பங்குச்சந்தை நேற்று (12.2.2024) வீழ்ச்சி அடைந்தது ஏன் தெரியுமா?

stock market...
stock market...

நேற்று (12.2.2024) பங்குச்சந்தை திடீரென வீழ்ச்சி பாதையில் சென்றது. பாம்பே பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு (SENSEX) நேற்று 523 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 71,072.49 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதாவது 0.73% வீழ்ச்சி. தேசியப் பங்குச்சந்தை நிப்டி குறியீடு (NIFTY) 166 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 21,616.05 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதாவது,  0.76% வீழ்ச்சி. பொதுவாகவே, பங்குச்சந்தை மந்தமாக நிலவியது.

கடந்த வியாழக்கிழமை, பாரத ரிஸர்வ் வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தினை (repo rate) அப்படியே தொடர்வது என்று முடிவு செய்தது. இந்த முடிவு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க உதவாது. நிறுவனங்கள் வளர்ச்சிக்கு கடன் பெறுவது எளிதாக இருக்காது. மேலும், நிறுவனங்களின் கடந்த காலாண்டு அறிக்கைகள் பெரிய அளவில் ஊக்கமூட்டுவதாக இல்லை.  நிறுவனங்களும் பெரிய ஊக்கமூட்டும் செய்திகளைப் பகிரவில்லை. மேலும், நடந்த இடைக்கால நிதியறிக்கையில்(interim budget), நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கும் பெரிய தகவல்கள் இல்லை.

பங்குச்சந்தை ஏற்கனவே சற்று மந்தமாக இருந்தாலும், இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது,  ஸ்மால் கேப்(small cap) எனப்படும் சிறிய சந்தை மதிப்பு உள்ள நிறுவனங்களும், அரசாங்க நிறுவனங்களும் (Public sector undertaking)தான். பங்குச்சந்தையானது தன்னை அவ்வப்போது சீரமைத்துக் கொள்வது (correction) என்பது ஒரு நிகழ்வு. அதிகமாக மதிப்பிடப்பட்ட சிறிய சந்தை நிறுவனங்களின் பங்குகள், முதலீட்டாளர்களால் குறைக்கப்பட்டன. இதுவரை ஏற்றத்தில் இருந்த, சிறிய சந்தை மதிப்பு நிறுவனங்கள், நேற்று பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. நடுத்தர (midcap) மற்றும் சிறிய மதிப்பு நிறுவனங்களின்(small cap) குறியீடுகள் 2% வீழ்ச்சி அடைந்தன. இதற்கு காரணமாக, பின்வரும் விஷயங்களைக் கூறலாம்.

பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன?

· விலையேற்றத்தைச் சந்தித்த சிறிய மதிப்பு நிறுவனப் பங்குகளை விற்று, அதன்மூலம், லாபம் ஈட்ட முதலீட்டாளர் முயன்றபோது, அதன் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

· அதிக சந்தை மதிப்புள்ள பெரிய நிறுவனங்களின்(large cap) பங்குகளுடன், விலையேற்றத்தினைச் சந்தித்த சிறிய நிறுவனப்(small cap) பங்குகள் ஓப்பிடப்பட்டு, சிறிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் பங்குச் சந்தையில் குறைக்கப்பட்டு, சந்தை தன்னை சீர்செய்துக் கொண்டது (correction).

· மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர்க்காலங்கள் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில், முதலீட்டாளர்கள் பெரிய நிறுவனங்களை நோக்கிச் செல்ல நினைக்கின்றனர்.

· பங்குச்சந்தையில் சிறிய நிறுவனங்கள் பெரிய அளவில் வாங்கி விற்கப்படாத காரணத்தினால், அவற்றின் வீழ்ச்சி அல்லது ஏற்றம் அதிகமாக இருக்கும். நேற்று வீழ்ச்சி நிகழ்ந்தது. 

இதையும் படியுங்கள்:
குளிர்கால மூட்டு வலியை சமாளிக்க உதவும் வீட்டு மூலிகைகள்!
stock market...

· சமீபத்திய இடைக்கால நிதியறிக்கையில் பெரிய அளவில் அரசாங்க நிறுவனங்கள்(PSU-public sector undertaking), அரசாங்க வங்கிகள் (PSU BANKS) போன்றவற்றிற்கு சலுகை இல்லாத காரணத்தினாலும், முதலீட்டாளர்களுக்கு அவற்றின் வளர்ச்சியில் நம்பிக்கை குறைந்ததாலும், அவை வீழ்ச்சியை சந்தித்தன. அரசாங்க வங்கி குறியீடு (PSU BANK INDEX), அரசாங்க நிறுவனங்களின் குறியீடு (BSE PSU INDEX) போன்றவை கிட்டத்தட்ட 4.5% வீழ்ச்சியை சந்தித்தன.

· புதிதாக நிறுவனங்கள் பங்குச்சந்தையில், ஐபிஓ (IPO - Initial Public offer) வாயிலாக நுழைவதால், முதலீட்டாளர்கள் கவனம் புதிய நிறுவனங்களை நோக்கித் திரும்பியுள்ளது.

stock market...
stock market...

பங்குச் சந்தையின் வீழ்ச்சி நமக்கு உணர்த்துவது என்ன?

ந்தப் பங்குச்சந்தையின் வீழ்ச்சி மூலம், நாம் நமது முதலீட்டின் பரவாக்கத்தின் (diversification) முக்கியத்துவத்தை அறியலாம். மேலும், பெரிய நிறுவனங்கள் பங்குகள் வீழ்ச்சி அடையாமல் இருப்பது, அவற்றின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. நமது, முதலீட்டுக் கலவையில் (portfolio) பெரிய நிறுவனங்களை நாம் அதிக அளவில் வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும், பங்குச்சந்தை நீண்ட கால குறிக்கோள்களுக்கு (long term goals) மட்டுமே, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு (short term goals) அல்ல என்பதை இந்த வீழ்ச்சி மறுபடி நமக்கு உணர்த்துகிறது.

பரவலாக்கத்தின் மூலமே, நம்மால் நமது முதலீடுகளின் நஷ்டத்தைக் குறைக்க முடியும். முதலீடுகளைப் பரவலாக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com