மருத்துவக் காப்பீடு என்பது நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும். அவசர காலங்களில் நமது உடல் நலம் மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கான முழு உத்திரவாதத்தை இது உறுதி செய்கிறது. எப்போதும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் நோய்களின் கணிக்க முடியாத தன்மை போன்றவற்றால், இந்தியாவில் ஒருவர் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.
நிதி பாதுகாப்பு: திடீரென ஏற்படும் பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைகளின் செலவைக் ஈடுகட்ட மருத்துவக் காப்பீடு உங்களுக்கு உதவுகிறது. எனவே, மோசமான தருணங்களில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை மருத்துவ பில்லாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் மருத்துவ செலவுகள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதால், ஒரு நல்ல மருத்துவக் காப்பீட்டை வைத்திருப்பது மிகவும் நல்லது. இது உங்களது சேமிப்பு வீணாகாமல் காப்பாற்றும்.
நோய்களை எதிர்த்து போராடலாம்: இப்போதெல்லாம் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பல விதமான நோய்கள் வருகின்றன. அதுவும் இந்த காலத்தில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளன. இத்தகைய நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி மோசமான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.
குடும்ப பாதுகாப்பு: குடும்பமாக இருப்பவர்கள் ஒரு குடும்ப மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசர காலத்தில் பெரிதளவில் உதவும். இந்த காப்பீடு மூலமாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சையளிக்க முடியும்.
தொழிலாளர் மருத்துவக் காப்பீடு: சில நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இது எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கி இருக்காது. அல்லது உங்கள் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்காமல் இருக்கலாம். திடீரென நீங்கள் வேலையை விட்டு நின்றுவிட்டால், அந்த மருத்துவக் காப்பீடு பயனற்றதாகிவிடும். நீங்கள் அந்த மருத்துவக் காப்பீட்டை சொந்த காப்பீடாக மாற்ற முடியும் என்றாலும், வேலையை விட்டு நின்ற பிறகு எந்த நிறுவனமும் உங்களுக்கு அதை செய்து கொடுக்க விரும்ப மாட்டார்கள். எனவே உங்களுக்கான சொந்த காப்பீடு எடுப்பது பாதுகாப்பானது.
மருத்துவ பணவீக்கம்: மருத்துவ பணவீக்கம் என்பது வருடத்திற்கு வருடம் 14 சதவீதம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்திற்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற பண வீக்கத்தை எதிர்த்து போராட மருத்துவக் காப்பீடு மிகவும் முக்கியமானது.
சேமிப்புகளைப் பாதுகாக்கலாம்: மருத்துவக் காப்பீடு இல்லாமல், திடீரென ஏதோ ஒரு அவசரநிலை காரணமாக மருத்துவமனையை நீங்கள் அணுகும்போது, அது உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கலாம். இதன் மூலமாக உங்களுடைய சேமிப்பும் காணாமல் போகும், அதேநேரம் சுகாதார செலவுக்காக நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக, எதிர்காலத்திலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே சுகாதார காப்பீட்டால் உங்களது நிதி பாதுகாக்கப்படுகிறது.
மருத்துவக் காப்பீட்டில் முதலீடு செய்வது உங்களது நல்வாழ்வு மற்றும் மன நிம்மதியில் முதலீடு செய்வதற்கு சமமாகும். எனவே இன்றே சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து, உங்களது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து மகிழ்ச்சியாக இருங்கள்.