
கடன் நம் அனைவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இணைந்திருக்கிறது. மாதந்தோறும் தவறாமல் செலுத்தி வரும் கடன் தவணை (EMI) ஒரு மாதம் தவறுமானால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு தாக்கமளிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
ஒரு காலத்தில் மக்கள் கடன் வாங்கவே தயங்குவார்கள். ஏனென்றால் திருப்பி செலுத்த முடியாவிட்டால், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விடுவார்கள் என்றோ, வீட்டின் முன் கூச்சலிட்டு அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்றோ பலரும் கடன் என்ற வார்த்தையை நினைத்தே நடுங்குவார்கள். ஆனால் தற்போது டிஜிட்டல் உலகத்தில் கடன் என்பது கண் சிமிட்டும் நேரத்தில் கிடைத்துவிடுகிறது. இது ஆபத்து என்றாலும், எளிய மக்கள் பணத்தை எளிதில் பெற்றுவிடுகிறார்கள். அதனாலேயே கடனை திருப்பி வாங்குவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார்கள். நவீன கால மக்கள் பலருக்கும் கடன் இருப்பதை பெருமையாக கூறி வருகின்றனர்.
ஆனால், அப்படி கடனின் ஒரே ஒரு தவணையை தவறவிட்டாலும், அது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு பாதிப்பை உண்டாக்கும். வீடு, மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் உதவினாலும், அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
ஒரு வங்கியில் இருந்து பெறப்படும் கடன், உங்கள் சிபில் ஸ்கோர் அதாவது கிரெடிட் ஸ்கோரை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இது எத்தனை சதவீதம் இருக்கிறதோ அதை பொறுத்து தான் கடன் வழங்கப்படுகிறது.
கடனை செலுத்தத் தவறினால், கிரெடிட் ஸ்கோர் குறையும். மேலும், EMI தவறியது உங்கள் நம்பகத்தன்மையை குறைக்கும். கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவதால், புதிய கடன்கள் வாங்க இயலாது. ஒவ்வொரு தவணை தவறும் நிகழ்வும் உங்கள் கிரெடிட் ஸ்டேட்மெண்டில் 7 வருடங்கள் பதிவாகும்.
கிரெடிட் ஸ்கோரை மீட்டெடுப்பது:
கிரெடிட் ஸ்டேட்மெண்ட் பார்க்கவும்: தவணை தவறிய விவரங்களை ஆராய்ந்து, பிழைகள் இருந்தால் கிரெடிட் பியூரோவிடம் புகார் அளிக்கவும்.
புதிய நம்பகமான வரலாறு உருவாக்கவும்: Secured credit card, gold loan, FD loan போன்ற பாதுகாக்கப்பட்ட கடன்கள் மூலம் நம்பகத்தன்மையை மீண்டும் நிரூபிக்கவும்.
தவணைகள் நேரத்தில் செலுத்தவும்: அனைத்து EMI, கிரெடிட் கார்டு கட்டணங்கள், பில்களை சரியான நேரத்தில் செலுத்தவும்.
ஒரே நேரத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிக்காதீர்கள்: ஒவ்வொரு விண்ணப்பமும் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும்.
தகுதி உள்ள திட்டங்களுக்கு மட்டும் முயற்சி செய்யவும்: கிரெடிட் ஸ்கோருக்கு பொருந்திய பாதுகாக்கப்பட்ட கடன்களை தேடுவது நல்லது.
நிதி ஒழுக்கம் தேவை:
செலவுகளை திட்டமிடுங்கள், தவணைகளை தவறாமல் செலுத்துங்கள், கிரெடிட் ஸ்டேட்மெண்டை கவனமாகப் பாருங்கள், சந்தேகம் இருந்தால் நிதி ஆலோசகரை அணுகுங்கள்.
கிரெடிட் ஸ்கோர் எப்படி செக் செய்வது?
உங்கள் போன் பே அல்லது கூகுள் பேவிலேயே இதற்கான ஆப்ஷன் வந்துவிட்டது. அதை க்ளிக் செய்து விட்டாலே உங்களுக்கான சதவீதம் தெரிந்துவிடும். இன்னும் எளிய மக்கள் அதில் உள்ள நிறத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிறத்தை வைத்து புரிந்து கொள்ள முடியும்.