சாகுந்தலம் - விமர்சனம்

புராணக் கதைகளை மைய்யப்படுத்தி இந்திய சினிமாக்களில் திரைப்படங்கள் வருவது குறைவு. இந்தக் குறையைப் போக்கும் படமாக வந்துள்ளது சாகுந்தலம்.
மகாகவி காளிதாஸ் எழுதிய சாகுந்தலம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது. குண சேகர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். தில் ராஜு வெளியிட்டு உள்ளார்.
நமக்கு நன்றாகவே தெரிந்த இந்தக் கதையை வெகு அழகான கோணத்தில், நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் டைரக்டர். படத்தில் பல இடங்களில் வேத மந்திரங்கள் முழங்கிக்கொண்டே இருக்கிறது. கன்வ மகரிஷியின் ஆசிரமம் பார்ப்பதற்குத் தெய்வீகமாக உள்ளது. சில இடங்களில் கிராபிக்ஸ் தனியாகத் தெரிவது குறைதான். ஆசிரமத்தில் இருந்து படகின் வாயிலாக நகரம் நோக்கி செல்லும் காட்சி காண்பதற்கு ரம்மியமாக உள்ளது.
காதலிக்கும்போதும், காதல் உடையும்போதும் கர்ப்பவதியாகத் தவிக்கும்போதும் சமந்தா நடிப்பில் அடடா என்று சொல்ல வைக்கிறார். துஷ்யந்த மகாராஜாவாக தேவ் மோகன் பொருந்தி போகிறார். கண்களில் தீட்சண்யம், கருணை என கன்வ மகரிஷியாக சச்சின் கேடேகர் படத்துக்கு வலிமை சேர்க்கிறார். கபிர் பேடி ஆஜானுபாகு தோற்றத்தில் காஷ்யப முனிவராக நன்றாக ஸ்கோர் செய்கிறார். துர்வாசரின் க்கண்களில் கக்குகிறார் மோகன் பாபு.
மணி சர்மாவின் இசை, ஜோசப். V. சேகரின் ஒளிப்பதிவு, அசோக் குமாரின் ஆர்ட் டைரக்ஷன் அனைத்தும் இணைந்து ஒரு அற்புதமான விஸுவல் டிரீட்டாக சகுந்தலையை தந்துள்ளார்கள்.
நம் பாரத தேசத்தை உருவாக்கியதில் ரிஷிகளின் பங்களிப்பு இருந்ததாக சொல்கிறார்கள். இதை இந்த படம் ஓரளவு உணர்த்துகிறது. பல யாகங்கள் செய்வதை விட ஒரு மகளை வளர்ப்பது மேன்மையானது என்ற ரிஷி சொல்லும் வசனம் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
இந்தப் படம் காதல் என்பதையும் தாண்டி பண்டைய இந்திய கலாசாரத்தைப் பற்றி பேசுகிறது. நம் கலாசார வேர்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தப் படத்தைப் பாருங்கள்
சாகுந்தலம்-காதலின் அழகியல்.