

சர்வதேச செலாவணி சந்தையில் அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டு மற்றும் யூரோ போன்றவை ஆதிக்கம் செலுத்தினாலும், பல தசாப்தங்களாக உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயமாக குவைத் தினார் (Kuwaiti Dinar - KWD) திகழ்கிறது. குவைத் தினார் 1961-இல் அறிமுகப் படுத்தப்பட்டது. அதற்கு முன்பு அங்கு 'வளைகுடா ரூபாய்' (Gulf Rupee) புழக்கத்தில் இருந்தது.
ஒரு தினார் என்பது 1000 பில்ஸ் (Fils)ஆக பிரிக்கப் பட்டுள்ளது. குவைத் பணத்தாள்கள் உயர்தர பாதுகாப்பம்சங்களுடன் அச்சிடப்படுகின்றன, இதனால் கள்ள நோட்டுகளை உருவாக்குவது மிகவும் கடினம்.
அமெரிக்க டாலரை விடவும் சுமார் 3 மடங்கு அதிக மதிப்புள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, ஒரு குவைத் தினாரின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 307 ரூபாய் ஆகும். அதாவது, குவைத்தில் ஒரு டீ குடித்தால் கூட அதன் மதிப்பு இந்திய மதிப்பில் மலைக்க வைக்கும் வகையில் இருக்கும். இவ்வளவு சிறிய நாடு, இவ்வளவு பெரிய பண மதிப்பைக் கொண்டிருப்பது எப்படி? அதன் பின்னால் உள்ள சுவாரஸ்யமான காரணங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.
1. கருப்பு தங்கம்:
அபரிமிதமான எண்ணெய் வளம் குவைத்தின் பொருளாதார பலத்திற்கு மிக முக்கிய காரணம் அதன் நிலப்பரப்பில் புதைந்துள்ள கச்சா எண்ணெய். உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 5% முதல் 7% வரை குவைத்தில் மட்டுமே உள்ளது. குவைத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக எண்ணெய் ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது. உலக நாடுகள் குவைத்திடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அதனால் குவைத்தின் பொருளாதாரம் வலுவாகிறது. இது அந்நாட்டின் கரன்சி மதிப்பை நிலையாக வைத்திருக்கிறது.
2. இறக்குமதி குறைவு, ஏற்றுமதி அதிகம்:
குவைத் ஒரு சிறிய நாடு. அதன் மக்கள் தொகை சுமார் 48 லட்சம் மட்டுமே. உள்நாட்டுத் தேவை மிகக் குறைவாக இருப்பதால், அவர்கள் உற்பத்தி செய்யும் எண்ணெயில் பெரும் பகுதியை ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் அந்நாட்டிற்குள் வெளிநாட்டுப் பணம் வெள்ளமென வந்து குவிகிறது. வர்த்தக உபரி (Trade Surplus) அதிகமாக இருக்கும்போது, அந்நாட்டின் நாணய மதிப்பு இயற்கையாகவே உயர்கிறது.
3. அந்நியச் செலாவணி கையிருப்பு:
குவைத் தனது எண்ணெய் வருமானத்தை 'குவைத் முதலீட்டு ஆணையம்' (Kuwait Investment Authority) என்ற உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய இறையாண்மை நிதி அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது. இது அந்நாட்டிற்கு ஒரு வலுவான நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இந்த நிதி கையிருப்பு குவைத் தினாரின் மதிப்பைக் குறையாமல் பாதுகாக்கிறது.
4. நிலையான நாணயக் கொள்கை:
குவைத் தினார் உலகளாவிய முக்கிய நாணயங்களின் தொகுப்போடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் ஏற்ற இறக்கங்களால் தினார் பாதிக்கப்படுவதில்லை. மேலும், குவைத்தில் தனிநபர் வருமான வரி கிடையாது. இது அந்நாட்டின் பணப்புழக்கம் மற்றும் சேமிப்புத்திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், குவைத்தின் குறைந்த மக்கள் தொகை, அபரிமிதமான எண்ணெய் வளம் மற்றும் புத்திசாலித்தனமான நிதி மேலாண்மை ஆகியவையே குவைத் தினாரை உலகின் 'ராஜா' நாணயமாக மாற்றியுள்ளது. அமெரிக்க டாலரை விடவும் சுமார் 3 மடங்கு அதிக மதிப்புள்ள இந்த நாணயம், அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடையாளமாகத் திகழ்கிறது.
எண்ணெய் வளம், நிலையான பொருளாதாரம், குறைந்த மக்கள் தொகை, மற்றும் வலுவான நாணய நிர்வாகம் போன்ற காரணங்களால் குவைத் தினார் உலகின் உயர்ந்த மதிப்புடைய நாணயமாக மாற்றியுள்ளது.