அரபிக்குத்து பாடல் வெளியாகி ஒரு வருடம் நிறைவு

அரபிக்குத்து பாடல் வெளியாகி ஒரு வருடம் நிறைவு

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். முதல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த வெற்றி கோலிவுட்டில் அனைவரையும் நெல்சன் திலீப்குமார் பக்கம் திருப்பியது. அதன் பலனாக முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஃப்ரெஷ்ஷான இயக்குநர், டார்க் காமெடியில் அதகளம் செய்பவர் என்பதால் இந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருந்தனர். அதற்கேற்றபடி படத்துக்கு பீஸ்ட் என்றும் பெயரிடப்பட்டது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக “அரபிக் குத்து” பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலானது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 13ம் தேதி ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு வெளியான பீஸ்ட் திரைப்படம், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை துளிகூட நிறைவேற்றவில்லை. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து பலரும் நெல்சனை கடுமையாக விமர்சித்தனர்.

படம் படுதோல்வியடைந்தாலும் விஜய் நடிக்கும் படத்தின் பாடல்கள் எப்படி ஹிட்டாகுமோ அதேபோல் பீஸ்ட் படத்தின் பாடல்களும் ஹிட்டாகின. படத்தில் இடம்பெற்ற பாடல்களிலேயே அரபிக்குத்து பாடல் சென்சேஷனல் ஹிட்டானது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது.

இந்நிலையில் இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஹாஷ்டாக் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com