டிவி சீரியல்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? - இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி

டிவி சீரியல்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? - இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி

பொங்கல் பண்டிகையையொட்டி சமீபத்தில் வெளியான விஜயின் ‘வாரிசு’ படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், படத்தின் மீதான சில விமர்சனங்களால் இயக்குனர் வம்சி பெரும் அதிருப்தியில் உள்ளார்.

தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘வாரிசு’ படம், விஜயின் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக இருக்கிறது. இதன் காரணமாக வாரிசு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். சமீபத்தில் படத்தின் வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது.

வாரிசு படம் வசூலில் வெற்றிப்பெற்றாலும், விமர்சன ரீதியாக தோல்வியடைந்து உள்ளது. இயக்குநர் வம்சி அரைத்த மாவையே அரைத்து வைத்திருப்பதாகவும், இந்தி டிவி சீரியலை தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்திருப்பது போல உள்ளதாகவும் பலரும் பதிவிட்டனர்.

தொடக்கம் முதலே இப்படியான விமர்சனங்களை கேட்டு வரும் இயக்குநர் வம்சி இது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், படத்தின் சில ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பேசினார்.

வாரிசு திரைப்படம் தொலைக்காட்சி சீரியல் போல் உள்ளதாக சிலர் சொல்லுகிறார்களே என்று அவரிடம் கேட்டபோது,

நான் படம் எடுப்பது விமர்சகர்களுக்காக அல்ல, ரசிகர்களுக்காக திரைப்படங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “விமர்சகர்களை நான் அவமரியாதை செய்வதில்லை. ஆனால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நான் திரைப்படம் எடுப்பது விமர்சகர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. நான் பார்வையாளர்களுக்காக திரைப்படங்களை இயக்குகிறேன். நான் கமர்ஷியல் படங்கள் எடுக்க வந்திருக்கேன். விமர்சகர்களின் கருத்துக்கள் அவர்களின் சொந்த கருத்து.

வாரிசு படம் வெளியான போது சத்யம் திரையரங்கில், இரவு 8.30 மணிக்கு பிரீமியர் காட்சியை வைத்தோம். ‘எந்த குடும்பமும் சரியில்லை’ என்ற டயலாக்குடன் படம் முடிந்ததும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அதன்பிறகு கோயம்பேட்டிலுள்ள ரோகினி தியேட்டருக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்றோம். ரசிகர்கள் படத்தைப் பார்க்க உற்சாக மிகுதியில் இருந்தார்கள். எங்களைப் பார்த்தும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் நானும் தமனும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம். இவர்கள் தான் எனது ரசிகர்கள். அதனால்தான் நான் திரைப்படங்கள் எடுக்கிறேன்.

என்னுடைய படங்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டு, விமர்சிக்கப்பட்டன. மகரிஷியைப் பார்த்ததும் ஏதோ சொன்னார்கள். ஆனால் படம் தேசிய விருதை வென்றது. ஒரு படத்தை வெளியிடுவதற்கு முன்பே அதன் போஸ்டரை வைத்து மதிப்பிடும் போக்கையும் சுட்டிக்காட்டிய வம்சி “முதலில் படம் பார்க்கப் போ, இல்லையா? வெளியே வரட்டும். பாருங்கள், ரசியுங்கள்.

இப்போதெல்லாம் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஒரு படத்தைத் தயாரிக்கவும், அதைச் வெளியிடவும் எத்தனை குழுக்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? பொழுதுபோக்கிற்காக மக்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் தெரியுமா? இது நகைச்சுவையல்ல. ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் பல தியாகங்களைச் செய்கிறார்கள். ஒவ்வொரு முன்னணி நடிகருக்கும் எத்தனையோ தியாகங்கள் இருக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் தளபதி விஜய்யும் ஒருவர். ஒரு படத்துக்கு அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் தெரியுமா? ஒவ்வொரு பாடலையும் பலமுறை ஒத்திகை பார்த்து, ஒவ்வொரு டயலாக்கை பல விதங்களில் பேசி பயிற்சி செய்கிறார். முயற்சிகள் மட்டுமே நம் கையில் உள்ளது. முடிவுகள் எங்கள் கைகளில் இல்லை.

வாரிசுக்கும் டிவி சீரியலுக்கும் உள்ள ஒப்பீடு பற்றி அதிகம் பேசிய பைடிப்பள்ளி,

ஏன் டிவி சீரியல்களை கேவலப்படுத்துகிறீர்கள்? எத்தனை பேரை சீரியல்கள் மயக்கி வைத்திருக்கிறது தெரியுமா? வீட்டில் போய்ப் பாருங்கள். உங்கள் அம்மாக்களும் பாட்டிகளும் சீரியல்களால் மயங்கி ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

எதையும் தரம் தாழ்த்தாதே. அதுவும் ஆக்கப்பூர்வமான வேலைதான். நீங்கள் மக்களை வீழ்த்த விரும்பினால், தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களைத் தாழ்த்துகிறீர்கள். மிகவும் எதிர்மறையாக இருக்க வேண்டாம். அது உங்களை உள்ளே இருந்து சாப்பிட ஆரம்பிக்கும்.

இவ்வாறு வாரிசு இயக்குநர் வம்சி பத்திரிக்கை பேட்டியில் தம் கருத்தை தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com