‘’பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்’’: நடிகை சமந்தா!

‘’பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்’’: நடிகை சமந்தா!

-ஜி.எஸ்.எஸ்.

நடிகை சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'ஒருபோதும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்' என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் 'பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?' என்று சமந்தாவிடம் கேட்க, 'ஒருபோதும் பச்சை குத்திக் கொள்ள வேண்டாம் என்றுதான்  நானே எனக்குக்  கூறிக் கொள்வேன்.  நீங்களும் கூட ஒருபோதும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்' என்று பதில் சொல்லியிருக்கிறார்.

சமந்தா தன் உடலில் மூன்று இடங்களில் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா பெயரை பச்சை குத்திக் கொண்டவர்தான். ஒருவேளை அந்தக் கசப்புணர்வில்கூட அவர் தன் ரசிகர்களை எச்சரிக்கிறாரோ என்னவோ!   ஆனால் சினிமாவுலகில் பல நட்சத்திரங்கள் பச்சை குத்தியுள்ளனர்.

'சினிமா பைத்தியம்' என்ற படத்தில் நடிகர் ஜெய்சங்கரின் பரம விசிறியான ஜெயசித்ரா,  தன் கையில் ஜெய் என்று பச்சை குத்திக் கொண்டிருப்பார்.  அவரது திரை சாகசங்களை எல்லாம் நிஜமென்று நம்புவார்.  பின் உண்மையை உணர்ந்து கமலஹாசனைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக கொள்ளிக் கட்டையால் பச்சை குத்திய தனது கைப்பகுதியை எரித்துக் கொள்ள முயல்வார்.

அதேபோல அரசியலிலும் ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை எம்ஜிஆர் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணாவின் உருவத்தை கையில் பச்சைகுத்திக் கொள்ள வேண்டும் என்று கூற, அதிமுக-வினர் பலர் தங்கள் கட்சி விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் அண்ணா உருவத்தை தம் கையில் பச்சை குத்திக் கொண்டனர்.  பின்னர் அவர்களில் சிலர் வேறு கட்சிக்கு மாறிய போதுதான் சோதனை.. கையில் பச்சை குத்தியதை மறைக்க, முழுக்கை சட்டை அணிய வேண்டியதாகி விட்டது.

காதலர்கள் ஒருவருக்கொருவர் பச்சை குத்திக் கொள்வது பேரன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. (தன்னைத் தவிர வேறு ஒருவரை அவர் விரும்பவில்லை என்பதற்கான சான்று). பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற தனது பெயரை கார்த்தி தன் மார்பில் பச்சை கொண்டிருப்பதைப் பார்த்ததும் ப்ரியா மணி புளகாங்கிதம் அடைவார்.

இப்போதெல்லாம் சிலரது உடல்களில் பச்சை குத்தப்பட்ட இடங்கள் பச்சை குத்தாத இடங்களை விட அதிகமாக இருக்கிறது!   டிராகன், பறவைக்கூட்டம், ரோஜா,  தனக்கு விருப்பமானவரின் பெயர் ஆகியவை பச்சை குத்துதலில் அதிகம் இடம் பெறுகின்றன.

பச்சை குத்திக் கொள்ளும் இள வயதினர் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.  டீன் ஏஜில் உள்ள ரசனைகள் போகப்போக மாறக்கூடும்.  காதலர் அல்லது காதலியின் பெயரை பச்சை குத்திக்கொண்ட பிறகு வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி நேர்ந்தால் என்னாகும்?  ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் தன் கையில் பிரபு(தேவா) என்று பச்சை குத்திக் கொண்டிருந்ததை நயன்தாரா வெளிப்படுத்தியது நினைவுக்கு வருகிறது.

பச்சை குத்துவது என்பது இந்தியாவில் காலம் காலமாக இருந்து வருவதுதான்.  ஒருவிதத்தில் நகைகளைப் போல இவை பயன்பட்டிருக்கின்றன.  கழுத்தில் சங்கிலியைப் போல, கைகளில் வளையல்களைப் போல என்றெல்லாம் பச்சை குத்திக்கொள்வது வழக்கமாக இருந்தது.  தவிர எந்த வகை பச்சை குத்தப்பட்டு இருக்கிறது என்பதைக் கொண்டு அவர்களது சமூகம்,  ஜாதி போன்றவற்றையும் கண்டுபிடித்துவிடலாம்.  ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு வகைப் பச்சை.

மேற்கு வங்கத்திலும் ஜார்க்கண்டிலும் முன்கைகளில் – முக்கியமாக மணிக்கட்டுகளில் – பச்சை குத்திக் கொள்வது வழக்கம்.  சாந்தளா என்ற இனத்தவர்கள் தவறாமல் பச்சை குத்திக் கொள்வார்கள்.  இவற்றில் உள்ள வரிகள்  ஒற்றைப்படை எண்ணில் அமைந்தவையாக இருக்கும்.  இரட்டைப்படை என்பது இறப்பைக் குறிக்கிறது என்பது இவர்களது நம்பிக்கை.  பெண்களைப் பொறுத்தவரை முகங்களில் கூடப் பச்சை குத்திக் கொள்வார்கள்.   பச்சை குத்துவதை தாங்கிக்கொள்ளும் பெண்கள் பிரசவத்தின் போதும் வலியை எளிதாக தாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இவர்களிடையே நிலவுகிறது.

தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் குறவர் ​சமூகத்தினர்தான்  பச்சை குத்தும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.  தோடர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கைகள்,  காலின் ஆடுகால் சதை, முகவாய் போன்றவற்றிலெல்லாம் பச்சை குத்திக் கொள்வது வழக்கம்.

குஜராத்தில் மணப்பெண்ணாக ஆக இருப்பவர்களுக்கு பச்சை குத்த வேண்டும் என்ற எண்ணம்  அங்குள்ள மலைவாழ் இனத்தவருக்கிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.  பாம்பு போன்ற உருவங்களை எல்லாம் தங்கள் முகங்களிலும் தொடைகளிலும் கழுத்துக்களிலும் பெண்கள் பச்சை குத்திக் கொள்ள, தங்கள் வலது உள்ளங்கையின் பின்புறம் ஒட்டகத்தின் உருவத்தை பச்சை குத்திக்கொள்வது ஆண்களுக்கு வழக்கமாக இருந்தது.

அது சரி.. சமந்தாவின் ஆலோசனை ஒருபுறமிருக்க, மருத்துவ ஆலோசனை எப்படி? 

பச்சை குத்துபவரின் கையில் உள்ள கருவி, ஒரு தையல் இயந்திரத்தைப் போல செயல்படுகிறது.  அது  மீண்டும் மீண்டும் தோலில் ஊசியைக் குத்தி வர்ணத்தை வைக்கிறது.  ஒவ்வொரு முறை குத்தும்போதும் அந்த ஊசி மிக மெல்லிய படலமாக சாயத்தை அங்கே படர விடுகிறது.  இந்தச் செயல்முறையில் ஓரளவு ரத்தம் வெளியேறலாம்.  கணிசமான வலி இருக்கும். எங்கெல்லாம் தோல் குத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தோல் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

தவிர பச்சை குத்தும் போது பலவித சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  இதனால் அரிப்பு உணர்வு ஏற்படலாம்.  சிலருக்கு பச்சை குத்திய சில வருடங்களுக்குப் பிறகு கூட அந்த அரிப்பு உணர்வு தொடரக் கூடும்.

பச்சை குத்துதல், கீலாய்டு என்ற நிலையை ஏற்படுத்தலாம். அதாவது அந்த பகுதியில் தோல் கருப்பாகவும் புடைத்தும் காட்சியளிக்கலாம். பச்சை குத்தும் கருவியை சரியாக கிருமிநீக்கம் செய்யவில்லை என்றால் அதில் தொற்று கிருமிகள் உள்ள ரத்தம் அடுத்து பச்சை குத்துபவர்கள் உடலுக்குள் புகுந்து ரத்தம் தொடர்பான நோய்களை உண்டாக்கலாம். முக்கியமாக இதனால் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.        பச்சை குத்திக்கொண்ட பிறகு ஒருவரின் எடை வேகமாக கூடினால் அது பச்சையிடப்பட்ட உருவத்தின் தோற்றத்தை மாற்றி அமைத்து விடலாம்.

இதற்கென்று முறையாகப் பயிற்சி பெற்றவர்தான் பச்சை குத்துகிறாரா?  பச்சை குத்தும்போது கையுறை அணிகிறாரா?  பச்சை குத்தும் கருவி சரியாக ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டிருக்கிறதா?  போன்றவற்றை உறுதி செய்து கொ​ள்ளுங்கள்.

பச்சை குத்திய இடம் முழுவதுமாக ஆறும் வரை நதிகள், ஏரிகள் மற்றும் நீச்சல் குளங்களில் குளிப்பதை நிறுத்துங்கள்.  பச்சை குத்திய இடத்தில் ஒட்டிக் கொள்ளும் படியான உடைகளை அணியவேண்டாம்.  பச்சை குத்திய இடம் ஆறுவதற்கு பொதுவாக இரண்டு வாரங்கள் ஆகும். அதுவரை மாய்ஸ்சரைசரை பலமுறை அந்த இடத்தின் மீது தடவலாம்.  நேரடியாக சூரிய ஒளி அப் பகுதி மீது படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வாமை உண்டானாலோ தொடர்ந்து அரிப்பு உணர்வு ஏற்பட்டாலோ மருத்துவ ஆலோசனை செய்யுங்கள்.

ஏற்கனவே குத்தப்பட்ட பச்சையை நீக்க வேண்டுமானால் மருத்துவரை அணுகுங்கள்.  லேசர் அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com