலகட்டங்களில் தொழில் தொடங்குவது என்பது ஓரளவுக்கு சாத்தியமாகி உள்ளது. எனவே தொழிலை நடத்துபவர்களுக்கு, மக்களுக்கு என்ன தேவை என்ற அடிப்படை விஷயம் மிகவும் ஆழமாக தெரிந்திருக்க வேண்டும். அது சிறிய பொருளாக இருந்தாலும் கூட அதன் தேவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் வெகுஜன மக்களின் தேவை என்ன? என்பதை அறியும் நுண்ணிய திறனே ஒரு தொழிலை தொடங்குவதற்கான அடிப்படையாகும்.
ஒரு நாள் ஒரு செல்வந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ரயிலில் ஒரு பிச்சைக்காரன் வந்து ஒவ்வொருவரிடமும் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். செல்வந்தர் அழகான ஆடைகளுடன் மிடுக்காக அமர்ந்திருப்பதை கண்டதும், 'இவர் மிகவும் வசதியாக இருக்கிறார், நிச்சயம் இவரிடம் உதவி கேட்டால் ஏதாவது பெரிய அளவில் உதவி செய்வார்' என நினைத்து அவரிடம் சென்று உதவி கேட்டான். சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்த செல்வந்தர், எல்லோரிடமும் இப்படித்தான் சென்று பிச்சை எடுக்கிறாயா? என்று கேட்டார்.
அதற்கு அந்த பிச்சைக்காரன், 'ஒவ்வொருவரிடமும் சென்று பிச்சை கேட்பதுதான் என்னுடைய வேலை. சிலர் தருவார்கள், சிலர் தர மாட்டார்கள் அதற்காக நான் வருந்துவதில்லை' என்று கூறினான். 'அப்படியானால் உனக்கு பிச்சை போடுபவர்களுக்கு நீ என்ன தருவாய்?' என்று கேட்டார் செல்வந்தர். அதற்கு அவன் அமைதியாக நிற்கவே, அந்த செல்வந்தர், 'சரி நான் உனக்கு ஒன்று தருகிறேன். நீ அதை மற்றவர்களுக்கும் கொடு!' என்று கூறினார்.
எப்படியும் பெரிய தொகையாக தருவார் என நினைத்த பிச்சைக்காரன் அந்த ரயில் பெட்டியிலேயே அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் ரயில் நிற்கும் இடம் வந்ததும் அந்த செல்வந்தர் அமைதியாக இறங்கி சென்று விட்டார்.
'நான் உனக்கு தருவதை நீ மற்றவர்களுக்கும் கொடு என்று கூறினாரே, அப்படியானால் அவர் நம்மிடம் என்ன கொடுத்தார்?' என்ற கேள்வி அந்த பிச்சைக்காரனை துளைத்து எடுத்தது. ஒரு நாள் முழுதும் உட்கார்ந்து யோசித்தான். ஆனாலும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று நாட்கள் கழித்து அந்த செல்வந்தர் பேசியதை அமைதியாக யோசித்துப் பார்த்தான். 'உனக்கு பிச்சை போடுபவர்களுக்கு நீ என்ன கொடுப்பாய்?' என்ற கேள்வி அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அடுத்து வரும் நாட்களில் சாலை ஓரங்களில் மாடுகள் போடும் சாணத்தை எல்லாம் திரட்டி ஓரிடத்தில் குவித்து வைத்தான். அவை நன்கு காய்ந்தவுடன் அதனை தூளாக்கி அதனை பழைய பாலித்தீன் பைகளில் நிரப்பினான்.
மறுநாள் நடைமேடையில் அந்த சாணத்தை எல்லாம் பரப்பி வைத்து அமர்ந்து கொண்டான். அந்த வழியாக செல்பவர்கள் உரம் என நினைத்து ஒவ்வொரு பாக்கெட் எடுத்துக்கொண்டு சில்லறையை அவன் முன் போட்டுவிட்டு சென்றனர். நாளாக நாளாக, பிச்சைக்காரன் சாணத்தோடு சேர்த்து காய்கறி, தாவரக் கழிவுகள் அனைத்தையும் உரமாக மாற்றினான். பிச்சைக்காரன் என்ற நிலையில் இருந்து விடுபட்டு, ஒரு தொழில் செய்பவனாக மாறினான். பல ஆண்டுகள் கடந்து பின் மீண்டும் அந்த செல்வந்தனை ரயிலில் சந்திக்க நேர்ந்தது. ஒரு தொழிலை நடத்துவதற்கான வியாபார யுக்தி என்ன என்பதை தனக்கு உணர வைத்த செல்வந்தரை கட்டித்தழுவி நன்றி கூறினான் தற்போது தொழில் செய்து வரும் பிச்சைக்காரன்.
ஒரு தொழிலை தொடங்குவதற்கான மூலதனம் மக்களை ஆழமாக புரிந்து கொள்ளக்கூடிய சிந்தனையே!