நாட்டின் பொருளாதார நிலை: ஏன் அனைவரும் கடன் வாங்குகிறார்கள்?

கடன் பட்டார் நெஞ்சம் போல்....
Loan
Loan
Published on

இன்றைய உலகில் எந்த அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் பல்கிப்பெருகி இருக்கிறதோ அதைவிட ஒரு படி அதிகமாகவே தனி மனிதன் வாழ்வதற்கான சிக்கல்களும், பிரச்சனைகளும் பெருகி வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், மாறிவரும் வரிவிதிப்பு முறைகள் எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை அகல பாதாளத்தில் தள்ளுகின்றன. அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கே கோடிக்கணக்கான மக்கள் கண் விழிபிதுங்கி போய் நிற்கின்றனர். இந்த நெருக்கடிகள் எல்லாம் ஒரு சாமானியனை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்றால் அதன் எல்லை கடனாகத்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டங்களில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கூட பார்க்க முடிகிறது. ஆனால், கடன் இல்லை என்று சொல்பவர்களை பார்க்க முடிவதில்லை.

மாதத்தின் முதல் தேதியில் ஓடத் தொடங்கும் ஓட்டம் மாதம் இறுதி வரை நிற்காமல் ஓடினாலும் கூட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதைத் தாண்டி எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகளும், அவசர செலவுகளும் ஒவ்வொருவருக்கும் பேரிடியாகவே இருக்கிறது. இதனால் எப்பொழுதும் ஒரு அச்சத்திலேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது. நாம் சந்திக்கும் சிலர் அரிதாக தாங்கள் சந்தோசமாக வாழ்வதாக கூறினாலும் கூட, அதற்கு அர்த்தம் அவர்கள் பொருளாதார சிக்கல் இல்லாமல் வாழ்கிறார்கள் என்பது இல்லை, அந்த பொருளாதார சிக்கல்களோடவே வாழ பழகி விட்டார்கள் என்பதே.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வரிச்சுமைகளால் மக்கள் ஒரு பொருளை வாங்க கொடுக்கும் பணத்தில் இருந்து ஒரு பங்கு தனியாக எடுத்து வரியாக செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஆதி காலத்தில் தோன்றிய மனிதன் தனது அடிப்படை தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வந்தான். அதன் பின்பு தன்னுடைய அறிவை பெருக்கிக் கொண்டு பல்வேறு வழிகளில் பணத்தை சேர்த்து சில சொத்துக்களை வாங்கி தனக்கென்று வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்ந்தான். ஆனால் இன்றைய காலகட்டங்களில் நம்முடைய வாழ்க்கை முறை கூட கிட்டத்தட்ட ஆதி மனிதனின் பொருளாதார நிலையை நோக்கி தான் செல்வது போல் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கடன் கொடுத்துவிட்டு மிரட்டும் ஆன்லைன் செயலிகள்: வேண்டாம் இந்த விபரீதம்!
Loan

ஏனெனில் இன்றைய காலகட்டங்களில் வாழும் அனைவரும் நமது அடிப்படைத் தேவைகளான இருக்க வீடு, உண்ண உணவு, உடுத்த உடை, குழந்தைகளுக்கு கல்வி, நமக்கான மருத்துவம் இந்த 5 தேவைகளை பூர்த்தி செய்வது கொள்வதற்காகவே நம் வாழ்க்கை முழுவதையும் பணயம் வைக்க வேண்டிய சூழல் உள்ளது. நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க இதில் கோடிக்கணக்கான மக்களை அவ்வப்போது பயத்தில் ஆழ்த்தக்கூடிய புது வகையான நோய்கள் வேறு பரப்பப்படுகின்றன. இதுவும் மனதளவில் ஒரு பதட்டமான சூழலையே உருவாக்குகிறது. சுற்றுப்புறம் அனைத்தும் மாசுபட்ட நிலையில் எத்தகைய சுகாதாரத்தை பேணிக்காத்து இதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்?

ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் கல்வி கற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதை அன்றைய காலகட்டங்களில் வாழ்ந்த அனைவரும் முழுமையாக உணர்ந்தனர். எட்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வி, இடைநிற்றல் இல்லா கல்வி, மதிய உணவு திட்டம் என பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக இன்று வீட்டுக்கு சராசரியாக 2 பட்டதாரிகள் இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. 50 காலி பணியிடங்களுக்கு 5,000 பேர் வரை விண்ணப்பிக்கும் நிலையில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இதுதான் இன்று நம் நாட்டின் பொருளாதார நிலை. மூன்றாவது வல்லரசாக உருவெடுக்கும், நான்காவது வல்லரசாக உருவெடுக்கும் என பல்வேறு தன்னம்பிக்கை பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாம் ஒரு சாமானியனின் வாழ்வாதாரம் உயரவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த நெருக்கடிகள் மனித குலத்தை எங்கு கொண்டு போய் நிறுத்தும்? என்பதை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஏற்றத்தாழ்வு வருமானம் உடையவரா நீங்கள்? கடன் வாங்கி உள்ளீர்களா? மீளுவது எப்படி?
Loan

அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் மக்கள் அவஸ்தைப்படும் நேரங்களில் அவர்களின் முதல் தேர்வாக இருப்பது கடன். ஏதோ ஒரு அவசரத்திற்காக கடனை வாங்கி சமாளித்து விடும் ஒரு சாமானியனுக்கு அந்தக் கடனை திருப்பி செலுத்துவதோ அல்லது அதற்குரிய வட்டியை செலுத்துவதோ இன்றைய காலகட்டங்களில் மிகவும் சவாலாக இருக்கிறது. இதையெல்லாம் விட மிகப்பெரிய நெருக்கடியாக அந்தக் கடனை சரியான நேரத்தில் கட்டாவிட்டால் அதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் வேறு. ஒவ்வொரு நாளும் காலையில் வெளியேறி மாலையில் வீடு அடையும் மனிதனின் மனம் முழுவதையும் பணமே ஆக்கிரமித்து இருக்கிறது. அடிப்படை செலவுகளையும் அவசர செலவுகளையும் சமாளிக்க முடியாமல் மக்கள் தட்டுத் தடுமாறி பல்வேறு இக்கட்டான சூழல்களில் சிக்கிக் கொள்கின்றனர். அதனால் அவர்கள் தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து விலகி தவறான பாதையில் செல்வதற்கான வடிகாலை இன்றைய பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தித் தருகிறது. மனிதன் சந்திக்கும் கடன் எனும் பெருஞ்சுமை தான் அவனை மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு மிருகமாக மாற்றுவதற்குரிய முதல் தூண்டுகோல்.

இத்தகைய கடன் பிரச்சனையால் ஒரு குடும்பத் தலைவரின் எண்ணம் முழுவதும் அந்த குடும்பத்தை நிர்வகிப்பதிலேயே இருக்கிறதே தவிர அதைத் தாண்டி பெரும்பாலான நேரங்களில் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை. இதனால் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத மனக்கசப்புகள், சண்டைகள் உருவாகி ஒரு கட்டத்தில் அது தற்கொலை என்ற இடத்தில் போய் முடிகிறது. நெருக்கடியான பொருளாதார நிலையால் ஒவ்வொருவரும் தாம்செய்யும் ஒவ்வொரு செயலையும் பணத்தை மையமாக வைத்தே செயல்படுத்த தொடங்குகின்றனர். இந்த மன ஓட்டம் மனிதர்களுக்கு பல நேரங்களில் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்த காத்திருக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் பல பொருள்களின் தரமற்ற தன்மைக்கு இந்த மனவோட்டம் தான் முதல் படி.

இதையும் படியுங்கள்:
கடன் வாங்கியவர் இறந்தால் என்ன ஆகும்? வங்கி என்ன செய்யும்? உஷார் மக்களே!
Loan

இத்தகைய ஸ்திரமில்லாத பொருளாதார சூழல் நாட்டு மக்களை கலாச்சார சீரழிவுக்கு இட்டுச்செல்லும் தூண்டுகோலாய் அமைகிறது. இதனால் மாணவர்களும் இளைஞர்களும் எந்த ஒரு கருத்தையும் வேரூன்றி ஆராயாமல் நுனிப்புல் மேயும் மனநிலையிலேயே கற்றுக் கொள்கின்றனர். கற்றலில் ஏற்படும் இத்தகைய குறைபாடுகள் பலமான அடித்தளம் இல்லாத பொருளாதார சிக்கல்களுக்கு தூண்டுகோலாய் அமைகின்றன. படிப்பு தான் முக்கியம் என்ற நிலையில் நிறுத்தப்பட வேண்டிய மாணவர்களின் எதிர்காலம் அந்தப் படிப்பை படிப்பதற்கும் பணம் தான் முக்கியம் என்ற நிலையில் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தால் ஏற்படும் இத்தகைய சிக்கல்களால் குடும்பம் குடும்பமாக இல்லை, பள்ளிகள் பள்ளிகளாக இல்லை, சமூகம் சமூகமாக இல்லை. எங்கும் பற்றாக்குறைகளும், பேராசைகளும், கொள்ளைகளும், குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றன. தனிமனித ஒழுக்கத்தில் தொடங்கும் இத்தகைய சிக்கல் மாபெரும் சங்கிலித் தொடராய் மாறி கலாச்சாரத்தையே கருவறுக்கும் பேரழிவுகளாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. அன்பும் அறனும் இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் பணம் நின்று கொண்டு மக்களைப் பைத்தியக்காரர்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
‘கடன் வாங்காதே… கருமியாய் இராதே… திருப்தியுடன் வாழ்!’
Loan

இருப்பதிலேயே மிகப்பெரிய துயரம் கடன் என கம்பர் சுட்டிக்காட்டிய "கடன் பட்டார் நெஞ்சம் போல" என்னும் வாக்கியத்திற்கு ஏற்ப இன்று ஒவ்வொருவரும் கடன் எனும் பெருஞ்சுமையில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் இந்த நிலை மாற வேண்டுமானால் அதற்கு புரட்சிகரமான சமுதாய மாற்றம் ஒன்றே தீர்வாக இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com