
இந்தியாவில் பொதுமக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தான் முக்கியப் பங்காற்றுகின்றன. தனிநபர் கடன், தங்க நகைக் கடன், வீட்டுக் கடன், அடமானக் கடன், வாகனக் கடன் மற்றும் கல்விக் கடன் என பல்வேறு கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும், தனியார் வங்கிகள் தான் கடன் வழங்குவதில் அதிகளவில் விளம்பரம் செய்கின்றன. அதற்கேற்ற பலனும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
தனியார் வங்கிகள் உருவெடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் தனியார் வங்கிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் திட்டங்களின் மூலம் பெருமளவு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் தனியார் வங்கிகளின் கடன் வழங்கும் அளவும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கடன் வளர்ச்சியில் முன்னணியில் இருந்த பொதுத்துறை வங்கிகளைப் பின்னுக்குத் தள்ளின தனியார் வங்கிகள்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம், தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதற்கடுத்த நிதியாண்டிலேயே தனியார் வங்கிகள் முதலிடத்தைப் பிடித்து விட்டன. ஆண்டுதோறும் கடன் வளர்ச்சி விகிதம் தனியார் வங்கிகளுக்கு அதிகரிப்பதும், பொதுத்துறை வங்கிகளுக்கு குறைவதுமாகவே இருந்தது. குறிப்பாக 2016 இல் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சி 20% அதிகமாக இருந்தது. ஆனால் 2019 இல் உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.
ஊரடங்கு காலத்தில் தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது. அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு இடையேயான கடன் வளர்ச்சி விகிதம் ஒரு கட்டத்தில் சமநிலையைத் தொடும் அளவிற்கு வந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்னேற்றம் கண்ட பொதுத்துறை வங்கிகள், தற்போது தனியார் வங்கிகளை மிஞ்சி விட்டது.
கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 13.10%. அதேசமயம் தனியார் வங்கிகளுக்கு இந்த விகிதம் 9% ஆக இருந்தது. இரண்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 4% வேறுபாடு வந்து விட்டது. 2011 இல் பொதுத்துறை வங்கிகள் முன்னணியில் இருந்த போதும் கூட இதே அளவிலான வேறுபாடு தான் இருந்தது. அனைத்து வகையான கடன் பிரிவுகளிலும் பொதுத்துறை வங்கிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
2024-25 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.98.20 இலட்சம் கோடியையும், தனியார் வங்கிகள் ரூ.75.20 இலட்சம் கோடியையும் கடனாக வழங்கியுள்ளன. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து பொதுத்துறை வங்கிகள் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் வங்கிகள் சராசரியை விட அதிக இலாபத்தை ஈட்டினாலும், அதன் கடன் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. இது வங்கிகளின் பங்கு விலையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தனியார் வங்கிகளுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை தான், இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.