
செப்டம்பர் -15ல் மார்க் ஆண்டணி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால் "கடவுள் விஷயத்தில் ஒருபோதும் விளையாடக் கூடாது.படப்பிடிப்பு நடத்தும்போது அதற்கான நெறிமுறையை கடைபிடித்து செய்யவேண்டும். இந்த படத்தில் கருப்பண்ணசாமி சிலை முன்பாக ஒரு பக்கம் பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்காக கருப்பண்ணசாமியின் முகத்தை பெயிண்டர் வரைந்து முடிக்கும் முன்பே கீழே விழுந்து விட்டார்.
அதேபோல முதல் நாள், அடுத்த நாள் என படப்பிடிப்பை தொடங்கியதுமே மழை இடைவிடாமல் பெய்ததால் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு கருப்பண்ணசாமிக்கு செய்ய வேண்டிய சுருட்டு, சாராயம், கறிசோறு என படையல் வைத்து அவரை வழிபட்டு விட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.
படப்பிடிப்பின் ஐந்தாவது நாளன்று சாப்பாட்டில் ஒரு முடி இருந்தது என படக்குழுவினர் ஒருவர் வந்து சொன்னபோது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
ஐந்து நிமிடம் கழித்து உணர்வு வந்தபோது அங்கிருந்த அனைவருமே என்னை வித்தியாசமாக பார்த்தனர். இயக்குனர் ஆதிக்கிடம் கேட்டபோது “ அந்த நேரத்தில் நீங்க நீங்களாவே இல்லை” என்று கூறியபோது என்ன்னுள் சாமி வந்து இறங்கியதாக உணர்கிறேன். சண்டக்கோழி படத்தில் நடித்தபோது ராஜ்கிரண் சாருக்கு கூட அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதை பார்த்துள்ளேன்'' என நடிகர் விஷால் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.